88ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவர் கலைஞருக்கு வாழ்த்துகள் கூறி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று (3.6.2011) நமது மானமிகு கலைஞர் அவர்களுக்கு 88ஆம் ஆண்டு பிறந்த நாள்!
உழைப்பதில் இவருக்கு இணை எவரும் உண்டோ என்று அவரிடம் மாறுபட்டவர்கள்கூட மாறுபட முடியாது கூறும் ஒருமித்த கருத்து இது!
இந்த 88 வயதில் அவரது பொதுவாழ்க்கை 75 ஆண்டுகள் என்பது வரலாற்றில் எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்று அல்லவா!
எதிர்நீச்சல் புதிதல்ல!
அறிவு ஆசான் தந்தை பெரியாரின் குருகுலமும், அய்யாவின் தலைமகன் அண்ணாவிடம் அவர் பெற்ற பக்குவங்களும் கலைஞரை, சோதனைகள், வேதனைகள் வந்தாலும் துணிந்து எதிர்கொள்ள வைக்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளன!
எதிர்நீச்சல் அவருக்குப் புதிதல்ல பழக்கமானதொன்றுதான்!
இந்த 88 வயதிலும் எதிர்நீச்சல் என்ற போதிலும், தேர்தல் தோல்விகளோ, திட்டமிட்டு இன எதிரிகளும், அரசியல் கண்கொத்திப் பாம்புகளும் ஏற்படுத்திடும் அசாதாரண அவலங்களும் அவரை மேலும் உறுதிகொண்ட நெஞ்சினராக ஆக்கிடவேண்டும் என்பதே நம் விழைவு, வேண்டுகோள்!
அறிவுப்பூர்வமான ஆக்கச் செயல் அடுத்து சோர்ந்துள்ள தமது கழகப் படையினை எப்படிச் சொக்க செயல்வீரர்களாக, வீராங்கனைகளாக ஆக்குவது என்பதுபற்றிச் சிந்திக்கவேண்டும்!
மாலுமியின் கடமை!
புயல் கடலில் வீசும்போது கலத்தை சரியானபடிச் செலுத்துவது மாலுமியின் மகத்தான உறுதியிலும், சாதுரியத்திலும்தான் உள்ளது!
உணர்ச்சிகளை ஒதுங்க வைத்து, தளர்ச்சிகளுக்கு விடை கொடுத்து, புத்தாக்கம் காண புதிய அணுகுமுறைபற்றிச் சிந்தித்து, உடனடியாகச் செயல்படுத்தும் பொறுப்பு தலைமைக்கு மட்டுமே உள்ள மகத்தான கடமை என்பதை அறியாதவரல்ல மானமிகு சுயமரியாதைக்காரான நமது கலைஞர்.
கட்சி உறுதிமிக்க தொண்டர்களைக் கொண்ட தடை படாத ரத்த ஓட்டம் உடையது என்ற உண்மையை உலகுக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு இருப்பதால், இந்த 88 ஆம் வயதில் ஏற்பட்டுள்ள அறைகூவல்களை எதிர்கொண்டு, வெற்றி வாகை சூடிட, அவருக்குத் தாய்க்கழகம் தனது வாழ்த்தினை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறது! வாழ்க கலைஞர்!
திருப்பமான பயணமாக அமையட்டும் வாழ்த்துகள்!
பதற்றம் கொள்ளவேண்டிய தருணம் அல்ல இது. பரிகாரம் காணவேண்டிய முக்கிய கட்டம் இது என்பதை நன்கு உணர்ந்த அத்தலைவரின் பயணம், சீரிய செயல்திட்டத்தால் ஒரு திருப்பமாக அமையட்டும்!
இவ்வாறு கி. வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment