திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் அரங்கில் 10.06.2011 அன்று மாலை நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, கோ.சி.மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* 2011 தேர்தலில் பதிவான 3 கோடியே 67 லட்சத்து 53114 வாக்குகளில், 39.44 சதவிகித வாக்குகளை அதாவது 1 கோடியே 45 லட்சத்து 29501 வாக்குகளை திமுக தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றது.
2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 47 லட்சத்து 62647 வாக்குகள் கிடைத்ததற்கு மாறாக, தற்போது இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 2 லட்சத்து 33146 வாக்குகள் தான் குறைவு என்ற போதிலும் கூட்டணி வேட்பாளர்களுக்கு, பெரு நம்பிக்கையோடு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும், உயர் நிலைச் செயல் திட்டக் குழு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
* சட்டப் பேரவையில் இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரால் கொண்டு வரப்பட்ட அரசினரின் தனித் தீர்மானத்தை திமுக முழு மனதோடு ஆதரிக்கிறது.
அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிற நேரத்தில் தேவையில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க அரசையும், திமுக தலைவரையும் ஜனநாயக மரபுகளுக்கு மாறாகவும் கடுமையாகத் தாக்கி விரோத உணர்வை வெளிக்காட்டிப் பேசியதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதே நேரத்தில், தமிழகச் சட்டப்பேரவையில் 16.04.2002 அன்று இதே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்போது, கொண்டு வந்த தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றம் கூறியதையும், 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கை தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள் தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதை இந்த உயர்நிலைச் செயல் திட்டக் குழு தமிழ் உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறது.
* சமச்சீர் கல்வி முறை 2010&11ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. புதிய பாடநூல்களும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. 2011&�2012 கல்வியாண்டில் சமச்சீர்க் கல்வி முறையில் இதர வகுப்புகளுக்கான பொதுப் பாடத் திட்டம் தயார் செய்யப்பட்டு பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதை நிறுத்தியதை உயர்நிலை செயல் திட்டக் குழு கண்டிப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றம் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விக்குப் பாதுகாப்பாக அளித்துள்ள மகத்தான தீர்ப்பு மனக் கவலை போக்கும் மாமருந்தாக அமைகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு நன்றி தெரிவிப்பதோடு அதனையேற்றாவது ஜெயலலிதா அரசு பாடம் பெற வேண்டுமென்று இக்குழு கேட்டுக் கொள்கிறது.
* ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து கட்டப்பட்டு அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்ட, சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளமாகத் திகழும் தலைமைச் செயலகத்தை பயன்படுத்திட முன்வராமல் மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றியிருப்பதும், புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பதும், அதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப் படும் என்று அறிவித்திருப்பதும் அ.தி.மு.க அரசின் �வெறுப்பு அரசியல்� என்பதை கண்டிக்கிறது.
* சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை பழைய நிலைக்கே கொண்டு வர முடிவெடுத்திருப்பதாக சொல்வது மாணவர்களின் எதிர்காலத்தையும், உயர் கல்வியின் தரத்தையும், ஆராய்ச்சியின் அவசியத்தையும் நாசமாக்கி அழித்திடும் முயற்சி.
* செம்மொழி மையத்தினுடைய பாவேந்தர் தமிழாய்வு நூலகத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படி புனித ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டது. அதை, இரவோடு இரவாக அவசர அவசரமாக அப்புறப்படுத்திய அநாகரீகச் செயலை இக்கூட்டம் கண்டிக்கிறது. உரிய இடம் தேர்வு செய்து அ.தி.மு.க. அரசு உடனடியாக நிர்மாணிக்காவிட்டால், தமிழ்ச் சான்றோர்களின் துணையோடு அதற்காக மேல் நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்படுகிறது.
* மேலவையைக் கொண்டு வரத் தேவையில்லை என்று அ.தி.மு.க. அரசு குறுகிய எண்ணத்தோடு எடுத்துள்ள முடிவினை உயர்நிலை செயல் திட்டக் குழு கண்டிக்கிறது.
* இலங்கையுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கச்சத்தீவை விட்டுத் தருவதென்று 1974ம் ஆண்டு மத்திய அரசு ஒரு முடிவினை எடுத்தபோது, 21.8.1974 அன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி, “இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உறவுகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்னையில், மத்திய அரசு எடுக்கும் முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். 1974 ஜூன் 29ல் சென்னையில் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசி தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் பிரதமருக்கு, “கச்சத்தீவின் மீது இலங்கை கொண்டாடி வரும் உரிமையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம், மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. நாங்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தைக் கருத்திலே எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கடிதம் அனுப்பினார். ஆட்சியில் இருந்தபோதே 1974ம் ஆண்டு கழகத்தின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியும்; தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாமல், 14.7.1974 அன்று தமிழகம் முழுவதும் கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் நடத்தியும்; கட்சி வேறுபாடுகளுக் கும், அரசியல் வேறுபாடுகளுக்கும் சிறிதளவும் இடம் தராமல் நடவடிக்கை எடுத்தும் கூட, தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் நிலத்தின் ஒரு பகுதி விட்டுக்கொடுக்கப்பட்டது. அதன் காரணத்தால் கச்சத்தீவின் உரிமையை மீட்டெடுக்க வேண்டுமென்று 1974ம் ஆண்டு முதலே திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சமீபத்தில் தேர்தலின்போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. கச்சத்தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை உயர்நிலைச் செயல் திட்டக்குழு வலியுறுத்துகிறது.
15.8.1991 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றிய ஜெயலலிதா தனது உரையிலே இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்பதற்குப் போராடுவேன் என்று சபதம் செய்து விட்டு பத்தாண்டு காலம் ஆட்சியிலே இருந்தவர் கச்சத்தீவை மீட்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் இப்போது தீர்மானம் கொண்டு வந்திருக்கும் நிலையையும் தமிழக மக்களுக்கு குழு சுட்டிக் காட்டுகிறது.
* தமிழகச் சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு ஒரே பகுதியில் அமர இடம் ஒதுக்காமல் தனித்தனியாக ஆங்காங்கு மற்ற எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் அமரத்தக்க வகையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அவை விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்துள்ள முடிவினை ஏற்றுக் கொள்வதென்று முடிவு செய்கிறது.
* கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர் சரத்குமார், பங்குதாரர் கனிமொழி எம்பி ஆகியோரை அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த சி.பி.ஐ. வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானதாகும்.
தொலைக்காட்சி நிறுவனம் கடன் வாங்கியது ஒரு தனியார் நிறுவனத்தின் வியாபார சம்பந்தப்பட்டதே அல்லாமல், அரசு ஒதுக்கிய அலைக்கற்றை விவகாரத்தில் தொடர்புடையதல்ல. கடன் தொகை அனைத்தும் வங்கி மூலமாக வெளிப்படையாக வாங்கப்பட்டதாகும். இந்தக் கடன் பரிவர்த்தனையை அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ. சேர்த்தது கண்டிக்கத்தக்கது.
சி.பி.ஐ. தங்கள் புலன் விசாரணையின் போது கைது செய்யாத ஒருவரை அவர் நீதி மன்ற சம்மன்படி ஆஜராகும்போது அவரை சிறையில் அடைக்க வாதாடுவது சட்டத்துக்கு முரணானதாக சட்ட வல்லுநர்கள் கருத்து வழங்கியுள்ளனர்.
இந்த இரட்டை நிலையையும் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி சட்டப்பூர்வமாக உரிய நடவடிக் கையைத் தொடருவது என்று உயர்நிலை செயல் திட்டக் குழு முடிவு செய்கிறது.
இந்தத் தீர்மானங்களை விளக்கி கட்சி அமைப்புகள் ஒவ்வொரு பகுதியிலும் ஜூன் 20 முதல் ஜூன் 30ம் தேதி வரை பொ துக் கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற் றை நடத்துவதென்றும், ஜூலையில் பொதுக்குழுவினைக் கூட்டுவதெ ன்றும் உயர் நிலை செயல் திட்டக் குழு முடிவு செய்கிறது.
No comments:
Post a Comment