வேலூர் மாவட்டத்தில் க்ஷீ 1,295 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு நேற்று (27.12.2010) வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலூர் மாவட்டத்துக்கான கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் 25வது கூட்டம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. மேட்டூர் அணையின் கீழ்ப் பகுதியில் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு திட்டத்தை செயலாக்கத்துக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டத்துக்கான அரசின் நிர்வாக ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்துக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயலாக்கத்துக்கு வரும்போது வேலூர் மாநகராட்சியில் உள்ள வேலூர், சத்துவாச்சாரி, தாராபடவேடு உள்ளிட்ட 3 நகராட்சிகள், தொரப்பாடி, அல்லாபுரம், செண்பாக்கம், கழிஞ்சூர், காந்திநகர், காட்பாடி ஆகிய 6 பேரூராட்சிகள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, அரக்கோணம் ஆகிய 11 நகராட்சிகள், நாட்றம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம், ஒடுகத்தூர் மற்றும் பள்ளிக்கொண்டா ஆகிய 5 பேரூராட்சிகள், 944 வழியோர ஊரக குடியிருப்புகளில் உள்ள சுமார் 18 லட்சத்து 68 ஆயிரம் மக்கள் பயன் பெறுவார்கள்.
இந்த திட்டத்துக்கான ஆண்டு பராமரிப்பு செலவு க்ஷீ58.20 கோடி. இந்த திட்டம் 10 சதவீதம் அரசு மானியம் மற்றும் 90 சதவீதம் ஹட்கோ கடனுதவி என்ற அடிப்படையில் செயலாக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எஸ்.மாலதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் சுர்ஜித் சவுத்திரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ககன்தீப் சிங் பேடி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment