வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்யும் 50 எஸ்.ஐ., ஏட்டுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது ஜனாதிபதி மற்றும் முதல்வர் பதக்கம் வழங்கப்படும். 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான பதக்கம் 561 பேருக்கு 22.12.2010 அன்று வழங்கப்பட்டது. முதல்வர் கருணாநிதி பதக்கங்களை வழங்கி பேசியதாவது:
சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, தமிழகக் காவல்துறையை மிகவும் நவீனமயமாக்கி அதன் செயல்திறனை அதிகப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
தமிழகக் காவல் துறை தனது சீரிய செயல்பாட்டினால், பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து தக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மனித நேயத்தோடு மக்கள் பிரச்சினைகளைப் பாரபட்சமின்றி அணுகி, கடந்த நான்கரை ஆண்டுக் காலமாக இந்த மாநிலத்தில் சாதி, சமய மற்றும் அரசியல் பூசல்கள் எதுவும் இல்லாமல் பொது அமைதியைப் பேணி பாதுகாத்து வருகிறது.
இதன் காரணமாக வெளிநாட்டு அன்னிய முதலீடுகள், தொழில் முதலீட்டாளர்கள், பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு மாநிலத்தில் முதலீடு செய்ய முன்வருவதால், தமிழகம் பொருளாதாரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகிறது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப காவல் துறையினரின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமென்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, காவல்துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை காவல் துறை இயக்குனரே நிரப்பிக் கொள்ளும் விதத்தில் ஆணையிட்டு, தற்போது காவல் துறையில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வழிவகுத்துள்ளது.
2006ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்ற பின், 15 ஆயிரத்து 84 காவலர்கள், 950 உதவி ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், 1095 உதவி ஆய்வாளர்கள், 8 ஆயிரத்து 944 காவலர்கள், 486 சிறைக் காவலர்கள், 630 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 155 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன.
இத்துடன், உள்நாட்டுப் பாதுகாப்பில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில், மாநில நுண்ணறிவுத் துறையில், ஐஜி அந்தஸ்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவுக்கென தனியா ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டு, நுண்ணறிவுப் பிரிவில் 600 புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அப்பிரிவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
கூலிப் படைகளின் நடவடிக்கைகள், ஆள்கடத்தல், ஹவாலா பணப் பரிவர்த்தனை, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களைச் செய்யும் குழுக்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து, நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தனியாக ‘திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவுப் பிரிவு’ ஒன்று அமைக்கப்பட்டு, அதுவும் செயல்பட்டு வருகிறது.
காவல் பணியாளர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அந்தந்த காவல் லையங்களிலேயே வழங்கப்பட்டு வந்ததற்கு மாறாக, காவலர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் 50 சதவீத விலையில் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் முறை 1.10.2008 முதல் இந்த அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காபீட்டுத் திட்டம் காவல் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 4 ஆண்டுத் தொகுப்பில் ரூ.2 லட்சம் வரை மருத்துவ செலவுத் தொகை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
காவல்துறையில், அலுவலக மற்றும் குடியிருப்பில் இருந்த வந்த குறைகளைப் போக்கும் விதத்தில் தமிழக அரசு, கடந்த நான்கரையாண்டுகளில் 859 கோடியே 26 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 59 அலுவலகக் கட்டிடங்கள், 284 காவல் நிலையங்கள், 11 ஆயிரத்து 30 குடியிருப்புகள், 13 தங்குமிடங்கள் ஆகியவற்றை புதியதாகக் கட்டுவதற்கு அனுமதித்து, இதுவரை 52 அலுவலகக் கட்டடங்கள், 123 காவல் நிலையக் கட்டிடங்கள், 8,254 குடியிருப்புகள், 6 தங்குமிடங்கள் ஆகியவற்றைக் கட்டி முடித்துள்ளது.
தமிழகக் காவல் துறையினர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி குற்ற நிகழ்வுகளைத் தடுத்து வருகின்றார்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைதுசெய்து தண்டனைகள் பெற்றுத் தருவதிலும் சிறப்பாகச் செயல்படுகின்றார்கள். இதன் காரணமாக குற்ற நிகழ்வுகள் குறைந்து வருகின்றன. குற்ற வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தமிழக காவல் துறையினரின் பணிகள் பாராட்டுக்குரியவை.
உதாரணத்திற்கு கூற வேண்டுமானால், அசோக்நகரில் டாமின் நிறுவன முன்னாள் தலைவர் டாக்டர் சரவணன், அவரது குடும்ப உறுப்பினர் கொலை வழக்கு, எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கு, திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு, சென்னை பெரம்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் கடத்தல் வழக்கு, அரியலூர் காங்கிரஸ் எம்எல்ஏவின் தம்பி மகன் தர்மதுரை கடத்தப்பட்ட சம்பவம், சென்னை போத்தீஸ் துணிக் கடை ஊழியர்களை வழிமறித்து, ரூ.81 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, சிறுவன் ஆதித்யா கொலை வழக்கு, மதுரையில் மாணிக்கம் செட்டியார் கொலை வழக்கு, சேலம் வாசம்பாடி காப்பித் தோட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்புடைய சந்தன மரக் கட்டைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, சென்னை துரைப்பாக்கம் எச்.டி.எப்.சி., ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ. 20 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் களவு போன வழக்கு, கோவையில் பள்ளிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கு, சென்னை முகப்பேர் பள்ளி மாணவன் கீர்த்திவாசன் கடத்தப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்து, தமிழக காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டு பொது மக்களின் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
தமிழகக் காவல்துறையினர் ஆற்றிவரும் அரும்பணிகளை ஊக்குவித்திடும் நோக்கில், ஆண்டுதோறும் அண்ணா பதக்கம், இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் போன்ற பல்வேறு பதக்கங்களை வழங்கி, இந்த அரசு அவர்களை பாராட்டி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கொலை, ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்களாகிய கற்பழிப்பு, மானபங்கம், வரதட்சணையில் மரணம் போன்ற வன்செயல்களைத் தடுப்பதிலும், நடைபெற்ற வன்செயல் குற்றங்களைத் திறம்படப் புலனாய்வு செய்து, உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து, அவர்களை நீதிமன்றத்தின் முன்நிறுத்தி, தண்டனை வாங்கித் தருவதிலும் முனைப்போடும் சிறப்போடும் செயல்படும் காவலர்கள், தலைமை காவலர்கள், எஸ்.ஐ.க்கள், புலனாய்வு அதிகாரிகள் உட்பட அனைவரையும் போற்றும் வகையில், ஆண்டுதோறும் அவர்களில் 50 பேரை தேர்வு செய்து, அவர்களுக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொற்கிழிகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பொற்கிழிகள் தமிழக அரசின் பதக்கம் என்கிற பெயரால் வழங்கப்படும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற காவல் துறை வீராங்கனை சீனாவில் நடைபெற்ற 16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், கபடிப் போட்டியில் இந்திய கபடி குழு முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றது. அக்குழுவில் தமிழகத்தின் சார்பில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஐந்தாம் அணியில் தலைமை காவலராகப் பணிபுரியும் கவிதா பங்கேற்று சிறப்பாக விளையாடியுள்ளார். அவரது திறனை பாராட்டி, அவருக்குத் தமிழக அரசின் சார்பில், உங்கள் அனைவரின் முன்னிலையில் ஊக்கப் பரிசாக ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறைக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கவிதாவுக்கு என்னுடைய பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
வாத்திய குழுவினருக்கு முதல்வர் தலா ஆயிரம் ரூபாய் தந்தார் :
இங்கிலாந்தில் வழங்கப்படும் சட்டநாள் விருது, உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட்டுக்கு வழங்கப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதி, ஜாபர்சேட்டுக்கு வழங்கினார். விருது நிகழ்ச்சிக்குப் பிறகு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அதில் சிறப்பாக இசை இசைத்த வாத்தியக்குழுவினருக்கு தலா ஆயிரம் ரூபாயை முதல்வர் கருணாநிதி தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
No comments:
Post a Comment