சமச்சீர்க்கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்தவுடன், தொலைக்காட்சியில் ஒருவர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். அம்மையாரின் அரசைப் பாராட்டுகிறார். ‘ அப்பாடா, எல்லோருக்கும் ஒரே கல்வி என்றால் என்ன அர்த்தம்? மெட்ரிக்குலேசனில் படிக்கும் பிள்ளைக்கும், சாதாரண கார்ப்பரேசன் ஸ்கூலில் படிக்கும் பிள்ளைக்கும் அப்புறம் என்ன வித்தியாசம்? ’ என்றார் அவர். மனுநீதி இன்னமும் இவர் போன்ற சிலரின் மனித வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது நமக்குப் புரிந்தது.
சமச்சீர்க்கல்வித் திட்டத்தை இருவகையினர் எதிர்க்கின்றனர். ஒருவர், மேலே குறிக்கப்பெற்றுள்ள மனுநீதியின் மிச்ச சொச்சங்கள், இன்னொரு வகையினர், கல்வியின் பெயரால் கொழுத்த வணிகத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள். இப்போது இருவகையினரும் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் வர்க்க வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் வர்க்க அடிப்படையில் அங்கெல்லாம் கல்வி மறுக்கப்படுவதில்லை. இங்கோ, வர்க்க, வருண அடிப்படையில்தான் கல்வியே வழங்கப்படுகிறது. பணக்காரர்களுக்கு ஒரு கல்விக்கூடம், ஏழைகளுக்கு ஒரு கல்விக்கூடம். பார்ப்பனர்களுக்கு ஒரு கல்விக்கூடம், மற்றவர்களுக்கு ஒரு கல்விக்கூடம் என்பது சட்டமாக இல்லை என்றாலும், பெரும்பான்மையான இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றாத தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இருக்கவே செய்கின்றன. தனியார் கல்வி நிறுவனமாக இருந்தாலும், அரசு உதவிபெறும் எனில், இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தியே தீரவேண்டும். ஆனால் சுயநிதிக் கல்வி நிறுவனங்களாக இருந்தால், அதனை அவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை.
பள்ளிக் கட்டணங்களிலும் ஏராளமான வேறுபாடுகள். பேராசிரியர் பிரபா கல்விமணி கூறுவது போல, கல்வி இங்கே வணிகமாகக் கூட இல்லாமல், கொள்ளையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஏதோ உலகத்தில் இல்லாத பாடத்திட்டத்தைத் தாங்கள் வைத்திருப்பது போலவும், இங்கே படிப்பவர்கள் மட்டுமே உலக அறிவாளிகளாக ஆக முடியும் என்பது போலவும், இந்நிறுவனங்கள் பாசாங்கு செய்கின்றன. அதனை நம் அப்பாவி மக்களும் நம்பி ஏமாந்து போகின்றனர்.
இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்ற நோக்கத்தில்தான் சமச்சீர்க்கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, எல்லாக் கல்வி நிறுவனங்களிலும், ஒரே வகையான பாடத்திட்டம், ஒரே வகையான தேர்வு முறை என்பது நடைமுறைக்கு வரும் வாய்ப்பு இருந்தது. இத்திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி ஆகிவிட்டன. இச்சூழலில் இத்திட்டத்தைத் தள்ளி வைப்பதன் மூலம் சமூக நீதியும், அரசுப் பணமும் வீணாவதை உணர்ந்து, தமிழக அரசு சமச்சீர்க் கல்வித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும், வேண்டுகோளும் ஆகும்.
நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்
No comments:
Post a Comment