கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

சுற்றுலாவால் பொருளாதார வளர்ச்சி: கலைஞர்


சுற்றுலா மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்வோம் என்று சுற்றுலா தொழில் பொருட்காட்சியை திறந்து வைத்து முதல்வர் கருணாநிதி பேசினார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் 37வது இந்திய சுற்றுலா தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா, 24.12.2010 அன்று சென்னை தீவுத் திடலில் நடந்தது. சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ் ராஜன் தலைமை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் ஜவஹர் வரவேற்றார்
பொருட்காட்சியை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்து பேசியதாவது:

1974ம் ஆண்டு முதல் சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
சுற்றுலா வளர்ச்சி சுற்றுலாவுக்கு மாத்திரம் வளர்ச்சி அல்ல. அது நடைபெறுகின்ற இடத்திலே உள்ள நகரம் அந்த நகரத்தைச் சுற்றி இருக்கின்ற சிற்றூர், பேரூர் ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் வளர்ச்சியைக் குறிப்பதுதான் இந்த சுற்றுலா வளர்ச்சி எனப்படுவதாகும். இதனுடைய வளர்ச்சியிலே மக்கள் காட்டுகின்ற ஆர்வம், சுற்றுலா வளர வேண்டும் என்பதற்காக அல்ல; தாங்கள் விரும்புகின்ற பொழுதுபோக்கு, தாங்கள் விரும்புகின்ற கலை, இலக்கியத் தேடல்களுக்குக் கிடைக்கின்ற தீனி இவைகளையெல்லாம் வழங்கக்கூடிய இடமாக சுற்றுலா காட்சிகள் நடைபெறும் பொழுது அவற்றை அறிந்து, உணர்ந்து, தெரிந்து, தெளிந்து தாங்களும் அந்த சுற்றுலாத் தலங்களிலே கிடைக்கின்ற உணர்வுகளையெல்லாம் உள்ளத்திலே பதிய வைத்துக்கொண்டு, மேலும், மேலும் நாட்டில், மாநிலத்தில், மாவட்டத்தில், மாநகரில், சிற்றூர், பேரூர்களில் இதனை வளர்க்க வேண்டும் என்று இயல்பாகவே ஆர்வம் காட்ட முன்வருவார்கள். அப்படி முன் வரவேண்டும் என்ற நிலையை ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.


பார்வையாளர்கள்


சுற்றுலா என்றால் அது ஒரு மாநிலத்திற்கு, நாட்டிற்கு அதன் வளர்ச்சிக்குத் தேவையான சாதனம் என்பதை உணர வேண்டும். உணருபவர்களால்தான் அதிலே ஆர்வம் காட்டிட முடியும். சுற்றுலா நிகழ்ச்சிதானே என்று அலட்சியப் படுத்துகின்றவர்களுக்கு இதிலே ஆர்வம் தோன்றாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் அடைகின்ற மகிழ்ச்சிக்குக் காரணம் மாநில அரசின் 26 துறைகள் அரசுத் துறை நிறுவனங்கள் 13, மத்திய அரசுத் துறைகள் 3, பிற மாநில அரசுத் துறைகள் 3 என மொத்தம் 45 அரசு அரங்குகள் இப்பொருட்காட்சியிலே அமைந்துள்ளன என்பதை தம்பி சுரேஷ்ராஜன் தலைமையுரையிலே இங்கே எடுத்துரைத்தார். இது வளருகின்றதா, அல்லது ஆண்டுதோறும் வளரமுடியாத தேக்க நிலைக்கு ஆளாகியிருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்கும் போது, 2005 ம் ஆண்டில் 9 இலட்சமாக இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை, 2010 ஆம் ஆண்டில் 17 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. நடப்பாண்டில் 20 லட்சம் பேராக அந்த எண்ணிக்கை உயரும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தத்தக்க விதத்தில் இந்த உயர்வு தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறது.


மாமல்லபுரம்


மாமல்லபுரத்துக்குப் போகிறோம் என்றால், சுற்றுலா தலங்களில் அது ஒன்று. அங்கே ஒரு வரலாறு கிடைக்கின்றது. எத்தகைய வரலாறு கிடைக்கிறது? பழங்காலத்திலே ஆண்ட மன்னர்களுடைய வரலாறு கிடைக்கின்றது, பல்லவனுடைய வரலாறு கிடைக்கின்றது, பல்லவர் காலத்திலே சிற்பங்கள் உருவாக்குகின்ற சிற்பிகள் வாழ்ந்தார்கள், அவர்களுடைய அற்புதமான கை வண்ணம், படைப்பு இந்த மாமல்லபுரத்திலே இருக்கின்ற ரதங்கள், அர்ஜுனன் தபசு என்று சொல்லப்படுகின்ற இடங்கள் எல்லாம் அவர்களுடைய கைவண்ணம் என்கிற போது, எத்தகைய ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதோடு, சென்றோம், கண்டோம், வந்தோம் என்று இல்லாமல் நான் அந்தக் காலத்தில் மாமல்லபுரத்திற்குச் செல்லும் போதெல்லாம் இப்போது, எப்போதாவது செல்கிறேன், அப்போது ஒவ்வொரு வாரமும் சென்று, மாமல்லபுரத்திலே தங்கி அங்கேயுள்ள சிற்பிகளுடைய தலைவர்களை, சிற்பிகளையெல்லாம் காண்பது எனக்கு வாடிக்கை.


ஆட்சிப் பொறுப்பு வந்து, அண்ணா தலைமையிலே அரசு அமைந்து, அதைத் தொடர்ந்து சிற்பங்கள் வடிக்கின்ற பணியிலே நம் கழக அரசு ஈடுபட்டு, சிலைகள் செய்வது சிற்பங்கள் வடித்து, பழைய நினைவுச் சின்னங்களை உருவாக்குவது என்ற இந்த நிலையில் அரசு இயங்கிய போது, குறிப்பாக அவைகளைப் பற்றியெல்லாம் விவாதிக்க, அந்தச் சிலைகள், சிற்பங்கள் எப்படியிருக்க வேண்டுமென்பதைப் பற்றி ஆலோசிக்க நான் மாமல்லபுரம் செல்வதும் அங்குள்ள கணபதி ஸ்தபதி போன்ற சிற்பிகளைச் சந்திப்பதும் வாடிக்கை.


அப்போது அவர்கள் சொன்னார்கள் இங்கே ஏராளமான கல் கிடைக்கிறது, அந்தக் கல்லைக் கொண்டு சிற்பங்கள் வடிக்கலாம், அப்படி வடிக்கின்ற போது ஒரு பெரிய தொழிற்கூடமாகவே இந்த மாமல்லபுரம் ஆகும், அதற்கு வழி காண வேண்டுமென்று என்னிடத்திலே சொன்ன போது, அதையேற்றுக் கொண்ட காரணத்தால் தான் கழக ஆட்சியிலே மாமல்லபுரத்திலே சிற்பங்களை வடிக்கின்ற சிற்பிகளுக்கு ஆதரவும் ஆக்கமும் ஊக்கமும் தரப்பட்டு அவர்கள் நம்முடைய கழக அரசின் பால் இன்னும் பல தேவைகளை நிறைவு செய்து கொள்ள முன் வந்தார்கள்.


செம்மொழி பூங்கா


அப்படிப்பட்ட ஒரு ஊக்கத்தை அவர்களுக்கான ஆக்கத்தை, ஆர்வம் படைத்தவர்களுக்குத் தர வேண்டும் நாம் தந்த காரணத்தால் தான் இன்றைக்கு மாமல்லபுரத்திலே பல சிற்பங்களை புதிது புதிதாகக் காண முடிகிறது.


இங்கே சொன்னார்கள் நடுநாயகமாக சென்னையிலே உள்ள ஓர் இடத்தை "செம்மொழிப் பூங்கா'' என்ற பெயரில் இப்போது உருவாக்கியிருக்கிறோம். அப்படி உருவாக்கப்பட்ட அந்தப் பூங்காவைக் காண அது உருவாக்கப்பட்டு திறக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு மாலை நேரத்தில் அங்கே நான் சென்றேன். காரிலிருந்து கீழே இறங்க முடியவில்லை. ஏன் இறங்க முடியவில்லை? கல்லும் முள்ளும் காலிலே குத்தியதா என்றால் இல்லை. இறங்க முடியாததற்குக் காரணம், அங்கே கூடியிருந்த தாய்மார்கள், பெரியோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் இவர்கள் அத்தனை பேரும் என்னைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்தத் தொடங்கி விட்டார்கள். நான் அங்கிருந்து நான்கு கஜ துநுரம் கூட முன்னேறிச் செல்ல முடியவில்லை. அவ்வளவு கூட்டம். எதற்காக? நீண்ட காலமாகக் காத்திருந்தார்கள். அந்த இடத்திற்கு ஏற்கனவே வந்தால், இப்படிப் பூத்துக் குலுங்குகின்ற செடிகளைக் காண முடியாது இப்படிப்பட்ட மரங்களைக் காண முடியாது இப்படிப்பட்ட மாலை நேரத் தென்றலை அங்கே அனுபவிக்க முடியாது. வடை சுடுகின்ற வாசனையும், வேறு சில வாசனைகளும் தான் அங்கே கிடைக்கும். உல்லாசமாக அங்கே பொழுதைக் கழிக்கவும் அங்கே வருகின்ற நண்பர்களோடு உரையாடவும் அரசியல் விஷயங்களைப் பேசவும் ஒரு காலத்திலே பயன்பட்ட இடம் இன்றைக்குப் பொழுதுபோக்கிற்காக, களைப்பு தீருவதற்காக, காலையிலிருந்து மாலை வரை உழைத்தவன், வியர்வையிலே குளித்தவன், அங்கே சென்று தங்களுடைய அயர்வைப் போக்கிக் கொள்வதற்காக அந்த இடம் அமைந்திருக்கின்றது. அது தான் செம்மொழிப் பூங்கா என்கின்ற பெயரோடு இருக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் பூங்காவை அமைத்தவன், அதற்குள் போக முடியவில்லை. அவ்வளவு கூட்டம் அவ்வளவு வரவேற்பு. இன்றைக்கும் அப்படித் தான் இருக்கிறது.


முயற்சி மேற்கொண்டால் சுற்றுலா மக்களை வளமுடையவர்களாக ஆக்கும்


வேடிக்கைக்காகச் சொல்லவில்லை ஏதோ ஊர் அழகாக இருக்க வேண்டும் சுற்றுலா என்றால் அதிலே பொருளாதாரம் அடங்கியிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள் என்றால், ஒன்பது இலட்சம் பேர் வந்த இடத்தில் இப்போது 17 லட்சம் பேர் வருகிறார்கள் என்றால் அந்தப் பகுதியின் பொருளாதாரம் வளருகிறது. அவர்கள் அங்கே வாங்குகின்ற பொருள்கள், அதற்காக தருகின்ற விலை அதனால் ஏற்படுகின்ற பணப் புழக்கம் காரணமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் அவர்களை அறியாமலே ஒரு பொருளாதார வளர்ச்சியை நாம் பார்க்கின்றோம். அந்தப் பொருளாதார வளர்ச்சியை சுற்றுலா மூலமும் பெற முடியும். பல கோடி ரூபாய் சில நாடுகளில் சுற்றுலா மூலமாக வருமானம் வருகிறது என்ற கணக்கே சொல்லப்படுகிறது. அத்தகைய கணக்கையெல்லாம் பார்க்கும் போது நமக்கும், நம்முடைய நாட்டில், குறிப்பாக இந்தியாவில் சிறப்பாக தமிழ் நாட்டில் அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டால் இன்னும் சுற்றுலா வேக வேகமாக, வலிமையாக, வளமாக வளர்ந்து நாட்டை, மக்களை வளமுடையவர்களாக ஆக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


அந்த வகையில் இந்தச் சுற்றுலா பொருட்காட்சி பயன்பட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதை நல்ல முறையில் ஆண்டு தோறும் நடத்தி வருகின்ற அமைச்சர் சுரேஷ் ராஜனை நான் பாராட்டுகிறேன். மேலும், மேலும் ஊக்கத்தோடு இந்தச் சுற்றுலா பொருட்காட்சியை சிறப்புற நடத்த வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்து சுற்றுலா நிகழ்ச்சிக்கு அமைச்சர் பெருமக்கள் அதிகம் பேர் வர வேண்டும். அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தால், அனைவரும் வந்திருப்பார்கள் என்பதை நான் அறிவேன் என்றார்.

No comments:

Post a Comment