“ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைப்போம்,” என கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை மாவட்ட, மாநகர திமுக சார்பில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் 19.06.2011 அன்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் வீரகோபால் வரவேற்றார். இதில், திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 2006 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தனிப்பட்ட முறையில் 132 தொகுதியில் போட்டியிட்டு, மொத்தம் 87 லட்சத்து 28 ஆயிரத்து 361 வாக்குகள் பெற்றது. 2011 சட்டமன்ற பொது தேர்தலில் 119 தொகுதியில் போட்டியிட்டு, 82 லட்சத்து 49 ஆயிரத்து 991 வாக்குகள் பெற்றது. 5 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றுள்ளோம். எனவே, இந்த தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்களுக்கும் நன்றி.
ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என இருக்கக்கூடாது என்பதால் கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. அறிஞர்கள், கல்வியாளர்கள், அதிகாரிகள் என எல்லோருடைய கருத்தையும் கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2010&11ம் ஆண்டில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதையும் சிலர் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று தோல்வி கண்டார்கள். மீதமுள்ள வகுப்புகளுக்கும் தேவையான புத்தகம் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் கொண்டுவந்த முதல் தீர்மானம் சமச்சீர் கல்வி ரத்து.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும், தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை செல்கிறது. அங்கும் தோல்வியை சந்தித்தார்கள். சமச்சீர் கல்வியை கட்டாயம் அமல்படுத்த வேண்டும், சில மாற்றங்கள் செய்ய விரும்பினால் தனி குழு அமைத்து மாற்றம் செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் தமிழ், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்புத்தகங்களில் சில பக்கங்களை கிழிக்கவும், ஸ்டிக்கர் ஒட்டவும், கறுப்பு மை தடவி அழிக்கவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, கல்வித்துறை அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
எத்தனையோ உயிர்களை காப்பாற்றிய கலைஞர் காப்பீட்டு திட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். கருணாநிதியை பிடிக்கவில்லையென்றால் அவரது பெயரை நீக்கிவிட்டு வெறும் காப்பீட்டு திட்டம் என்று அறிவிக்க வேண்டியதுதானே? குடும்ப ஆட்சி, குடும்ப ஆட்சி என ஜெயலலிதா பேசி வருகிறார். ஏனென்றால் அவருக்கு குடும்பம் இல்லை. அதனால், அப்படி பேசி வருகிறார்.
புதிய தலைமை செயலகம் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் சொந்த பணத்தில் இருந்து கட்டவில்லை. ஆனால், அதை நான் பயன்படுத்த மாட்டேன் என ஜெயலலிதா பிடிவாதம் பிடிக்கிறார். கடந்த முறை முதல்வராக இருந்தபோது புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என அறிவித்ததே அவர்தான். ஆனால், அவர் தற்போது புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படும் என்கிறார். நாங்கள் பார்க்காத விசாரணையா? மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம்.
ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக பொறுப்பேற்றதும் மேம்பாலம் கட்டியதில் ஊழல் எனக்கூறி கருணாநிதியை அடாவடித்தனமாக கைது செய்தார். 5 ஆண்டுகள் கடந்த பின்னரும் அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூட தாக்கல் செய்ய முடியவில்லை.
எனவே, எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். கருணாநிதி கட்டிய தலைமை செயலகத்தை பயன்படுத்த மாட்டேன் என்றால் அவர் கட்டிய பாலத்தில் மட்டும் ஜெயலலிதா செல்வது ஏன்?
தேர்தலில் வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதவேண்டும் என்பார் அண்ணா. திமுகவைப்போல் வெற்றி பெற்ற இயக்கமும் கிடையாது, தோல்வி அடைந்த இயக்கமும் கிடையாது. இரண்டையும் ஒன்றாக கருதி நாட்டு மக்களுக்காக உழைப்போம். தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருந்து பணியாற்றும் வாய்ப்புகூட நமக்கு கிடைக்கவில்லை. பரவாயில்லை. மக்கள் மன்றத்தில் என்றும் பணியாற்ற தயாராக உள்ளோம். ஆட்சிக்காக, பதவிக்காக இந்த இயக்கம் துவக்கப்படவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்ற இந்த இயக்கத்தை அண்ணா துவக்கினார். ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கு இந்த இயக்கம் பாடுபடும். ஆட்சியில் இருந்தால் அதை ஒரு கருவியாக பயன்படுத்தி மக்களுக்கு பணிசெய்வோம். மக்களுக்காக உழைக்கும் நமக்கு என்றுமே சோர்வு ஏற்படாது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், சுகவனம் எம்.பி., முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், இரா.மோகன், முன்னாள் எம்எல்ஏக்கள் பா.மு.முபாரக், அருண்குமார், மாவட்ட திமுக பொருளாளர் ஆ.நாச்சிமுத்து, மாநகர திமுக பொருளாளர் பி.நாச்சிமுத்து, மாவட்ட திமுக துணை செயலாளர் ஆனந்தன், மாநகர திமுக துணை செயலாளர்கள் பைந்தமிழ்பாரி, மகுடபதி, மாநகராட்சி துணை மேயர் கார்த்திக், மேற்கு மண்டல தலைவர் வி.பி.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் வடவள்ளி துரை, மாநகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் முருகவேல், அனந்தநாராயணன் உள்பட பலரும் பேசினர். முடிவில், 3வது பகுதி கழக செயலாளர் வெ.நா.உதயகுமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment