கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 18, 2011

வருங்காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும்: கலைஞர்


தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய மின் திட்டங்களால் வருங்காலத்தில் மின் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.


தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா, தான் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்கலாம் என்றும், ஜுலை முதல் தற்போதுள்ள 3 மணி நேர மின்வெட்டினை 2 மணி நேரமாக குறைப்போம் என்றும், தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் உற்பத்தியை அதிகப்படுத்த எதுவுமே செய்யவில்லை என்றும் புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்திருக்கிறார்.


2006 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தொடங்கப்பட்ட எண்ணூர் அனல் மின்நிலைய இணைப்பு திட்ட (600 மெ.வா.) 2013 ஆகஸ்டிலும், மேட்டூர் அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 ஜுலையிலும், வடசென்னை அனல் மின்நிலையம் (600 மெ.வா.) 2011 செப்டம்பரிலும், உடன்குடியில் பி.எச்.ஈ.எல். மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் இணைந்து தலா 800 மெ.வா. உற்பத்தி செய்யக்கூடிய 2 திட்டங்கள் 2013 மார்ச்; 2013 செப்டம்பரிலும், வடசென்னை அனல் மின்நிலையத்திலேயே மேலும் 600 மெ.வா. தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2011 ஆகஸ்டிலும் உற்பத்தியை தொடங்குகின்றன.

ரூ.1,126 கோடியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெ.வா. இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம் 2011 ஜுலையில் இயக்கத்திற்கு கொண்டுவரப்படும். மொத்தம் 4183 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக 2010 2011ல் 1400 மெ.வா. மின்சாரமும், 2011 2012ல் 3316 மெ.வா. மின்சாரமும், 2012 2013ல் 1222 மெ.வா. மின்சாரமும், 2013 2014ல் 1860 மெ.வா. மின்சாரமும் ஆக மொத்தம் 7798 மெ.வா. மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.


இந்த புள்ளிவிவரங்கள், தி.மு.க. ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு தேவையான திடமான விளக்கமாக அமையுமென்று கருதுகிறேன்.

தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் ஆங்காங்கு தொடங்கப்பட்டதால் மின் தேவை அதிகமாயிற்று. 2006 மே மாதத்திற்கு பிறகு டிட்கோ நிறுவனத்தின் முயற்சியினால் 27 தொழில்கள் தொடங்கப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. 24 தொழில்கள் தொடங்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 12 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதவிர சிப்காட் மூலமாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாகவும் புதிய தொழில்களைத் தொடங்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு அதன் காரணமாகவும் தமிழகத்தில் தொழில்கள் பெருகி, அதற்கு தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழகம் உள்ளாகியது. தமிழகத்தின் உச்சகட்ட மின்தேவை 11,000 மெ.வா. ஆனால் தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி சுமார் 7300 மெ.வா. ஆக இருந்தது. எனவே பற்றாக்குறை 3700 மெ.வா. இந்த பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 2200 மெ.வா. கொள்முதல் செய்யப்பட்டது. மின் சந்தையிலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டது.


அனல் மின்நிலையங்களை தனியார் வணிக மின் திட்டங்களாக நிறுவுவதற்கு தமிழக அரசு ஊக்கமளித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் 18,140 மெ.வா. அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய 10 கடலோர அனல் மின் திட்டங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்தன. அவற்றில் ஒரு தனியார் நிறுவனம் 1200 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்ய பூர்வாங்க பணிகளை தொடங்கியது. அது 2011 2012ம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவைதவிர, இணை மின் உற்பத்தி மூலம் 487 மெ.வா.; தாவர சக்தி மூலம் 127 மெ.வா.; தன் பயன் உற்பத்தி மூலம் 851 மெ.வா. மின்சாரம் கிடைத்தது. இதுதவிர மத்திய தொகுப்பிலிருந்து 2350 மெ.வா. மின்சாரம் கேட்டுப்பெற்றோம். உச்சநேரத் தேவையை சமாளிப்பதற்காக 75 மெ.வா. மின்சாரம் கூடுதலாக 26 3 2008 முதல் பெறப்பட்டது. காற்றாலைகளின் மொத்தக் கொள்திறன் அப்போது 4888 மெ.வா. தனியார் காற்றாலைகள் மூலமாக 2006 2007ம் ஆண்டில் 578 மெ.வா.; 2007 2008ல் 381 மெ.வா.; 2008 2009ல் 431 மெ.வா. மற்றும் 2009 2010ல் 600 மெ.வா. என்ற அளவிற்கு மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருந்தது.


இதையெல்லாம் அனுசரித்துத்தான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே எதிர்கால தேவையைக் கணக்கிட்டு இந்த அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்குமானால் பற்றாக்குறை வந்திருக்காது என்று விளக்கம் தரப்பட்டது. ஜெயலலிதா தனது முந்தைய ஆட்சி காலத்தில் மேற்கொண்ட வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களை தி.மு.க. அரசு தொடர்ந்திருந்தால் மின்தட்டுப்பாடு வந்திருக்காது என்றும் கூறியிருக்கிறார்.

வல்லூர் அனல்மின் நிலையத் திட்டத்திற்கான அலகுகள் ஒன்று மற்றும் இரண்டிற்கான வேலைகள் 13 8 2007ல் தொடங்கப்பட்டன. அலகு மூன்றிற்கான வேலைகள் 28 7 2009ல் தொடங்கப்பட்டது. அலகுகள் 1, 2, மற்றும் 3 முறையே அக்டோபர் 2011, டிசம்பர் 2011 மற்றும் நவம்பர் 2012லும், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகஸ்டு 2012லும், உடன்குடி அனல் மின்நிலையத்தின் முதலாவது அலகு மார்ச் 2013லும், 2 வது அலகு செப்டம்பர் 2013லும் செயலாக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் உற்பத்தி நிலையை அடையும்போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. மின் தடை தமிழகத்திலே மட்டும்தான் இருக்கிறதா? மற்ற மாநிலங்களில் மின்தடையே இல்லையா? ஆந்திராவில் 4 மணி நேரம், கர்நாடகாவில் 3 மணி நேரம் மின்தடை உள்ளது. தமிழகத்திலும் 3 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

விவசாயத்திற்கு ஆந்திராவில் 7 மணி நேரமும், கர்நாடகாவில் 6 மணி நேரமும் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 9 மணி நேரம் வழங்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் ழூனிட் அளவுக்கு மின்தடை. தமிழ்நாட்டில் 20 மில்லியன் ழூனிட் அளவிற்கு மட்டுமே மின்தடை. எனவே மின் பற்றாக்குறை என்பது தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்ததற்கு மாறாக; இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் மின் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தைப் பெற இயலாத நிலைமை ஏற்பட்டது.


2001 முதல் 2006 வரையிலான தனது ஆட்சி காலத்தில், தமிழ்நாடு மின்வெட்டே இல்லாத மாநிலமாக இருந்தது என்று ஜெயலலிதா சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஆட்சி காலத்திலே 16 10 1992 வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா? இல்லையா? தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிக தொழிற்சாலைகளை தொடங்காமல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா?

அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தி திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால் தி.மு.க. ஆட்சியிலே மின் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியதன் பயன் நிச்சயமாக வருங்காலத்தில் மின் பற்றாக்குறையை தமிழகத்தில் இல்லாமல் செய்திடும் என்று உறுதியாக நம்பலாம். அ.தி.மு.க. ஆட்சியினர் தங்கள் திறமையால்தான் தமிழகத்திலே மின் பற்றாக்குறை இல்லாத நிலையை ஏற்படுத்தியதாக தற்பெருமை கொள்ளலாம். எப்படியோ; மக்களுக்கு மின்சாரம் கிடைத்தால் போதும்! தடையில்லாத, தரமான மின்சாரம் என்னருந் தமிழ் மக்களுக்கு கிடைக்குமானால், எல்லார்க்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment