இன்று (12.12.2010) காணொலிக் காட்சி வாயிலாக “லி மெரிடியன் கோயம்புத்தூர்” ஓட்டல் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார்.
அவர், ’’சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, “லி மெரிடியன் கோயம்புத்தூர்” ஓட்டலைத் திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
டாக்டர் பழனி ஜி.பெரியசாமி அவர்கள் 200 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து நட்சத்திரத் தகுதியில் “லி மெரிடியன் கோயம்புத்தூர் ஓட்டலை” கோவை மாநகருக்கு உருவாக்கித் தந்துள்ளார்.
பழனி ஜி.பெரியசாமி அவர்கள் அமெரிக்காவில் பால் டி மோர் நகரில் வணிக மேலாண்மை பட்டப் படிப்பு நிறுவனத்தின் இயக்குநராகத் திகழ்ந்தவர். 1985ஆம் ஆண்டில், பால் டி மோர் நகரில், “பி.ஜி.பி. சர்வதேச நிதி மற்றும் தொழில்ஆலோசகர்’’ எனத் தமது தொழில் முயற்சியைத் தொடங்கியவர்.
தாய்த் தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளைப் பெருக்குவதற்குத் திட்டமிட்டு நெல்லை மாவட்டம் தரணிநகர், திருவண்ணாமலைமாவட்டம் போளூர், இன்டர்நேஷனல் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி நடத்தி வருகின்றார்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் சர்க்கரை ஆலைகளையும்; நாமக்கல், நெல்லை மாவட்டங்களில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, பலதொழில்நுட்பக் கல்லூரி, பார்மசி அண்ட் நர்சிங் கல்லூரி; மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகள்; தொழிற்பயிற்சி நிலையங்கள்;
தனது அப்பு ஓட்டல் நிறுவனத்தின் மூலம் சென்னையில் கத்திபாரா சந்திப்பு அருகே ‘‘லி ராயல் மெரிடியன் ஓட்டலை’’ அமைத்துள்ளார். அந்த ஓட்டலில் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பயணிகள் பலர் வந்துதங்கிச் செல்கின்றனர்.
சென்னை ‘‘லி ராயல் மெரிடியன் ஓட்டல்’’ அடைந்துள்ள வளர்ச்சியின் அடிப்படையில், கோவை மாநகரில் “லி மெரிடியன் ஓட்டல் கோயம்புத்தூர்” என இந்த அருமையான ஓட்டல் கட்டப்பட்டு, இன்று (12.12.2010) திறந்து வைக்கப்படுகிறது.
இந்த திறப்பு விழாவில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று இருந்தாலுங்கூட, சில அசம்பாவிதங்களாலும், என் உடல் நிலை திடீரென்று பயணத்திற்கு ஒத்து வராத நிலை ஏற்பட்டதாலும் வர இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவேண்டுகிறேன் - வர முடியாமைக்கு வருத்தம் அடைகிறேன்.
கோவை மாநகரம், சென்னைக்கு அடுத்த தொழில் வளர்ச்சி மிகுந்த மாநகரமாகத் திகழ்கிறது. கோவை மாநகரின் தட்பவெட்ப நிலையும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கிறது. எனவே, இந்நகருக்கு வருகை தரக்கூடிய தொழில்முகவர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் “லி மெரிடியன் கோயம்புத்தூர்” ஓட்டல் சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றிபெற எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்க்கரை ஆலைகள், கட்டுமானத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் முயற்சிகளின் பயனாக, ஏறத்தாழ மூன்றாயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 30 ஆயிரம் குடும்பங்களுக்கு மறைமுகவேலைவாய்ப்புகளையும் உருவாக்கி உள்ள பி.ஜி.பி. தொழில் குழுமத்தையும், அதன் நிறுவனர் பழனி ஜி. பெரியசாமி அவர்களையும், அவருக்குத் துணையாக இருக்கும் தோழர்கள், உழைப்பாளிகள் அனைவர்க்கும் எனது பாராட்டுகளையும்,நல்வாழ்த்து களையும் தெரிவித்து இந்த அளவில் மீண்டும் எனது நல்வாழ்த்துக்களைக் கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்’’என்று உரையாற்றினார்.
No comments:
Post a Comment