கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 5, 2010

உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய பருத்தி தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் கருணாநிதி


உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பருத்தி, பருத்தி நூல் கிடைப்பதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணா நிதி 02.12.2010 அன்று எழுதிய கடிதம்:
இந்தியாவிலிருந்து பருத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன் உள்நாட்டு தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை கடந்த செப்டம்பர் 23ம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும் நவம்பர் 1ம் முதல் 55 லட்சம் பேல் பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பருத்தி விலையில் தொடர்ந்து உயர்வு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலிருந்து நவம்பர் மாத கடைசி வாரம் வரையிலான காலகட்டத்தில் பருத்தி விலை ஏறக்குறைய 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், ஏற்றுமதியாளர்கள் பருத்தியை பரபரப்புடன் வாங்கி குவிப்பதால் சந்தைக்கு வரக்கூடிய பருத்தி உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை. வழக்கமாக அக்டோபருக்கு பிறகு நான்கைந்து மாதங்களுக்கு சந்தைக்கு புதிய சரக்குகள் வரத் தொடங்குவதால் பருத்தி விலையில் சரிவு ஏற்படும். எனினும், இந்த ஆண்டு 55 லட்சம் பேல்கள் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியதால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை’ ஏற்பட்டுள்ளது. சந்தையிலும் பருத்தி இருப்பு இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது.
நம்முடன் போட்டி போடும் சீனா போன்ற நாடுகள் 33 சதவீதம் வரை கையிருப்பு வைத்து பராமரித்து வருகின்றன. மாறாக, இந்தியாவில் 17 சதவீத இருப்புதான் பராமரிக்கப்படுகிறது. இந்த சீசனில் ஜனவரி மாதம் பருத்தி இருப்பை அதிகரிக்க வேண்டியது அவசர அவசியமாகும். விவசாய தொழிலுக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளித்து வருவது ஜவுளித்துறை. எனவே, தொடர்ந்து பருத்தி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலில் மொத்தம் 50 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். நாடு முழுவதும் இந்த துறை மூலமாக கிடைக்கும் வேலைவாய்ப்பு பல மடங்கு இருக்கும். எனவே, உள்ளூர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை, உள்ளூர் சந்தைகளில் போதுமான சரக்கு வரத்து ஏற்பட்டு, அதன் காரணமாக பருத்தி விலை குறையும் வரை பருத்தி ஏற்றுமதியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
பருத்தி விலை ஏற்றம் காரணமாக பருத்தி நூல் விலையிலும் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், கணிசமான அளவு பருத்தி நூல், ஏற்றுமதிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நெசவு மற்றும் ஆடைகள் தொழிற்சாலைக்கு பருத்தி நூல் கிடைப்பதும் குறைந்துள்ளது. பருத்தி நூல்களை மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளாக மாற்றுவதை சாத்தியமாக்க பருத்தி நூல் ஏற்றுமதியையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மில் துணிகள், பின்னலாடைகள், கைத்தறி துணிகள், ஆடைகள் ஆகிய ஜவுளித்தொழில் உற்பத்தி அதிகரிக்க இது மிக அவசியம். கைத்தறி, விசைத்தறி மற்றும் பின்னலாடை ஆகியவற்றில் வெவ்வேறு நூல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் பிரிவு வாரியாக உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு தாராளமாக கிடைக்க வேண்டும். எனவே, பருத்தி நூல் ஏற்றுமதிக்கும் உச்சவரம்பு நிர்ணயம் செய்து, ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும்.
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு பருத்தி மற்றும் பருத்தி நூல் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தாங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment