2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. `சம்மன்' அனுப்பி இருந்தது. அதை ஏற்று விசாரணைக்காக அவர் டெல்லி சென்றார்.
அங்குள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தில் அவரிடம் கடந்த வெள்ளிக்கிழமை (24.12.2010 ) மற்றும் சனிக்கிழமை (25.12.2010) ஆகிய 2 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். முதல் நாள் 9 மணி நேரமும், மறுநாள் சுமார் 7 மணி நேரமும் விசாரணை நடந்தது.
சி.பி.ஐ. விசாரணைக்காக டெல்லி சென்றிருந்த ஆ.ராசா அங்கிருந்து விமானம் மூலம் நேற்று (28.12.2010) சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் நிருபர்கள் அவரை சந்தித்து, விசாரணை குறித்து கருத்து கேட்டனர்.
அப்போது அவர், ‘`சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை கூறினேன். சி.பி.ஐ. போன்ற எந்த ஒரு விசாரணை அமைப்பின் விசாரணைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன்’’என்று தெரிவித்தார்.
விசாரணை பற்றிய விவரங்களை கேட்ட போது, ‘அதுபற்றி எதுவும் சொல்ல முடியாது’என்று கூறி விட்டார்.
No comments:
Post a Comment