ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் 15.12.2010 அன்று நடக்கும் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991&1996ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு மீறி
ஸி66.65 கோடி சொத்து சேர்த்ததாக, வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும், சென்னையில் நடந்தால் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாது என்று அமைச்சர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பெங்களூர் தனிநீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆவணங்கள் தமிழில் இருந்தன. அவைகள் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டன. ஆனால் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டபோது, தவறுகள் இருப்பதால் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின் கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணைக்கு தடை வேண்டாம். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அவ்வப்போது சரி செய்து கொள்ளலாம். விசாரணை தொடர்ந்து நடக்கலாம் என்று உத்தரவிட்டனர். இதனால் தனி நீதிமன்ற விசாரணைக்கு தடை கேட்டு, ஜெயலலிதா சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் தல்வீர்பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் முன் 14.12.2010 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ் ஆஜராகி, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை சென்னை தனிநீதிமன்றத்தில் நடக்கும் போது, சாட்சிகளிடம் தமிழில் வாக்குமூலம் பெறப்பட்டது. அவர்களிடம் தமிழில் குறுக்கு விசாரணையும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பிறகு அனைத்து ஆவணங்களும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
தமிழில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்கள், குறுக்கு விசாரணை ஆகியவை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததில் சில குளறுபடிகள் நடந்துள்ளது. எனவே பெங்களூர் தனிநீதிமன்றத்தில் 15.12.2010 அன்று நடக்கும் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், 15.12.2010 அன்று ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வருகிறாரா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வக்கீல் நாகேஸ்வரராவ், மனுதாரர் ஜெயலலிதா வராவிட்டாலும் சாட்சி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஜெயலலிதாவுக்கு தமிழும், ஆங்கிலமும் தெரியும். எனவே பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது. தமிழ், ஆங்கிலம் தெரிந்தவரை உதவிக்கு தனி நீதிமன்றம் நியமித்து கொள்ளலாம் என்று தீர்ப்பு கூறினர்.
இதனால் 15.12.2010 அன்று முதல் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும்.
42 சாட்சிகளிடம் விசாரணை
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, உறவினர் இளவரசி, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 259 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இப்போது குறைக்கப்பட்டு கடைசியாக 42 சாட்சிகளிடம் விசாரணை நடத்தலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டதால், நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது
No comments:
Post a Comment