மருத்துவ துறையில் இந்தியா, இன்னும் 5 ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி அடையும் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மருந்தக தொழில்துறையில் வணிக ரீதியாக ஏற்படும் சவால்களை சமாளிப்பது குறித்த கருத்தரங்கம் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 15.12.2010 அன்று நடந்தது. கருத்தரங்குக்கு தொழில் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கூட்டமைப்பின் தென் மண்டல துணைத்தலைவர் டி.டி.அசோக், கருத்தரங்க தலைவர் ராகவேந்திரராவ் முன்னிலை வகித்தனர். ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது:
இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 40 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்வதில் இந்திய மருத்துவ துறை உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது. பொது மக்களுக்கு செலவு செய்யும் ஒரு சதவீத ஜி.டி.பி.யை 2 அல்லது 3 சதவீதமாக உயர்த்துவதும், உயிர்காக்கும் மருந்துகள் மலிவு விலையில் கிடைக்க செய்வதும் அரசின் கடமையாக உள்ளது. இது ஒரு கடினமான விஷயம். பல விவாதங்களுக்கு பிறகு மத்திய அரசு, புதிய மருந்து கொள்கையை தயார் செய்து மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் வைக்க உள்ளது.
இந்த துறையானது தற்போது, மருந்து விலையை நிர்ணயிப்பதில் பெரிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. திறமையான அனுபவசாலிகள் மூலமும், நிதிபற்றாக்குறையை சரி செய்வதின் மூலமும், தேசிய மருந்து கொள்கையின் மூலமும், இந்த துறையை நன்றாக செயல்படுத்த முடியும்.
இந்தியா, இப்போது வளர்ந்த நாடுகளின் கண்ணோட்டத்தில் உள்ளது. நமது அரசு இந்த துறையை வளர்ச்சி அடைய எடுத்துள்ள முடிவுகளே காரணம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, இந்த துறையில் அபரிமிதமான வளர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு அவர் பேசினார். மருந்தகத்துறை அதிகாரிகள், மருந்து உற்பத்தியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment