முதல்வர் கருணாநிதி 20.12.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் தி.மு.கவை வெற்றி காண முடியாது என்று தெரிந்து கொண்டுள்ள ஜெயலலிதாவும், அவருடைய ஆதரவாளர்களான ஒருசில பத்திரிகையாளர்களும் ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடு பிரச்சினையை பூதாகார மாக ஆக்கி, அதைச் சொல்லியே தேர்தலில் தி.மு.கவுக்கு சோதனையை ஏற்படுத்தலாமா என்று கனவு காண்கிறார்கள்.
அந்த வரிசையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவருகின்ற ஒரு கிழமை ஏடு, தி.மு.க தலைவர் மிகவும் சோர்ந்துவிட்டார், உடன்பிறப்புக் கடிதம் எழுதுவதையே நிறுத்தி விட்டார், ஒரு வார காலமாக எதையும் எழுதவில்லை என்று கூறியிருக்கிறது.
அந்த ஏடு மேலும் ஒருபடி சென்று, மத்திய அமைச்சரவை 2009ம் ஆண்டு புதிதாக அமைந்தபோது தொலைத் தொடர்புத் துறை ராசாவிற்குத்தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் தி.மு.க. தலைமை வலியுறுத்தி பெற்றதாகவும், அதற்கு உள் நோக்கம் என்னவென்றால் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டும் என்பது தான் என்பதைப் போலவும் எழுதியிருக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால் 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க வெற்றி பெற்று, நான் 19&5&2009 அன்று டெல்லி சென்றிருந்தபோது, Òஜெயா தொலைக்காட்சிÓயின் செய்தியாளர் என்னிடம் கேட்ட கேள்வியே, Òஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் ராசாவிற்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டுமென்று கேட்பீர்களா?Ó என்பது தான். எந்த அளவிற்கு ராசா மீது அ.தி.மு.க.வினருக்கு காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கின்றது என்பது இதிலிருந்தே புரிகிறது அல்லவா?
மத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேருவது பற்றிப் பேச்சுவார்த்தை நடைபெற்றபோதுகூட, ஒரு Òபார்முலாÓ தெரிவிக்கப்பட்டதே தவிர, யாருக்கு அமைச்சர், யாருக்கு என்ன இலாகா, என்பது பற்றிப் பேசப்படவில்லை.
பிரதமர் அவர்கள், தி.மு.க.வினர் அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவளிப்போம் என்று சென்னையில் எடுத்துள்ள முடிவை ஓரிரு நாட்களில் மறு பரிசீலனை செய்வார்கள் என்று நாங்கள் இன்னமும் நம்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
பிரதமரின் விருப்பத்தின் பேரில் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களோடு கலந்து பேசிவிட்டு, கழகத்தின் சார்பான அமைச்சர்களின் பட்டியலை தெரிவித்ததின் அடிப்படையில், பிரதமர் 25&5&2009 அன்று மாலையில் என்னோடு சென்னைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுகவின் சார்பில் பரிந்துரைத்த பெயர்கள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ள தாகத் தெரிவித்தார். நானும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.
28&5&2009 அன்று திமுக சார்பில் மு.க. அழகிரி உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராகவும், தயாநிதி மாறன் ஜவுளித் துறை அமைச்சராகவும், ஆ. இராசா தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் என மூவரும் கேபினட் அமைச்சர்களாகவும், மற்றும் பழநி மாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் முறையே நிதி, சமூக நீதி, தகவல் ஒலிபரப்பு, சுகாதாரம் ஆகிய துறைகளின் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர்.
இவர்களுக்கு துறைகளை ஒதுக்கும்போது கூட, ஆ. இராசா 2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மத்திய அமைச்சரவையிலேயே 18&5&2007 முதலே தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காரணத்தால் அவருக்கு தொடர்ந்து அந்தத் துறை மீண்டும் ஒதுக்கப்பட்டதே தவிர, அதில் திமுக பிடிவாதமாக இல்லை என்பதையும் யாருக்கும் யாரும் சிபாரிசு செய்திடவில்லை என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
இதிலே ராசாவிற்கு இந்தத் துறை கிடைப்பதற்காக யாரோ ஒருவர் தொலைபேசியிலே பேசினார், அவரிடம் யார் யாரோ பரிந்துரை செய்தார்கள், அதனால்தான் இந்த இலாகா அவருக்குக் கிடைத்தது என்றெல்லாம் ஏடுகள் சில செய்துள்ள விமர்சனங்கள் விஷமத்தனமே தவிர வேறல்ல.
தொலைபேசியில் பேசிய பேச்சினை Òடேப்Ó செய்து, அந்தப் பேச்சு எப்படியோ வெளியே வந்து ஒருசில ஏடுகளில் அதனைப் பெரிதுபடுத்தி வெளியிடுகின்ற காரணத்தாலேயே, அந்த பேச்சுக்கள் எல்லாம் அப்படியே உண்மையாகிவிடாது.
ரத்தன் டாட்டா என்ற ஒரு பெரிய தொழிலதிபர் என்னை முதலமைச்சர் என்ற முறையில் சந்தித்தார் என்றால் உடனே அதற்குக் காரணம் ஊழல்தானா? அவர் என்னைச் சந்தித்தபோது, Òஅவருடைய நிறுவனத்தின் சார்பில் யாருக்கும் கமிஷன் கொடுப்பதில்லை. அதுபோலவே முதலமைச்சர் என்ற முறையில் நீங்களும் அதனை ஆதரிப்பதில்லை என்று நான் கேள்விப்பட்டேன் அதுவே உங்களைச் சந்திக்க முதல் காரணம்Ó என்று கூறி விட்டுத்தான் தனது பேச்சையே தொடங்கினார்.
அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலமாக விற்றிருந்தால், இந்த அளவிற்கு அரசுக்கு வருவாய் வந்திருக்கும், ஆனால் அது தற்போது கடைப்பிடித்த முறையினால் இழப்பாகிவிட்டது என்றுதான் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
இதே துறையின் முன்னாள் அமைச்சராக இருந்த அருண் ஷோரி (பா.ஜ.க.) கூட நேற்று ஒரு கருத்தரங்கில் பேசும்போது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசியல்வாதிகள் கூறுவது போல, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்பது தவறானது. இதில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் முறைகேடு நடந்திருக்கலாம். கருணாநிதி கூறியிருப்பது போல, தனிப்பட்ட ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது என்றெல்லாம் சொல்லியிருப்பதோடு, Òராசா எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும்Ó என்றும் சொல்லியிருக்கிறார்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக அரசு தொடர்ந்து ஆற்றி வரும் சாதனைகள், திட்டங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பெருகிவரும் நல்ல பெயருக்கு எப்படியாவது ஊறு ஏற்படுத்திட வேண்டுமென்ற கெடு நினைப்போடு இந்த ஏடுகள் போன்ற ஒரு சிலர் திட்டமிட்டுச் செய்கின்ற பொய் பிரச்சாரத்திற்கு இரையாகிடாமல், போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும், நம் கடன் பணி செய்து கிடப்பதே என்ற உறுதியோடு தொடர்ந்து மக்கள் பணியினை ஆற்றிடுவோம், விஷமப் பிரச்சாரங்களை முறியடித்து காட்டுவோம்.
No comments:
Post a Comment