கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, December 6, 2010

ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழலா? இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் ஊழல் செய்ய முடியுமா? - கலைஞர் பேச்சு


கலைஞரின் ‘‘இளைஞன்’’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா 05.12.2010 அன்று நடந்தது. இவ்விழாவில்முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை:


‘‘இளைஞன்’’ படத்தினுடைய பாடல்கள் வெளியிடுகின்ற இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று அருமைத்தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வெளியூரிலிருந்து தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, இந்தத் தேதியிலே உங்களுக்கு வேறு ஏதும் அலுவல் இருக்கிறதா என்று கேட்டு, அவர் இல்லை என்று சொன்ன பிறகு, இந்த நாளில், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று படத் தயாரிப்பாளர்கள் விரும்புகிறார்கள், படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தம்பி விஜய் விரும்புகிறார், நானும் அவர்களைப் போலவே விரும்புகிறேன்.


எனவே, அந்த விழாவிலே நீங்கள் கலந்து கொண்டு, பாடல்களை அடங்கிய அந்தத் தொகுப்பின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட போது, சிறிதும் கூட அதற்காக ஒரு துளி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல், நிச்சயமாகக் கலந்து கொள்கிறேன் என்று என்னிடத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சொன்னார்கள்.

அவருக்கு கலைத்துறையின் மீது உள்ள அன்பு, பற்று - இது மாத்திரம் காரணமல்ல. என் மீது உள்ள நட்புணர்வு, அதுவும் அதற்கு ஒரு காரணம் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். அவர் ஆற்றிய உரையைக் கேட்டீர்கள். ஏறத்தாழ இங்கு நடைபெற்ற இந்த விழாவில் அவர் உள்ளிட்ட அனைவரும் ஆற்றிய உரை, ஒரு சிறப்புக் கூட்டம் போலவே இது அமைந்தது. பல்வேறு தலைப்புகளில் பலரும் பேசியது போலத்தான் இந்த விழா அமைந்திருக்கின்றது.


நாம் அவரை அழைத்திருப்பது போலவே, இன்றைக்கு மாதிரிப் படம் போல இரண்டு மூன்று பாடல்களையும், இரண்டு மூன்று காட்சிகளையும் காட்டும்பொழுது அதைப் பார்த்து விட்டு என்ன சொல்வாரோ என்று நான் கருதினேன். ஆனால், எந்தப் படமானாலும், அது வெற்றிகரமாக ஓடும் அல்லது ஓடாது என்று தீர்ப்பளிக்கக்கூடிய கலையுலக அனுபவம் உள்ளவர்களிலே மிகச் சிறந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நம்பிக்கையில் அவர் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் - கருத்து சொல்ல வேண்டும் என்று சுயநலத்தின் காரணமாக அவரை நான் அழைத்தேன்.


அந்த சுயநலத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அவர் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக ஆக்கியிருக்கிறார்


. தம்பி நம்முடைய பா.விஜய் நன்றி கூறியதைப் போல, நானும் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என்னுடைய நன்றியைக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.


நான் விஜய் அவர்களுக்குச் சொல்வேன். சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு இருக்கின்ற பணிவு, கனிவு, அடக்கம், அவர் காட்டுகின்ற அமைதி, இவைகள்தான் தம்பி விஜய் உனக்கும் வாழ்க்கையிலே அமையவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.


விஜய்யை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் எனக்குப் பழக்கம். அவருடைய பாடல்களைக் கேட்டு நான் பூரிப்படைந்திருக்கின்றேன்.

இப்போது முரசொலி பத்திரிக்கையில் வாரந்தோறும் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையிலே எழுதி வருகிறார் தம்பி விஜய். அவைகளைப் படிக்கும் போது, எனக்கு என் வாழ்க்கை வரலாறு இவ்வளவு சிறப்புடையதா என்று எண்ணத் தோன்றுகின்ற அளவிற்கு அது அமைந்திருக்கிறது.


அத்தகைய அருமையான தமிழ் நடையில், எழுச்சி நடையில் விஜய் அந்தக் கவிதையை வாரந்தோறும் தொடர்ந்து எழுதி மக்களுக்கு வழங்கி வருகின்றார். அத்தகைய விஜய் - பா.விஜய் என்று அழைக்கப்படுகின்ற அந்த விஜய் - பாட்டுக்கு மாத்திரம் விஜய் ஆக இருந்தால் போதாது, அவர் கலை உலகத்திற்கும் விஜய் ஆக மாற வேண்டும் என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன்.


எப்படி விஜய்யினுடைய வாழ்க்கை இன்னும் புகழுடையதாக, பொலிவுடையதாக அமைய வேண்டும் என்று நம்முடைய வைரமுத்து அவர்களும், வாலி அவர்களும் விரும்புகிறார்களோ, விரும்பி வாழ்த்தினார்களோ, அதே அளவிலேதான் தம்பி விஜய்யை வாழ்த்த கடமைப்பட்டிருக்கின்றேன்.


விஜய் இங்கே பேசும்போது, என்னைப் பலபடப் பாராட்டினார். பாராட்டக் கடமைப்பட்டவர் என்பதற்காக அல்ல - அப்படிப் பாராட்டினால்தான் எனக்கு நன்றி தெரிவித்தாகப் பொருள் என்று அவர் கருதியிருப்பாரேயானால், நான் அவருக்குச் சொல்லிக் கொள்கிறேன் - உன்னைப் போன்ற பல தம்பிமார்கள் கலையுலகத்திலே பிரகாசிக்கவேண்டும், வரவேண்டும், புகழ்பெற வேண்டும் என்று கருதுகின்றவர்களிலே நான் முதல் ஆள் என்பதை தம்பி விஜய்க்குத் தெரிவித்து கொள்கிறேன்.


தமிழ்நாட்டில் ஏறத்தாழ பேசாப் படம் ஓடிய காலத்திலிருந்து கலைத்துறையில் நான் இருக்கிறேன். எங்கள் திருவாரூரில் ஒரு தியேட்டருக்குப் பெயரே கூட ‘‘கருணாநிதி’’ தியேட்டர்தான். என் பெயரை வைக்கவில்லை - கருணாநிதி என்பது திருவாரூரிலே ஒரு சாமியின் பெயர். அந்தப் பெயரில் அமைந்த அந்த தியேட்டரில் நான் தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறேன்.




ஏனென்றால், பெஞ்சு டிக்கெட்டு வாங்க எனக்கு வசதியில்லை, வாய்ப்பில்லை என்றல்ல - தரையிலே உட்கார்ந்தால்தான் ஐந்தாறு பேராக நண்பர்களாக உட்கார்ந்து படம் பார்க்க முடியும் என்பதற்காக! உடனடியாக யாராவது சினிமாவுக்கு டிக்கெட் வாங்கக்கூட வசதியில்லாத கருணாநிதி என்று சொல்லக்கூடும். அவைகளையெல்லாம் நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.


செல்வச் சீமான் வீட்டிலே பிறந்தேன், தங்கத் தாம்பாளத்தோடு தங்கத் தட்டிலே ஒரு வட்டோடு - தங்கக் கரண்டியோடு பிறந்தேன் நான் என்று சொல்லிக் கொள்ளவில்லை. ஏழையாகத்தான் பிறந்தேன், ஏழையாகத்தான் வாழ்ந்தேன், ஏழைகளோடுதான் நட்பு கொண்டேன், ஏழைகளுடைய வாழ்வுக்காத்தான் இன்றைக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் எனக்குள்ள பெருமை. (கைதட்டல்)


நான் ஏழையாகப் பிறக்காமல், பணக்காரனாகப் பிறந்திருந்தால், செல்வச் சீமான் வீட்டுப் பிள்ளையாகப் பிறந்திருந்தால், இப்படியெல்லாம் ஏழைகளைப் பற்றிக் கவலைப்படத் தோன்றியிருக்குமா? அரிசி விலை இந்த அளவிற்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறியிருக்க முடியுமா? என்றெல்லாம் நான் எண்ணிப் பார்க்கின்றேன்.



ஆகவே, அந்தக் காலத்திலே நான் படம் பார்த்த போது - தரையிலே அமர்ந்து படம் பார்த்த போது, உங்களுக்குச் சொல்லுகிறேன் - தம்பி ரஜினி அவர்களுக்கும் தெரிந்திருக்கும் - சொல்லியிருப்பார்கள் - எனவே சொல்லுகிறேன். இங்கே உள்ள உங்களில் பல பேருக்குத் தெரிந்திருக்காது. தரையில் அமர்ந்து படம் பார்த்தால் முதல் காட்சிக்குத்தான் போக வேண்டும். இரண்டாவது காட்சிக்குப் போக முடியாது. ஏனென்றால், இரண்டாவது காட்சிக்குப் போகும்போது, முதல் காட்சிக்கு வந்தவர்கள் துப்பிய வெற்றிலைப் பாக்கு எச்சில் அங்கே உருண்டை, உருண்டையாகக் கிடக்கும்.


நாம் தப்பித்தவறி கையை வைத்து தடவிப் பார்த்தால், நம்முடைய கையெல்லாம் யாரோ வாயிலே வெற்றிலை போட, நம்முடைய கையெல்லாம் சிவந்திருக்கும்.

எனவே, இரண்டாவது காட்சிக்குப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போக வேண்டும். அப்படிப் பட்ட தியேட்டர்கள் - மணல் பரப்பி அதிலே அமருகின்ற தியேட்டர்கள் அந்தக் காலத்தில் இருந்தபோதே படம் பார்த்திருக்கிறேன். பேசா படம் பார்த்திருக்கிறேன்.


பேசாப் படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்குப் பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருப்பான். ‘‘அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்’’ என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான். ‘‘பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’’ - என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ‘‘பல்லுக்குப் பல் இருகாதம்’’

என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா - பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்குக் கேட்கிறார்களா என்ன?


ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை - ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம் - அன்றைக்கு ‘‘பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’’ என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டுதான் படத்தைப் பார்த்தோம்.


அப்படிப் படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன். படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது.


எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும். எப்படி ‘‘எந்திரன்’’ படத்திலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், ஒரு இரும்பு மனிதனாக - ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப் போல, செய்ய முடியுமே தவிர, தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்ய முடியாது என்பதை அறிவுப்பூர்வமாக இன்றைக்கு உணருகிறோம் - அதைக் காட்டுகிறோம். அதை உணருகின்ற நிலை இன்றைக்கு நாட்டிலே வந்திருக்கின்றது.


அப்படிப்பட்ட அந்தக் காலக்கட்டத்திலிருந்து, இன்றைக்கு ரஷ்யாவிலே நடைபெறுகின்ற காட்சிகளை - அமெரிக்காவிலே நடைபெறுகின்ற காட்சிகளை - ஏன், அங்கே எடுத்த அற்புதமான காட்சிகளை இங்கே காணுகிறோம். அதைக் காண வைக்கின்ற டெக்னிசியன்ஸ் இன்றைக்கு இருக்கிறார்கள்.

இயக்குநர்கள் இருக்கிறார்கள். நடிகர்கள் இருக்கிறார்கள். கலைஞர்கள் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்.


அப்படி வாழுகின்ற இந்தக் காலத்தில், இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. வெளிவரப் போகிறது. ‘‘தமிழர் திருநாள் வெளியீடு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். எந்தப் படமும், என்றைக்கு வெளியீடு என்று சென்சார் ஆவதற்கு முன்பு சொல்ல முடியாது. அதனால், ‘‘தமிழர் திருநாள் வெளியீடு’’ என்று குறிப்பிட்டிருந்தாலும்கூட, படம் வெளிவருகின்ற நாள் தமிழனுக்குத் திருநாள் என்ற காரணத்தால், இது தமிழர் திருநாள் வெளியீடு என்று அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று கருதுகின்றேன்.


இந்தப் படத்தை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு வர முயற்சி செய்த விஜய் அவர்களுக்கும், அதைப் போல இந்தப் படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சுரேஷ் கிருஷ்ணாவை இந்தப் படத்திற்கு இயக்குநர் என்று சொன்ன போது, நான் அவரைப் பற்றி ரஜினியிடம்தான் கேட்டேன். சுரேஷ் கிருஷ்ணாவை இயக்குநராகப் போட்டிருக்கிறார்களே, அவர் எப்படி? என்று கேட்டேன். அதற்கு ரஜினி, பிரமாதமாகச் செய்வார், அவர்தான் ஏற்கனவே பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்களையெல்லாம் எடுத்தவர், நிச்சயமாக வெற்றிகரமாக இந்தப் படத்தை அவர் செய்து கொடுப்பார் என்று சொன்னார்கள். ரஜினியின் வாக்குப் பொய்க்கவில்லை. இல்லையா என்பதை தமிழர் திருநாள் அன்று தெரிந்து கொள்வீர்கள். பொய்க்காது - நிச்சயமாகப் பொய்க்காது. இந்தப் படம் வெற்றிகரமாக நடைபெறும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கின்ற அனைவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கே குஷ்பு சுந்தர் பேசும்போது சொன்னார்கள் - முதலமைச்சர் இந்தப் படத்திலே வாய்ப்பு அளித்ததற்காக நன்றி என்று குறிப்பிட்டார்கள். இந்தப் பாத்திரத்தை ஏற்று, குஷ்பு நடிக்க முன்வந்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் குஷ்பு இந்த வேடத்தைத் தாங்க வேண்டும் என்று நான் கருதியதற்குக் காரணமே, ‘‘பெரியார்’’ படத்திலே மணியம்மையார் வேடத்திலே பார்த்து, இதற்கு தகுந்தவர் குஷ்புதான் என்று சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு, இந்தப் படத்திலே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னதைப் போல, ரஷ்ய நாட்டின் நாவலை முழுமையாகத் தழுவி அல்ல - பின்பற்றி அல்ல - அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்தக் கதையில் வருகின்ற முக்கியமான கட்டங்களையெல்லாம் கொஞ்சமும் விடாமல் இந்தப் படத்திலே இணைத்து வசனம் எழுதியிருக்கின்றேன்.


நான் பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன். பெரியாரை, அண்ணாவை, என்னுடைய இளமைக் காலத்திலே சந்திக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆக இருந்திருப்பேன் என்று சொல்லியிருக்கின்றேன். அதற்கு ஏற்ப, இந்தப் படத்தில் நான் என்ன கருதுகின்றேனோ, அவைகளெல்லாம் உரையாடல்களாக வந்திருக்கின்றது. ஆனால், அரசியல் வாடை வீசக்கூடிய உரையாடல்களாக அல்ல - தொழிலாளர்களுடைய உணர்வுகளை - பாட்டாளி மக்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற - அவர்களுடைய கஷ்டங்களை வெளிப்படுத்துகின்ற, உணர்த்துகின்ற கட்டங்களாக இந்தப் படத்திலே அவைகளையெல்லாம் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.


அப்படிப்பட்ட படத்தை இங்கே உங்களுக்கு இந்த நிறுவனத்தின் சார்பாக நான் வழங்குகிற நேரத்தில், இதை வசூலுக்காக - பணம் சம்பாதிப்பதற்காக ஒருவேளை மார்ட்டினும் பெஞ்சமினும் அப்படிக் கருதியிருந்தாலும்கூட - என்னைப் பொறுத்த வரையில், சம்பாதிப்பதற்காக அல்ல. ஏனென்றால், அவர்கள் கொடுத்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டிய வருமான வரியைக் கட்டிவிட்டு, மீதியை முழுவதும் நான் நன்கொடையாகவே தந்துவிட்டேன் என்பதையும் நீங்களெல்லாம் நன்றாக அறிவீர்கள். அதை நான் இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். இதையெல்லாம் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, சொல்லியிருக்கிறேன்.


ரஜினிகாந்த் அவர்கள் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், யாரும் அவரை, அவருக்குக் கொடுத்த பணத்தை யாருக்குக் கொடுத்தார் என்று யாரும் கேட்க மாட்டார்கள். அவர் கொடுப்பார். இரண்டு கைகளுக்கும் இடையே, ஒரு கையால் கொடுத்ததை இன்னொரு கை அறியாமல் அவர் கொடுப்பது எனக்குத் தெரியும்.

என்னைப் பொறுத்த வரையில், ஒரு அரசியல் வாதியாக, ஒரு கட்சித் தலைவனாக இருக்கின்ற காரணத்தால், எனக்கு வருகிற பணம், படத்திலே வருகின்ற பணம் இவைகளெல்லாம் என்னுடைய குடும்பத்திற்கு நேரடியாக தரப்படுகிறது என்ற பொருள் அல்ல. என்னுடைய குடும்பத்தினர் வாழ்வதற்கு இன்று நேற்றல்ல, நான் சேலம் ‘‘மாடர்ன் தியேட்டரில்’’ நம்முடைய வாலி சொன்னதைப்போல, படத்துக்குக் கதை எழுதினேனே, அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் 75 படங்கள் எழுதி, ஒவ்வொரு படத்திற்கும் குறைந்தபட்சம் அந்தக் காலத்திலேயே - பராசக்தி வந்த காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய் எனக்கு ஊதியம் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு எனக்கும் சிவாஜிக்கும் சேர்ந்தாற்போல ‘‘திரும்பிப்பார்’’ படத்திற்காக அவருக்கு இருபதாயிரம் ரூபாய், எனக்கு இருபதாயிரம் ரூபாய் - என்ன வேடிக்கை பாருங்கள். நடிகர் திலகம் சிவாஜிக்கு இருபதாயிரம் ரூபாய் - எனக்கு இருபதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே கொடுத்தார்கள். அந்த இருபதாயிரம் ரூபாயைக் கொண்டுபோய் சூரக்கோட்டையிலே அவர் நிலம் வாங்கினார் - நான் காட்டூரிலே நிலம் வாங்கினேன். அந்த நிலங்கள் அப்படியே இருக்கின்றன. அதைப் பார்க்கின்ற பொழுது இப்போதும் எனக்கு சிவாஜியின் ஞாபகம் வரும்.


தம்பி விஜய்யைப் பொருத்த வரையில் இது அவருக்குப் பெயரும் புகழும், நடிகர் திலகம் சிவாஜியைப் போல, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரைப் போல பெயரும் புகழும் அவருக்குத் தரும்’’என்று பேசினார்.


ரஜினிகாந்த் பேச்சு :


துரையில் அழகிரி சாரோட திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு சென்னை திரும்பியிருந்தேன். அடுத்த நாளே சி.எம். வீட்டுலேருந்து போன். சி.எம். உங்களோட பேச விரும்புறார்னு சொன்னாங்க. அவரும் பேசினார். ‘மதுரைலேருந்து ஜாக்கிரதையா வந்து சேர்ந்தீங்களா?‘ன்னு கேட்டாரு, ஆமான்னு சொன்னேன், ‘டிசம்பர் 5ம் தேதி ஊர்ல இருக்கீங்களா’ன்னு கேட்டாரு. இருக்கேன்னு சொன்னேன். ‘வேறு புரோக்ராம் ஏதும் கமிட் பண்ணியிருக்கீங்களா?’ன்னு கேட்டாரு. இல்லேன்னு சொன்னேன். ‘அப்படீன்னா 5ம் தேதி என்னோட ‘இளைஞன்‘ பட பாடல் வெளியீட்டு விழா இருக்கு. நீங்க வந்தீங்கன்னா சந்தோஷப்படுவேன்’னு சொன்னாரு.

நல்லா நினைச்சுப் பாருங்க. ஒரு நாட்டின் முதல்வர், மூத்த தலைவர், 87 வயசு முதியவர். ‘நீ வா’ன்னு சொல்லியிருந்தாக்கூட வந்திருப்பேன். என்னவொரு நாகரீகம், கல்ச்சர், பொறுமை பாருங்க அவருக்கு. இந்த மாதிரி நல்ல குணம் இருக்கறதாலதான் அவரது 60 வருஷ பொது வாழ்க்கையில மெயின் ரோட்டில போக முடியுது. இல்லேன்னா பைபாஸ் ரோட்டிலதான் போக முடியும். முதன் முறையா கனிமொழி பேச்சை கேட்டேன். ரொம்ப ஆச்சர்யமா இருந்திச்சு. அருமையா பேசினாங்க.
இந்த படத்தோட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, இந்த ரஜினிகாந்தோட இன்னொரு டைமன்ஷனை காட்டினவரு. அண்ணாமலையில நடிச்ச பிறகுதான் அதுமாதிரி கேரக்டர்கள்ல என்னை விரும்ப ஆரம்பிச்சாங்க. ‘பாட்ஷா‘வோட வெற்றிக்கு சுரேஷ்கிருஷ்ணா முக்கிய காரணம். அதே மாதிரி இந்தப் படத்தையும் பிரமாண்டமா உருவாக்கியிருக்காரு.
‘சந்திரமுகி’ படம் உருவானப்போ, அதுல இளையராஜா மியூசிக் போட்டா நல்லா இருக்குமுன்னு யோசிச்சேன். ஏன்னா அது மியூசிக்கல் சப்ஜெக்ட். ஆனா டிஷ்கசன்ல அதுபற்றி பேசாம போயிட்டேன். அதுக்கு பிறகு ஞாபகம் வந்து இளையராஜாவ போடுங்கன்னு சொன்னப்போ வித்யாசாகரை போட்டுட்டதா சொன்னாங்க. அவரு நல்ல பண்ணுவார்னு சொன்னாங்க. சொன்ன மாதிரியே பண்ணினார். இதுக்காக அவரை ஏªழுட்டு தடவை மீட் பண்ணியிருக்கேன். அவரு இந்தப் படத்துக்கு அருமையா மியூசிக் போட்டிருக்காரு.
ஒரு நல்ல நடிகரா பா.விஜயை பார்க்குறேன். ஷங்கர் தன்னோட படத்துக்கு சில பாட்டெழுத வாலியையும், பா.விஜய்யையும் தேடுவாரு. இது இந்த காலத்துக்கும் பாட்டு எழுதுற இளைஞரா வாலிய காட்டுது. வாலிக்கு இணையா எழுதுற இளைஞரா பா.விஜய்ய காட்டுது.
நடிகர்கள்லேயே திரைக்கு பின்னாடி எனக்கு பிடிச்ச அற்புதமான மனிதர் நம்பியார். அவர்கிட்ட ஒருமுறை உங்க வயசென்ன என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘என் உடம்புக்கு 80, மனசுக்கு 18‘ன்னு சொன் னாரு. அதுமாதி ரிதான் நம் முதல்வர் கலைஞர் இளைமையா இருக்கார்.
கர்நாடகாவுல தொட்டனகோடான்னு பெரிய டிராமா ஆர்ட்டிஸ்ட், பாடகர் இருந்தார். அவர் தன்னோட சுயசரிதையில கடவுள் எனக்கு பணம் மட்டும் கொடுத்திருந்தா, 60 வயசுல செத்து போயிருப்பேன். கலைய கொடுத்ததாலதான் வாழ்ந்திட்டிருக்கேன்னு சொன்னார். அதேமாதிரி கலைஞர் அரசியல்வாதி, எழுத்தாளர் என்பதை தாண்டி, அவர் கலைஞர் என்பதால்தான் அவரால் இன்றைக்கும் இளைஞனா வேலை செய்ய முடியுது. அவரது பேனாவுக்கு வயசாகாது. என்னோட பேனாவுக்கு வயசாயிடும். ஏன்னா நான் வெறும் நடிகன் மட்டும்தான். மனசு மட்டும்தான் வேலை செய்யும், மூளைக்கு பெருசா வேலையில்ல. அவருக்கு இரண்டுமே வேலை செய்யும்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கவிஞர் வைரமுத்து நடிகர் சுமன், நடிகைகள் குஷ்பு, மீரா ஜாஸ்மின், ரம்யா நம்பீசன், நமீதா, இசை அமைப்பாளர் வித்யாசாகர் மத்திய மாநில அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டர். முன்னதாக தயாரிப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். முடிவில் படத்தின் நாயகனும், பாடலாசிரியருமான பா.விஜய் நன்றி கூறினார்

No comments:

Post a Comment