முரசொலியில் (22.12.2010) கலைஞர் எழுதிய கடிதம் வருமாறு: ஜெயலலிதா 20.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் - இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராஜா மூலமாக இமாலய ஊழல் புரிந்து சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து சி.பி.அய். விசாரணை, அமலாக்கப் பிரிவு விசாரணை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடைபெறவிருக்கிறது. தணிக்கைத் துறை அறிக்கையிலேயே மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று குறிப்பிட்டுள்ளதை ஜெய லலிதா எடுத்துக்காட்டி, அந்த 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக கூறுகிறார். அந்தத் துறையின் அமைச்சராக இருந்த திரு. அருண்ஷோரி அவர்களே 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடக்கவில்லை, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்புதான் ஏற்பட்டுள்ளது என்கிறார். அந்த தணிக்கைக் குழு அறிக்கையிலேயே உள்ள ஒரு வாசகம் --“Any loss ascertained while attempting to value the spectrum can only be ‘presumptive’..........” என்றுள்ளது. அதாவது, அலைவரிசையின் மதிப்பைக் கணக்கிட்டு அதனால் ஏதாவது இழப்பு என்று சொல்லப்படுவது அனுமானத்தின் அடிப்படையிலே மட்டும் சொல்லப்படு வதாகும். இந்த இழப்புக்கு உண்மையிலேயே யாராவது காரணமா என்பது விசாரணையின் முடிவிலேதான் தெரியும். தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலே கூறப்பட்டுவிட்டது என்றால், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவரது ஆட்சியிலே நடைபெற்ற தவறுகளைப் பற்றி தணிக்கை அதிகாரி சொன்னது என்ன? நான் இதைப்பற்றி முன்பே எழுதியிருக்கிறேன் என்ற போதிலும் மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்ட தணிக்கை அதிகாரி யின் அறிக்கை ஒன்று இந்து நாளிதழ் உட்பட அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. 3.8.2004 தேதியிட்ட இந்து நாளிதழ் பக்கம் 5இல் “Short levy / audit report for 2003 – 2004’’ / Rs. 1033/- crore potential Revenue loss” என்ற தலைப்பில், The State Government (விலை குறைவாக நிர்ணயம் செய்தது பற்றிய 2003-2004 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை / 1033 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்ற தலைப்பில் முறையாக வரிகள் விதிக் கப்படாததன் காரணமாக 2003/2004ஆம் ஆண்டில் மாநில அரசுக்கு 1033 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் அரசு நிருவாகத்தின்கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மூலமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செலவுகள் என்ற வகையில் மட்டும் மாநில அரசுக்கு 3681 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்தப் புள்ளிவிவரங்களை வழங் கிய தமிழ்நாடு தலைமை கணக்காயர் திரு. டி.தீத்தன் அவர்கள் முறையாக வரிகள் விதிக்காததன் காரணமாகவும், வீணான செலவுகளின் காரணமாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 2002/2003ஆம் ஆண்டில் 2982 கோடி ரூபாய்; 2001/2002ஆம் ஆண்டில் 3930 கோடி ரூபாய்; 2000/2001ஆம் ஆண்டில் 2621 கோடி ரூபாய்; 1999/2000ஆம் ஆண்டில் 1901 கோடி ரூபாய் என்று செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்......... 1.75 இலட்சம் டன் நெல்லை அதிகப்படியாக கொள்முதல் செய்ததன் காரணமாக 61 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சரியாக திட்டமிடாததாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவையான அளவுக்கு இல்லாததாலும், தவறான விலை கொள்கையாலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 17 திட்டங்களில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள 18,755 மனைகள் விற்பனையாகாமல் உள்ளன) ஜெயலலிதா பற்றி தணிக்கை அதிகாரி இது மாத்திரமல்ல, அதே நாளைய இந்து முதலமைச்சராக இருந்த ஜெயாவின் துறையைப் பற்றி தணிக்கை அதிகாரி கூறிய செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதில்,“The Comptroller and Auditor General of India (CAG) has criticized the Tamil Nadu Home Department for not following open tender system in purchase of tents for the police. Though the rates quoted by ordinance factories were higher than open market prices, orders were still placed with them resulting in an extra expenditure, the CAG said in his report for the year ended March 2003 placed in the Legislature.”. (தலைமைக் கணக்காயர் காவல் துறைக்கு டெண்ட்கள் (கூடாரங்கள்) வாங்குவதற்கு திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றாததன் காரணமாக உள்துறையை கடுமையாகச் சாடினார். வெளிச் சந்தை விலையைவிட துப்பாக்கி தொழிற்சாலைகள் கொடுத்த விலைப்புள்ளி கூடுதலாக இருந்த போதிலும், டெண்டுகள் அந்தத் தொழிற்சாலைகளிடமிருந்தே வாங்கப்பட்டன. இதன் காரணமாக அதிகச் செலவு ஏற்பட் டுள்ளது.) இவ்வாறு தொடங்கி இந்து தணிக்கை துறை அதிகாரியின் அறிக்கையையும், அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட தகவல்களையும் விரிவாக வெளியிட்டுள்ளது. அதே செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்த போதி லும், தமிழ் நாளேடு ஒன்று வெளியிட்ட தலைப்பே, ஆடிட்டர் ஜெனரல் ஆதாரத்துடன் பேட்டி - ஜெ. ஆட்சியில் ரூ. 11 ஆயிரம் கோடி இழப்பு - மந்திரி, அதிகாரிகளை அடிக்கடி பந்தாடியதால் நிருவாகம் சீர்குலைந்தது - மத்திய அரசின் மலிவு விலை அரிசி வாங்காததால் ரூ. 66 கோடி நட்டம் - 46 திட்டங்கள் தொடங்கா மலேயே ரூ. 3500 கோடி திரும்ப ஒப்படைப்பு என்பதாகும். அந்தத் தலைப்பைத் தொடர்ந்து விரிவாக எவ்வாறெல்லாம் தவறுகள் நடை பெற்றன என்று தணிக்கை அறிக்கையிலே எழுதப்பட்டிருந்ததையும், அதைப் பற்றி தணிக்கைத் துறை அதிகாரி அளித்த பேட்டியையும் வெளியிட்டிருந்தது. ஜெயலலிதா என்ன செய்தார்? இந்தச் செய்திகளையெல்லாம் பார்த்ததும் முதலமைச்சராக அப்போது இருந்த ஜெயலலிதா என்ன செய்தார்? இப்போது தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையிலே வருவாய் இழப்பு என்று வந்தவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும், அதுவரை ஓய மாட்டோம், அந்தத் துறையின் அமைச்சராக இருந்த இராசாவை கைது செய்ய வேண்டும், அதற்காக புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் அறிக்கை விடுகின்ற ஜெயலலிதா அப்போது என்ன செய்தார்? தணிக்கைத் துறை அறிக்கையே இவ்வாறு வெளியிட்டுவிட்டது, இதோ நான் பதவியை ராஜினாமா செய்கிறேன், ராஜினாமா செய் தால் மட்டும் போதாது, என்னை நானே கைது செய்து கொள்கி றேன், என் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றெல்லாம் சொன்னாரா? கிடையாது. என்ன செய்தார் தெரியுமா? மாமியார் உடைத்த மண் சட்டி இவ்வாறு தமிழ்நாட்டிலுள்ள தணிக்கை அதிகாரி செய்தியா ளர்களிடம் கூறியது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளதாகவும், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுபோன்று எப்போதும் நடந்த தில்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு முரணானது என்றும் எடுத்துக்கூறி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு முழுப் பக்க அறிக்கையினை - சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு அப்போது வெளியிட்டார். தணிக்கை அதிகாரிக்குப் பதில் கூறி, முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான அந்த அறிக்கை அரசின் சார்பாக ஒரு முழுப் பக்க விளம்பரமாகவே அனைத்து ஏடு களிலும் வெளியிடப்பட்டது. தமிழகத்திலும், வட இந்தியாவிலும் வெளிவந்துள்ள ஜெயலலிதாவின் இந்த முழுப் பக்க விளம்பரத் திற்காக மட்டும் தமிழக மக்களின் வரிப்பணம் 1 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 100 ரூபாய் அப்போது செலவிடப்பட்டது. ஜெயலலிதா வெளியிட்ட அந்தப் பதில் அறிக்கையில், தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவரின் 2002-2003-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெகு அண்மையில்தான் - 2004 ஜூலையில் தமிழ்நாடு சட்டப் பேரவை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை உரிய கால முறையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொதுக் கணக்குக் குழுவில் விவாதிக் கப்படும். இந்த அறிக்கையில் கடுமையான முறைகேடு எதுவும் சுட்டிக் காட்டப்படவில்லை. சில பொருள்கள் மீது இந்தியத் தணிக்கைத் துறைத்தலைவரின் கருத்தறிவிப்புகளை மட்டும் தான் இந்த அறிக்கை கொண்டுள்ளது. அதைப்பற்றி பொதுக்கணக்குக் குழுவால் உரிய காலமுறையில் விரிவாக விவாதிக்கப் படும். இந்தியத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை மீது பொது கணக்குக் குழு தனது பணியினை முடித்த பின்னரே , இது முழுமை அடையும். .......இவ்வாறு பல நிகழ்வுகளில் கூறப்பட்டிருக்கின்ற இழப்பானது, வெறும் கருத்தியலான இழப்பு என்பதை தணிக்கை துறை தலைவரின் அறிக்கையே சுட்டிக் காட்டுகிறது. ஆகவே இந்த விஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு விட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதும் சற்றும் முறை யானதல்ல. ஜெயலலிதா ஆட்சியிலே நடைபெற்ற முறைகேடுகளைப் பற்றி தணிக்கைத் துறை அதிகாரி அறிக்கை கொடுத்தால், அது மண் சட்டி; அதாவது மாமியார் உடைத்த மண் சட்டி! இராசா மீது குறை கூறி தணிக்கைத் துறை அதிகாரி அறிக்கை கொடுத்தால் மட்டும் அது பொன் சட்டியா? அதற்காக இராசாவை கைது செய்ய வேண்டுமா? என்ன நியாயம் இது? ஜெயலலிதா ஆட்சியில் தணிக்கைத் துறை அதிகாரி தாக் கல் செய்த மற்றொரு அறிக்கையின் தலைப்பே,“TANSI - Loss of revenue due to failure to follow uniform procedure in disposal of assets” சொத்துக்களை விற்றதில் முறையான அணுகு முறையை பின்பற்றாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு) என்பதாகும். “........the sale of land in all the three defunct units had been effected almost at the same time, in the same locality, the sale price of land of Tansi Foundry to Jaya Publications Limited at Rs. 1350 per square metre was very low when compared to the sale price of Rs. 2080 and Rs, 2100 per square metre obtained in case of sale of land of Tansi Enamelled Wires and Tansi Forgings, respectively. Thus, the Company had not fully explored the possibility of getting a higher rate..........” (ஒரே பகுதியில் இருந்த டான்சி நிறுவனத்திற்குரிய டான்சி எனா மல்டு ஒயர்ஸ் மற்றும் டான்சி போர்ஜிங்ஸ்க்குச் சொந்தமான இரண்டு இடங்களை ஒரு சதுர மீட்டர் 2080 ரூபாய் மற்றும் 2100 ரூபாய் என்ற விலைக்கு விற்றிருக்கும் போது, ஜெயா பப்ளி கேஷன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் டான்சி பவுண்டரி நிறுவன இடத்தை ஒரு சதுர மீட்டர் 1350 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார்கள். எனவே அதிகத் தொகையை பெறுகின்ற வாய்ப்பினை டான்சி இழந்துவிட்டது.) இந்தத் தகவல் இன்னமும் தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையிலே உள்ளது. அந்த வாசகங்களைத்தான் மீண்டும் நான் இங்கே ஞாபகப்படுத்தியுள்ளேன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை பற்றி தணிக்கைத் துறை அதிகாரிகளே குறிப்பிட்ட வாசகங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. இவைகளையெல்லாம் ஞாபகப்படுத்த வேண்டு மென்று எனக்கும் விருப்பம் இல்லை தான்! ஆனால் அவ ராகவே தினந்தோறும் தன் பெயரில் ஏதாவது அறிக்கை வெளி வரவேண்டு மென்பதற்காக இல்லாத கதைகளையெல்லாம் ஜோடித்து அநாகரிகமான வார்த்தைகளால் அறிக்கை விடு கின்ற காரணத்தால் அதற்கு உண்மையான விளக்கங்களை அளிக்க வேண்டியதாயிற்று! உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், நேற்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை யில், வருமானவரித் துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களில் கருணாநிதியின் மகனும், துணை முதலமைச்ச ருமான ஸ்டாலின், கருணாநிதியின் மனைவி தயாளு ஆகி யோரது பெயர்கள் அடிபடுகின்றன. இதில் இருந்து நாட்டின் சொத்தைக் கொள்ளையடிக்க ஒரு மிகப் பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்திருப்பது தெளிவாகிறது என்று எழுதியிருக்கிறார். வருமான வரித் துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவில் யாரோ இரண்டு பேர் பேசிக் கொண்டதை பதிவுசெய்து, அதனை வெளியிட்டுவிட்டால், அவர்கள் பேசிக் கொண்டதெல்லாம் உண்மையாகிவிடுமா? இதே தகவலை சில நாட்களுக்கு முன்பு ஜெயாவின் புதிய அரசி யல் ஆலோசகர் துக்ளக் சோ, அவர் இதழில் வெளியிட்டபோது, உடனடியாக நான் விளக்கம் அளித்து, அந்தச் செய்தியை அவர் பெயரில் வெளியிடத் தயாரா, அப்படி வெளியிட்டால் நான் சட்ட ரீதியாகச் சந்திக்கிறேன் என்று பதிலும் அளித்திருக்கிறேன். அதன் பின்னர் அதே செய்தியை ஜெயலலிதா தனது அறிக்கை யிலே எழுதுகிறார் என்றால், அதற்கு நாம் பதில் அளிக்கா விட்டால் அவர் கூறியது உண்மை என்று ஆகிவிடாதா? பிரச்சாரம் நடக்கட்டும்! நடக்கட்டும்!! எனவே இவ்வளவு விளக்கங்களையும் என்னுடைய நேரத்தைச் செலவிட்டு எழுதுகிறேன். உடன்பிறப்பே, இந்த விளக்கங்களை உனக்கு நான் மீண்டும், மீண்டும் எழுதத் தேவையில்லைதான்! இருந்தாலும் நமக்கு எதிராக தவறான செய்திகள் பரப்பப்படும்போது, பொது மக்களில் ஒருசிலர் அதைக்கேட்டு, அப்படியும் இருக்குமோ என்று நினைத்து விடக்கூடாதல்லவா? இந்த விவரங்களையெல்லாம் நீ மட்டும் படித்தால் போதுமா? பொதுமக்களிடம் இந்த உண்மைகளை யெல்லாம் விளக்கிட வேண்டாமா? கழகத்தின் முன்னணி யினர், பேச்சாளர்கள் இந்த விவரங்களை தாங்கள் பேசுகின்ற கூட்டங்களின் மூலமாக மக்களுக்குத் தெளிவாக்கிட வேண் டும். உண்மை எது, பொய் எது என்பதை மக்களிடம் விளக்கி, சிறுதாவூரில் நடைபெற்றது என்ன, கொட நாட்டில் நடை பெற்றது என்ன, தருமபுரியிலே மூன்று மாணவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட காரணமாக அமைந்தது எது, பெங் களூரு சிறப்பு நீதி மன்றத்திலே நடைபெறும் வழக்கு எதற்காக, அந்த வழக்கு பற்றி உச்சநீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பு என்ன என்பது பற்றியெல்லாம் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு விளக்கிட வேண்டும், திண்ணைப் பிரச்சாரமாக, தெருமுனைப் பிரச்சாரமாக இந்த விவரங்களை மக்களுக்குப் புரிய வைத்திட வேண்டும். புறப்படட்டும் நமது பிரச்சாரப்படை! இப்பிரச்சாரப் படையை வரவேற்க ஒவ்வொரு மாவட்டமும் - மாவட்டக் கழகச் செயலாளர்களும் - ஒன்றிய, நகரக் கழகச் செயலாளர்களும் - இளைஞர் அணியினரும், மாணவர் அணியினரும், மகளிர் அணியினரும், வழக்கறிஞர் அணியினரும், ஏனைய பிற அணி யினரும் தயாராகட்டும்! முழக்கம் செய்ய வருகின்ற தளபதி களும், வீரர்களும் யார், எவர் என்ற பட்டியலை நம்முடைய பிரச்சாரக் கழகச் செயலாளர்கள் வெளியிடுவார்கள். அவர்களோடு தொடர்பு கொண்டு ஆவன செய்திட வேண்டுகிறேன் என்று முரசொலியில் கலைஞர் எழுதியுள்ளார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Sunday, December 26, 2010
புறப்படட்டும், நமது பிரச்சாரப் படை! - கலைஞர் கடிதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment