தமிழக அரசு நேற்று (10.12.2010) வெளியிட்ட அறிக்கை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் பெய்த கடும் மழையின் காரணமாக சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. அங்குள்ளவர்கள் மீட்கப்பட்டு 33 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி, சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படையில், கடலோர காவல் படை, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது, மாவட்டத்தில் மழைநீர் வடியத் தொடங்கியிருந்தாலும்கூட, வெள்ள நீர் சூழ்ந்ததால், சுமார் 2 ஆயிரம் குடிசைகளும், சுமார் 4 ஆயிரம் நிரந்தர குடியிருப்புகளும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி இதுகுறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, ஏற்கனவே ஆணையிட்டுள்ள படி முழுமையாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ரூ.5 ஆயிரம், பகுதியாக பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு ரூ.2,500 வழங்குவதோடு, பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிரந்தர குடியிருப்புகளுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்க ஆணையிட்டுள்ளார்.
மேலும், நிவாரணப் பணிகளை திறம்பட செயல்படுத்தவும், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சாலை, ஏரி, கண்மாய் மற்றும் பயிர்ச்சேதம் குறித்து ஆய்வு செய்து உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும், மாவட்ட கலெக்டருக்கு ஆணை வழங்கியுள்ளார். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட மூத்த ஐஏஎஸ் அதிகாரி சுனில் பாலிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment