40 ஆண்டுகால ஆய்வறிவுடன்... கூட்டாட்சியியல் கோட்பாடு பற்றியும், இன்றைய கூட்டாட்சியியலில் நிலவும் அதிகாரக் குவிப்பு குறித்தும் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் மு. நாகநாதன் விரிவாக எழுதியிருக்கும் "இந்திய கூட்டாட்சியியல் - அதிகாரக் குவிப்பா? பகிர்வா?' என்னும் நூல் வெளியீட்டு விழா சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் 13.12.10 அன்று மாலை நடைப்பெற்றது.
இவ்விழாவில் நிதியமைச்சர் க.அன்பழகன் நூலை வெளியிட, அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.நூலாசிரியர் மு.நாகநாதன் நூல் அறிமுகவுரையாற்றினார். திருமாவளவன் சிறப்புரையாற்ற வழக்கறிஞர் விடுதலை நூல் குறித்த ஆய்வுரையினை வழங்கினார். நிதியமைச்சர் அன்பழகன் தலைமை உரையாற்றினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய திருமாவளவன், “எல்லாவற்றிற்கும் தமிழகம்தான் முன்மாதிரியாக திகழ்கிறது. திராவிட நாடுகள் என்று கூறப்படும் கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகியன இந்து மயம் அல்லது சமஸ்கிருத மயமாகிவிட்டன. ஆனால் தமிழகம் மட்டும்தான் தனித்து திகழ்கிறது. திராவிட நாடு என்றாலோ, தெற்கு என்றாலோ அது இன்று தமிழகம் மட்டும்தான்.
மத்தியில் உள்ள கூட்டாட்சியியலில் நிலவும் அதிகாரக் குவிப்பால் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவருகின்றன.தேசிய இனஉரிமைகளும்,ஈழத்தமிழர் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. குறைந்த அளவே உள்ள சிறுபான்மை இன மக்களுக்கும், அவர்களுக்கென்று ஒரு தனி நாடு உள்ளது. ஆனால் உலகமெங்கும் பரந்து, படர்ந்து, விரிந்து, வாழும் 10 கோடிக்கும் மேல் உள்ள தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு இல்லை. எனவே ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஒரு நாடு வேண்டும். அதுதான் தனித் தமிழ் ஈழம்.
ஐ.நா.சபையில் பலநாட்டுக்கொடிகள் பறப்பது போல் தமிழன் கொடி பறந்தாக வேண்டும். அதை வென்றெடுக்கவே தமிழர் இறையாண்மை என்ற கருத்தை முன்நிறுத்த வேண்டியுள்ளது” என்று தமிழ் உணர்வுடன் உரையாற்றினார்.
மத்தியில் அதிகாரங்கள் குவிதல் ஆபத்து - நிதியமைச்சர் க. அன்பழகன்
தமிழனுக்கான ஒரு நாடு இருக்கவேண்டும் என்ற உணர்வினால், தமிழர் இறையாண்மை என்ற எல்லை வரைசென்று விட்டார் திருமாவளவன். எங்கள் இளமைக் காலத்தில் இது குறித்து ஏற்பட்ட கனவை நாங்கள் மாற்றிக்கொண்டோம். திருமா அதை மாற்றிக்கொள்ளாமல் இருக்கவேண்டும்.
பிரிவினையை வலியுறுத்தி வந்த அண்ணா, பிறகு பிரிவினையை கைவிட்டார். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதா அல்லது பிரிவினை கேட்பதா என்ற நிலை அண்ணாவுக்கு ஏற்பட்டபோது, இந்த இயக்கத்தை வளர்த்த ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் பிரிவினை கேட்பதில் என்ன பொருள் உள்ளது என்று அந்தக் கோரிக்கையை கைவிட்டார். இது குறித்து ‘எண்ணித் துணிக’ என்றத் தலைப்பில் “நாங்கள் பிரிவினை கோரவில்லை. உன்னோடு(மத்திய அரசோடு) சேர்ந்து வாழ்வதற்கு இப்போது எங்களுக்கு தடையில்லை. ஆனால், நீ எங்களை அடிமைப்படுத்துவதை எங்களால் ஏற்கமுடியாது” என்று விளக்கம் அளித்துள்ளார். அண்ணாவின் இந்தக் கோட்பாடுதான் திமுகவின் கொள்கைக்கு அடிப்படையானது.
தமிழரை தமிழராக்கவே பெரியார் பாடுபட்டார். தமிழர், தமிழராக வாழ முடியும் என்று எடுத்துக்காட்டுவதற்காகவே அண்ணா பாடுபட்டார். தமிழ் நம் தாய்மொழி என்ற உணர்வை நிலைநாட்டவே பாரதிதாசன் பாடுபட்டார். ஆனால், இந்த அடிப்படைக் கருத்துக்கள் மக்களை முழுமையாகச் சென்று சேர்ந்ததா என்பது இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளன.
திருமாவளவன் போன்றோர் பிரிவினை பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், மக்கள் பிரிவினையை ஏற்கமாட்டார்கள் என்பது திருமாவளவன் போன்றோர்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால்தான் தெரியவரும். தமிழன், தமிழன் என்கிறோம். ஆனால் இன்று தமிழன் என்ற உணர்வுடன் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நாங்கள் தமிழர் என்று பெருமை உணர்வோடு கூறுவோர் 45 சதவீதத்தை எட்டினால் பெரிய சாதனைதான்.
குழி பறித்து நம்மை வீழ்த்துகின்ற சக்திகள்தான் நம்மைச் சுற்றி இருக்கின்றன. தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி நடத்துவதா என்று கேட்கின்றவர்கள் தான் நாட்டில் உள்ளனர்.தமிழாய்ந்த தமிழ்மகனே தமிழ் நாட்டில் முதல்வராக இருக்க வேண்டும் என்று பாவேந்தன் பாரதிதாசன் கூறியுள்ளார். அதற்கு கலைஞர்தான் சிறந்த உதாரணம்.
கூட்டாட்சி கொள்கை என்பது அமெரிக்காவில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு கூட்டாட்சி ஏற்படும் முன்னர், அமெரிக்காவில் சுதந்திரமாக இருந்த ஒவ்வொரு மாநிலமும் சேர்ந்து கூட்டாட்சியை ஏற்படுத்தின. ஆனால் இந்தியாவில், ஆங்கிலேயர் காலத்தில் ஒரு வைசிராயின் தலைமையில் தனித்தனியாக இருந்த மாகாணங்களின் நிர்வாகம் ஒன்றாக இணைக்கப்பட்டு கூட்டாட்சி ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்தியில் அரசு அமையவில்லை. ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டுமே கொண்ட அரசாக அது இருந்தது.உத்தரப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் முதல்வராக வர வேண்டும் என்ற யோசனையை நேரு ஏற்கவில்லை. இதனால்தான் பாகிஸ்தான் தனி நாடாகவேண்டும் என்ற பிரிவினை கோரிக்கை வலுப்பெற்றது.
இப்போது மத்திய அரசு, மாநிலங்களை மதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகநாதன் தம் நூலில் குறிப்பிட்டிருப்பது போல், கடந்த காலங்களில் மத்திய அரசு 106 முறை மாநில அரசுகளைக் கலைத்தது. ஆனால், இப்போது அது முடியாது. மாநிலங்கள் நினைத்தால் மத்திய அரசை கவிழ்க்க முடியும் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளின் ஆதரவுடன் தான் மத்தியில் அரசு நிலைத்துள்ளது. இதை உணர்ந்து அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். முன்பு மத்தியில் ஒரே கட்சி ஆட்சியிருந்ததால் மாநிலங்களை மதிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அத்தகைய நிலை இல்லை. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது இன்று இல்லாவிட்டாலும் நாளை நடைமுறையில் கொண்டுவரப்பட வேண்டியதே.
கூட்டாட்சி கொள்கையின்படி மத்தியில் அதிகாரங்கள் குவிந்துகொண்டே போகக் கூடாது. அது ஆபத்தானது. இதனால்தான் இலங்கையில் பெரும் போராட்டம் உருவாகி இப்போதைய பேரழிவு ஏற்பட்டது. இதேபோல், தெலுங்கானா போராட்டம் தொடர்கிறது. அவர்கள் ஏற்கெனவே சமஸ்தானமாக இருந்த காரணத்தால் அந்த உணர்வு மேலோங்கி தெலுங்கானா வேண்டுமென்று போராடுகின்றனர். இது தவறு என்று எனக்கு தோணவில்லை. மாகி, ஏனாம் போல் தனி தெலுங்கானா கோருகின்றார்கள். டையு, டாமன், பாண்டிச்சேரி, போன்றவை பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டதற்காகவே அங்குள்ள மக்களின் உரிமைகளுக்கு தனிச்சிறப்பு அளிக்கப்பட்டு, தனி யூனியன்களாக உள்ளன.
மத்தியில் கூட்டாட்சி இல்லை. கூட்டணி ஆட்சிதான் இருக்கிறது. அதுவும்கூட ஒற்றை ஆட்சியாகவும் அமைந்துவிட்டது. நாட்டின் இப்போதைய நிலை என்பது, இந்தியன் அல்லாத இந்தியா. தமிழன் அல்லாத தமிழ் நாடு. அதாவது தமிழன் என்ற உணர்வு அல்லாத தமிழ் நாடு. இந்து அல்லாத இந்து மதம். ஏன்? நாடு அல்லாத நாடு என்றே கூறலாம். இந்தியா இன்னும் வெள்ளைக்காரன் ஆண்ட தேசமாகவே இருக்கிறது.
No comments:
Post a Comment