மனித உரிமை நாள் - டிசம்பர் 10 - குறித்து முதலமைச்சர் கலைஞர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: மனிதனை மனிதனாக மதித் திட வேண்டும் எனும் மனிதநேய உணர்வை வளர்த்திடும் நோக்கில் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 10ஆம் நாள், உலக மனித உரிமை நாள் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதநேய உணர் வோடு, 1973 ஆம் ஆண் டிலேயே, மனிதனை வைத்து மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக மூன்று சக்கர சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்திய இந்த அரசு, தமிழகத்தில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக் கூடாது எனும் எண்ணத்துடன் 1997இல் ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் எனும் புதிய அமைப்பை ஏற்படுத்தியது.
சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக ஜாதி, மத, இன பேதங்கள் கூறி நசுக்கப்பட்டுவரும் நலிந்த பிரிவினர், மலை வாழ் பழங்குடியினர், குழந்தைத் தொழிலாளர்களாக - கொத்தடிமைகளாகச் சுரண்டப்படு வோர், மகளிர், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைவருக்கும் ஆதரவுக்கரம் கொடுத்து, அவர்களுக்குத் துணைபுரியும் அமைப்பாக இந்த மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
அது தொடங்கப்பட்ட 1997 ஆம் ஆண்டு முதல் இதுவரை வரப்பெற்ற 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் மீது நடவடிக்கைகள் மேற் கொண்டு, 97 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் மீது ஆணை பிறப்பித்து நலிந்தவர்களின் நலன்காக்கும் பணிகளைச் சிறப்பாக ஆற்றி வருகிறது. மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமந்த கொடுமையை ஒழித்து, அப்பணியில் ஈடுபட்டிருந்த அருந்ததியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைப்போல முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 2008இல் 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, அவர்கள் உயர வழி வகுத்து தமிழகத்தில் மனித உரிமைகள் சிறந் திடத் தொடர்ந்து பாடு பட்டுவருகிறது இந்த அரசு. இத்தகைய சூழ்நிலையில், மனிதஉரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுக்கப்பட்டாக வேண்டும் எனும் உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவோம்; மண்ணில் மனிதம் காப்போம் - மனிதநேயம் வளர்ப்போம் என இந்நாளில் உறுதியேற்போமாக!
No comments:
Post a Comment