நமது இனமானப் பேராசிரியர் மானமிகு, மாண்புமிகு க.அன்பழகனாருக்கு இன்று முதல் 89 வயது துவக்கம்-இந்த 89இல் அவருக்குள்ள பொதுவாழ்வு என்பது 75 ஆண்டுகள்! - ஒரு முக்கால் நூற்றாண்டு!
இதில் இதைவிடத் தனிச்சிறப்பு-ஒரே கொள்கை லட்சியத்துடன் வாழ்கிறார் அவர் - மனநிறைவுடன்!
எதையும் துணிவுடன், தனித்தன்மையுடன் அலசி ஆராய்ந்து, தேர்ந்த முதிர்ந்த கருத்துகளை முத்து எடுத்தது போல, சொல்லத் தவறாத கண்ணியத்தின் முழு உருவம் நம் பேராசிரியர்.
பெரியார் - அண்ணா கருத்துகளை, லட்சியங்களை எங்கும் பரப்பிடத் தவறாத கடமை வீரராகத் தன்னை இயக்கிக் கொண்டிருக்கும் தன்னிகரற்ற தகைமை சான்ற தலைவர் ஆவார்!
திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்த தெவிட்டாத கொள்கைத் தேனமுது.
தனது வளமான சிந்தனை, அளவான பேச்சுகள், தெளிவான எழுத்துகள் எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் சுயமரியாதைச் சூரணத்தைக் குழைத்துத் தருவதையே தமது அன்றாடப் பணியாகக் கொண்டு தொண்டு செய்யும் கோமான்!
எளிமை, இனிமை, உண்மை என்று அவருக்குப் பட்டதை எடுத்துரைக்க எங்கும் எப்போதும் தவறாமை - இவைதாம் பேராசிரியர்தம் தனித்தன்மைகள்.
அவர்கள் மாணவப் பருவந்தொட்டுத் தொடங்கிய தொண்டறம் - திராவிடர் இயக்கக் கொள்கை பரப்பும் ஓயாத பணி - இன்றும் தொய்வின்றித் தொடருகிறது!
அவர் நிறைகுடம்; எனவே தளும்புவது இல்லை. அய்யா தந்தை பெரியார், அவர்தம் தலைமகன் பேரறிஞர் அண்ணா, அவர்கள் வழி ஆட்சியை நடத்தி பொற்காலம் சமைத்துக் கொண்டிருக்கிற மானமிகு. முதல்வர் கலைஞர் - இவர்களிடத்தில் பேராசிரியர் கொண்டுள்ள ஈடுபாடு இந்த 89 வயதில் அவரை மேலும் முதுமையாக்காமல், முதிர்ச்சியாக்கி, முறுக்கேறிய இளமையைத் தந்து கொண்டுள்ளது!
திராவிடர் இயக்கத் தத்துவங்களுக்கு அன்றாடம் வகுப்பெடுக்கும் அவர் ஓர் ஈடு இணையற்ற பேராசிரியர். அவர்கள் தந்தை பெரியார் வாழ்ந்த வயதையும் தாண்டி நூற்றாண்டு கடந்தும் வாழவேண்டுமென உலகத் தமிழர்கள் சார்பில், திராவிட இன உணர்வோடு வாழ்த்துகிறோம்.
பல்லாண்டு வாழ்ந்து
பகுத்தறிவு நெறி பரவ உழைக்கவேண்டும்!
என்பதே எங்களின் அன்பு வேண்டுகோள்.
வாழ்க! வாழ்கவே!
தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment