கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 29, 2011

ஜெ. ஆட்சி முதல் 30 நாட்கள் - சுப.வீரபாண்டியன்


புதிய ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்குள் அதனை மதிப்பிடுவது சற்றுப்பொருந்தாத ஒன்றுதான். எனினும், பல்வேறு நிகழ்வுகள் அடுத்தடுத்தும், விரைவாகவும் அரங்கேறிக் கொண்டிருப்பதால் அவற்றை எடை போட வேண்டிய கட்டாயத் தேவை நமக்கு எழுகின்றது.

நல்லவை சிலவும், அல்லவை பலவுமாக அரசிடமிருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மிகக் குறிப்பாக ஈழம் தொடர்பான சட்டமன்றத் தீர்மானமும், சமச்சீர்க்கல்வி தொடர்பான நீதிமன்றப் போராட்டமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தமிழீழ உறவுகளை இரண்டாண்டுகளுக்கு முன் கொன்று குவித்த இராஜபக்சே எனும் கொடூரனைச் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றித் தண்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் முன்மொழிந்து, ஒரு மனதாக நிறைவேற்றி இருக்கும் விதம், அனைவராலும் பாராட்டப்படத்தக்கது என்பதை யாரும் மறுக்க வேண்டியதில்லை. அத்தீர்மானத்தை எந்த எதிர்ப்பும் காட்டாமல் வரவேற்று வழிமொழிந்திருக்கும் அனைத்துக் கட்சிகளும் பாராட்டிற்குரியவை. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே கூட அதனை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவும், இன்னொரு விதத்தில் வேடிக்கை முரணாகவும் உள்ளது. சி.பி.எம் கட்சித் தோழர்கள் சார்பில் மட்டுமே, பொருளாதாரத் தடைக்கு ஒரு தயக்கம் காட்டப்பட்டு, பின்பு அவர்களாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதோடு நின்றுவிடாமல், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கியிருக்கும் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும் என்று கோரியிருப்பதும் சரியானதாகவே உள்ளது.

இத்தகைய நல்ல தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அத்தீர்மானத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையிலும் சிலவற்றைச் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த முயற்சியில் ஈடுபட்ட மிகப்பலர் பரிதாபமாகத் தோற்றுப்போன நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் ஜெயலலிதாவோ தன் சட்டமன்ற உரையில், வழக்கம் போல புலிகளை இழிவுபடுத்திப் பேசியுள்ளார். அவர்கள் பயங்கரவாதிகள் என்பது போலவும், அவர்களின் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்யத் தூண்டுதலாக இருந்தது தானே என்றும் அவர் பேசியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சட்டமன்றத்தில் ஈழத்தில் நடப்பது சகோதர யுத்தம் என்று குறிப்பிட்ட போது, தாவிக் குதித்துத் தாண்டவமாடியவர்கள், இப்போது இந்த அம்மையார் புலிகள் பற்றிய அவதூறுகளை அள்ளி வீசும்போது அமைதியாக இருந்தனர். அதுமட்டுமின்றி இப்போது பாராட்டு விழாக்கள் நடத்திப் பரவசப்படுகின்றனர்.

கலைஞர் அறிக்கை விட்டபோதும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய போதும், தீர்மானங்கள் நிறைவேற்றிய போதும், இது வெறும் அறிக்கைதானே, இது வெறும் தீர்மானம்தானே என்று எள்ளலாய்ப் பேசியவர்கள், இப்போது ஜெயலலிதா அறிக்கை விட்டுவிட்டார், தீர்மானமே நிறைவேற்றிவிட்டார் என்று புகழ் மழையைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் இந்த இரட்டை வேடத்திற்கான பின்புலம் என்ன என்பதை அறியாதவர்கள் யார்? விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான எதிர்ப்பாளரான சோ போன்றவர்களின் ஆதரவையும், புலிகள் ஆதரவாளர்களின் ஆதரவையும் ஒரே நேரத்தில் பெற்றிருப்பவர் ஜெயலலிதா. இரண்டு அணியினரையும் தன்வயப்படுத்திக் கொள்வதே இந்த இரட்டை வேடத்தின் நோக்கம். அவருடைய நோக்கம் இயல்பாக நிறைவேறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். ஈழ ஆதரவாளர்கள் தீர்மானத்தை மட்டும் ஆதரித்துப் பாராட்டுகின்றனர். புலிகளை ஏன் கொச்சைப்படுத்திப் பேசுகிறீர்கள் என்று ஒரு சொல்லும் சொல்லவில்லை. ஈழத்தில் நடந்தது யுத்தமே அன்று, இராஜபக்சேயின் செயல்களில் எந்தப் பிழையும் இல்லை என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் சோ போன்றவர்களோ, இத்தீர்மானத்தை எதிர்த்து ஒரு எழுத்தும் எழுதவில்லை. இரண்டு அணியினருக்கும், ஈழ மக்களைக் காப்பாற்றுவதை விட, ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதுதான் முதன்மை நோக்கம்.

கச்சத் தீவை மீட்க வேண்டும் என்னும் ஜெயலலிதாவின் உரை குறித்தும் நிதானமாய் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் இப்படிப் பேசுவதும், அதற்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதும் முதன்முறையன்று. இரண்டையும் அவர் இருபது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 1991ஆவது ஆண்டு ஆகஸ்ட்டு பதினைந்தில் விடுதலைக் கொடியை ஏற்றி முடித்த கையோடு, கச்சத் தீவை மீட்காமல் ஓய மாட்டேன் என்று முழக்கமிட்டார். நாடே வியந்து பார்த்தது. புதிய வீராங்கனை கிடைத்து விட்டார் என்னும் புளகாங்கிதம் எங்கும் நிறைந்தது. அதன்பின் அதனைத் தீர்மானமாகச் சட்டமன்றத்திலும் கொண்டுவந்து நிறைவேற்றினார். ஆனால் அதற்குப் பிறகு அது குறித்த எந்த முயற்சியிலும் அவர் இறங்கவில்லை. 2001-06 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்தபோதும், கச்சத் தீவு பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இப்போது திடீரென்று கச்சத்தீவின் மீது அவருக்குக் கருணை பிறந்திருப்பது, மீனவர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதற்கும், சமச்சீர்க்கல்வி போன்றவைகளில் அவர் செய்து வரும் குழப்பங்களைத் திசை திருப்புவதற்கும்தான் என்பதை அரசியல் நோக்கர்கள் அறிவார்கள்.

கச்சத் தீவைக் கலைஞர்தான் தாரை வார்த்தார் என்பது முற்றிலும் உண்மைக்கு மாறான ஒன்று. அது குறித்து நீண்ட கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. 1974ஆம் ஆண்டு அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்த போது, தமிழக அரசின் சார்பில் அதற்குக் கடுமையான மறுப்பு எழுப்பப்பட்டிருக்கிறது என்பதை ஆவணங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். நெருக்கடி காலத்தில், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்த வேளையில்தான், கச்சத் தீவு தொடர்பான கூடுதல் உரிமைகள் சிறீலங்கா அரசுக்கு வழங்கப்பட்டன என்பதற்கும் அசைக்க முடியாத சான்றுகள் உள்ளன. உண்மைகளைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் தன் போக்கில் ஒரு முதலமைச்சர் பேசுவது நியாயமானதன்று.

1952-54 ஆம் ஆண்டுகளில் ராஜாஜி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார். காலை நேரம் மட்டுமே பள்ளிக்கூடம் என்பதும், மாலை நேரங்களில் அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் அக்கல்வித்திட்டத்தின் சாரம். எல்லோருக்கும் சமமான கல்வி கிடைத்துவிடக் கூடாது என்பதில் அன்றைக்கு ராஜாஜி காட்டிய உறுதியை, சமச்சீர்க்கல்வியை விலக்கி வைத்ததன் மூலம் இன்று ஜெயலலிதாவும் காட்டியிருக்கிறார். சமூக நீதிக்கு எதிரான இக்கொள்கையை எதிர்ப்பதில் போதுமான முனைப்பை ஊடகங்கள் காட்டவில்லை.

சில ஆண்டுகளாகவே தி.மு.க. அரசை அகற்றிவிட வேண்டும் என்பதிலும், கலைஞரை முதலமைச்சராக நீடிக்கவிடக் கூடாது என்பதிலும் பார்ப்பனப் பத்திரிகைகள் பல ஒரு வெறியோடு செயல்பட்டன. வெறி என்றால் கொலை வெறி என்று சொல்லவேண்டும். அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லை. திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகவும், அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடிய ஆற்றல் உடையவராகவும் கலைஞர் இருப்பதால்தான் அவர் மீது அத்தனை கோபத்தை இந்தப் பத்திரிகைகள் காட்டுகின்றன. தினமணி போன்ற ஏடுகள் சிலவேளைகளில் நடுநிலை வேடத்தையும் மறந்து தங்களின் உண்மை நிலைகளை எழுதிவிடுவதுண்டு. அப்படித்தான் 09.06.2011 ஆம் நாளிட்ட தினமணி தலையங்கத்தில், “பகுத்தறிவுவாதம் என்கிற சாக்கில் திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களையும் பற்றிய கருத்துகளைத் திணிப்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பல கோடி ரூபாய்க்கான புத்தகங்கள் அச்சடிக்கப் பட்டு வீணாகி விட்டனவே என்று வேதனைப்படுவதை விட, பிஞ்சு மனங்களில் விஷ‌­ விதைகள் தூவப்படாமல் காப்பாற்றப்பட்டதே என்று நாம் மகிழ்ச்சி அடைவதுதான் சரி “என்று எழுதப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் வீணாகிறதே என்று கூட கவலைப்பட வேண்டாமாம், திராவிட இயக்கக் கொள்கைகள் பரவாமல் இருந்தால் போதுமாம். தினமணி உபதேசம் செய்கிறது. இந்த அடிப்படையில்தான் சமச்சீர்க் கல்வியே மறுக்கப்படுகிறது என்பதை நம் பிள்ளைகள் உணரவேண்டும். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களின் அட்டைகளில் இருந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முத்திரை, தாள் ஒட்டி மறைக்கப்படும் பணியும் நடந்து வருகிறது. அந்த முத்திரையில் வள்ளுவர் படம் உள்ளது. கலைஞர் மீதுதான் இந்த அரசுக்குக் கோபம். வள்ளுவர் மீது என்ன கோபம் என்றால், அவர்தானே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர். இந்த வரியல்லவா வர்ணாசிரமத்தின் மீதும், மனு நீதியின் மீதும் சாட்டை கொண்டு அடித்த வரி. அதனால்தான் அவாளுக்கு அவ்வளவு கோபம்.

சமச்சீர்க் கல்வி மட்டுமன்றி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், இலவச வண்ணத் தொலைக் காட்சிகள் வழங்கும் திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள், புதிய அரசினால் கைவிடப் பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு நன்மை பயந்த திட்டங்கள். எந்தக் காரணமும் இன்றி இவை கைவிடப்பட்டுள்ளன. ஆனால் இந்நிலையைக் கண்டித்தோ, குறைந்த பட்சம் அறிவுறுத்தியோ எழுதுவதற்குக் கூட நம் நாட்டில் ஏடுகள் இல்லாமல் போய்விட்டனவே என்பதுதான் தாளமுடியாத வேதனையாக உள்ளது.

கலைஞர் முதலமைச்சராக இருந்த வேளையில் ஒவ்வொரு அசைவையும் விமர்சித்தவர்கள், இப்போது எவ்வளவு கவனமாய்க் கண்மூடி இருக்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. கலைஞர் அரசு மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அந்த இலவசத் திட்டங்களை தா.பாண்டியன் போன்றவர்கள் எவ்வளவு கடுமையாக விமர்சித்தார்கள்! இலவசங்கள் என்ற பெயரால் தமிழக மக்களை ஏமாற்றி, 91 ஆயிரம் கோடி ரூபாய்க் கடனை அவர்கள் தலையில் வைத்துள்ளது தமிழக அரசு என்று சொன்ன தா.பாண்டியன், இன்றைய அரசின் இலவசத் திட்டங்கள் பற்றிய கேள்விக்கு, அது மக்களை ஊக்குவிக்கும் செயல் என்று விடை சொல்கிறார். இரட்டை இலைச் சின்னத்தைப் போல, எதிர்காலத்தில் இவர்களெல்லாம் இரட்டை நாக்கைச் சின்னமாகக் கேட்டுப் பெறலாம்.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துக் கட்டப்பட்ட அழகிய தலைமைச் செயலகம், ஆதரிக்க ஆளின்றி அநாதையாய் நிற்கிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட செம்மொழி ஆய்வு நூலகம், இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. அங்கே இருந்த அரிய நூல்களும், பழமையான ஓலைச் சுவடிகளும் என்ன ஆயின என்று அறிவாளிகள் கூட உரத்துக் கேட்கவில்லை.

ஆட்சியின் தொடக்கமே இப்படி என்றால், போகப்போக நிலை என்னாகுமோ என்னும் அச்சம் ஜனநாயகச் சிந்தனையாளர்களை நிலைகுலைய வைத்திருக்கிறது.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

1 comment: