கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 19, 2010

திமுக வளர்ச்சிக்கு தூணாக விளங்குபவர் - அமைச்சர் அன்பழகனுக்கு கருணாநிதி வாழ்த்து



நிதியமைச்சர் அன்பழகனுக்கு 89 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 18.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:

1942ம் ஆண்டு திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் அண்ணா கலந்து கொண்டார். அண்ணா பேச்சை கேட்பதற்காக இளைஞனாக இருந்த நானும் சென்றிருந் தேன். இறுதியாக அண் ணாவை பேச அழைத்த நேரத்தில், அவர் எழுந்து நான் பேசுவதற்கு முன்பு அண்ணாமலை பல்கலை மாணவர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறேன். அவர் உங்கள் முன்னால் பேசுவார் என்ற அறிமுகத்தோடு ஒரு இளைஞரை அங்கே பேச வைத்தார். முதன்முதலாக அங்கே தான் நான் பேராசிரியரை சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன்.
நான் 18 வயது இளைஞ னாக மாணவ நேசன் என்ற பெயரில் கையெழுத்து ஏடு ஒன்றினை நடத்திக் கொண்டு இருந்தபோது கதர் சட்டை அணிந்த கண்ணாடிக்காரர் ஒருவர் திருவாரூரில் என்னை சந்தித்தார். மாணவர்களை எல்லாம் ஒன்றுபடுத்தி சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக குரலெழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர் பள்ளியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்படி வந்தவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பது எனக்கு அப்போது தெரியாது. சுதந்திரம், சமாதானம், சமத்துவம் என்ற வார்த்தைகள் என் உள்ளத்தில் பல உணர்ச்சிகளை ஏற்படுத்தியதால், மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளரானேன். அதில் 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் சம்மேளனத்தின் கோஷமாக தமிழ் வாழ்க, இந்தி வாழ்க என்று வலியுறுத்தப்பட்டபோது, நான் மறுத்து விட்டேன். உறுப்பினர்களிடமிருந்து பெற்ற 100 ரூபாயைத் திருப்பிக் கொடுக்க முனைந்தேன். ஒரு சிலர் பெற்றுக் கொண்டார்கள். பெரும்பாலோர் சம்மேளனத்தை கலைத்து விடலாம், கட்டணம் உன்னிடமே இருக்கட்டும் என்றனர்.
அன்று மாலையே தமிழ் மாணவர் மன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, ஏற்கனவே கட்டணத் தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளாதவர்களை எல்லாம் தமிழ் மாணவர் மன்றத்தின் உறுப்பினராக ஆக்கினேன். அந்த மன்றத்தின் ஆண்டு விழா 1942ல் திருவாரூரில் சிறப்பாக நடந்தது. அந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள், பெரும்பாலோர் வரவில்லை. அவர்கள் எல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தபோது, இன்றைய பேராசிரியர் அன்றைய மாணவர் அன்பழகனும், மதியழகனும் வந்து எனக்கு ஆறுதல் வழங்கினார்கள்.
எனக்குத் துணையாக 1942ல் அங்கே பேராசிரியர் வந்தபோது என்னுடைய வயது 18. அப்போது என் துணைக்கு வந்த பேராசிரியர், தற்போது எனக்கு 87 வயது நடக்கின்ற நிலையிலும், அவர் இன்று 89வது வயதில் அடியெடுத்து வைக்கின்ற நிலையிலும் எனக்கு துணையாக இருக்கின்றார் என்பதை எண்ணும்போது இடையிலே எத்தனையோ நிகழ்ச்சிகள், சம்பவங்கள், உயர்வு, தாழ்வுகள், ஆட்சிக்கு வந்த நேரங்களும் உண்டு, ஆட்சியை இழந்து சோ தனையிலே நடைபோட்ட நாட்களும் உண்டு.
அத்தனையிலும் சளைக்காமல், சோர்வடையாமல், அன்று போலவே இன்றும் இளைஞராக, கருணாநிதி என்ற இளைஞனுக்கும் துணை நிற்கும் உடன்பிறப்பாக விளங்கி வருகிறார். திமுகவுக்கு துயரங்கள், துன்பங்கள் வந்த நேரத்தில் எல்லாம் அதைப் பற்றி சிறிதும் கலங்காமல் கட்சி வளர்ச்சிக்குத் தூணாக விளங்கியவர்தான் பேராசிரியர். மணவழகர் ஈன்றெடுத்த செல்வன், மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைக்கும் சிறைச் சாலை எனக் கூறி மாத்தமிழ் காக்கும் அரிமா, பெரியாரின் பெரும் தொண்டர், அண்ணாவின் அன்புத் தம்பி, எனது உயிரணைய உடன்பிறப்புதான் இனமானப் பேராசிரியர்.
இந்த வயதிலும் நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நிதானமான போக்கு, நேர்மையான சிந்தனை, தன் மனதில் பட்ட கருத்தை மறைக்காது எடுத்துரைக்கும் திறந்த நெஞ்சம், ஆபத்து தமிழுக்கோ, தமிழ் இனத்துக்கோ என்றால் அனலாகக் கொதிக்கின்ற உள்ளம், எதிர் தரப்பினரை சுழற்றி அடிக்கும் வாள் வீச்சென வாயிலிருந்து பிறக்கும் ‘சுளீர், சுளீர்’ என்ற வார்த்தைகள் பேராசிரியருக்கே சொந்தமானவை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவர் பேராசிரியர். சாதி, மத பேதங்களில் சிக்கித் தவித்த சமுதாயத்தை தலை நிமிரச் செய்ய அவரது பேச்சும், எழுத்தும் பயன்பட்டது என்றால் அது மிகையல்ல.
ஈழத் தமிழர்களுக்காக என்னுடன் சேர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தி ஆதிக்க எதிர்ப்பு போரில் கலந்து கொண்டார் என்பதற்காக இவருடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியே அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட வரலாற்றுக்கு இவர் சொந்தகாரர்.
ஒரு பெரும் இயக்கத்திற்குப் பொதுச் செயலாளர், தமிழகத்தின் நிதி அமைச்சர் என்றெல்லாம் பாராது எளிமையான பொது வாழ்வினை இன்றளவும் நடத்தி வருபவர்.
‘நன்றாண்ட மூவேந்தர் நாகரிக மேமாற்றி வென்றாண்ட ஆரியத்தை வென்றாளத் தோன்றியவர் குன்றா மறவக் குரிசிலார் அன்பழகர் என்றோழர் என்னல் எனக்குப் பெருமையதே’ என்று பாவேந்தர் பாரதிதாசனாரும், ‘சாதி சமய வேற்றுமைகளைக் களைந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குலத்தாராக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோள் அன்பழகனாரின் இளமைப் பருவத்திலேயே நன்கு வேரூன்றியிருந்து’ என்று பேராசிரியர் க.வெள்ளைவாரணனாரும், ‘உலகக் கடல்களெல்லாம் ஓரிடஞ் சேர்ந்தாலும் ஒப்பாகா என்று சொல்லக் கூடிய அத்துணைத் தமிழன்பு மிக்கவர் அன்பழகனார்’ என்று முனைவர் வ.சுப.மாணிக்கனாரும், ‘மாணவப் பருவத்தில் விரும்பி ஏற்றுக் கொண்ட பகுத்தறிவுப் போக்கினை சமத்துவச் சிந்தனையை, தமிழ்ப் பற்றினை இன்னும் நழுவவிடாமல் அரும்பாடுபட்டு வரும் சிலரில் பேராசிரியர் அன்பழகனாரும் ஒருவர்’ என்று நெ.து.சுந்தரவடிவேலும், பேராசிரியரை மனமாரப் பாராட்டியிருக்கிறார்கள்.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைக் கண்டு, தமிழர் நலம் காக்கப் பாடுபட்டு உழைத்த திராவிட இயக்க முன்னோடிகளாம் பெரியார், அண்ணா, டி.எம்.நாயர், டாக்டர் நடேசனார், தியாகராயர், பனகல் அரசர் போன்ற கொள்கைத் தங்கங்களை இன்றைக்கும் மேடைகளிலே நினைவுபடுத்திப் பேசிக்கொண்டிருக் கும் கொள்கைக் கோமான் தான் பேராசிரியர்.
பேராசிரியருக்கும் கோபம் வரும். உதாரணமாக சாதியை பற்றி பேசப்பட்டபோது நாமெல்லாம் திராவிடர்கள், நாமெல்லாம் தமிழர்கள் என்று திரும்ப திரும்ப ஏன் சொல்கிறோம் என்றால், நம்மிலே ஏற்றத் தாழ்வு கிடையாது. இருப்பதாக சொல்பவன் ஏமாற்றுவதற்காக சொல்பவன். நால்வகை சாதி என்று சொன்னவன் பித்தலாட்டக்காரன் என்று கடுமையாக கூறினார்.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அண்ணா கண்டெடுத்த கொள்கை முத்துக்களில் ஒன்றே அன்பழகன். அவருடைய கருத்தழகும், கனிவான சொல்லழகும், தமிழ் கட்டழகும் மேடையில் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். பேராசிரியரை பற்றி ஒரு முறை நான் கூறும் போது நான் மக்களுக்காக எழுதுகிறேன். பேராசிரியர் அன்பழகனோ என் போன்றோருக்காக எழுதுகிறார் என்று சொன்னேன். அத்தகைய அறிவும், அனுபவமும், ஆற் றுலும் உள்ளவர் பேராசிரியர்.
அன்பழகனார் தற்போது இந்த கட்சியை கட்டிக் காக் கின்ற பெருந்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய 89ம் பிறந்த நாள் தமிழுக்கு முடிசூட்டும் நாள். தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள். திராவிட இனப் பெருங்குடி மக்கள் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழர்களின் உரிமைக்கா போராடுவோம் என்று சூளுரைக்கின்ற நாள், இந்த நாள் என்று கூறி மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து திமுகவின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் மேன்மைக்கும் தொடர்ந்து பாடுபட வேண்டுமென்று வாழ்த்துகின் றேன். போற்றுகின்றேன். வயதில் ஈராண்டு இளை யோன். அதனால் வணங்குகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment