கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 2, 2011

இலவச திட்டங்களுக்காக கடன் கடன் வாங்கவில்லை - கருணாநிதி அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி 02.06.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உடன்பிறப்பே, திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் கடந்த காலங்களில் பல இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போது, அதன்காரணமாக மக்களின் வாழ்க்கையையே பாழாக்குகிறார் என்றும், மக்களைத் தாங்களாக முன்னேற விடாமல் சோம்பேறி யாக்குகிறார் என்றும் சில எதிர்க்கட்சியினரும் ஏடுகள் நடத் தும் சிலரும் கண்டனக் கணைகளை என் மீது பொழிந்தார்கள்.

ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இலவசமாக இருபது கிலோ அரிசி வழங்குகின்ற திட்டத்தைத் தொடங் கும்போது அதைப் போற்றுகிறார்கள், பாராட்டு கிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள்


தேர்தலுக்கு முன்பு அப்போது முதலமைச்சராக இருந்த என்னிடம் கடந்த மார்ச் திங்கள் இறுதியில் சி.என்.என். ஐ.பி.என் சார்பில் பேட்டி கண்ட போது, தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவசத் திட்டங்களைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார்கள்.

தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றீர்கள். 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவசக் கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்டாப், கிரைண்டர் போன்றவைகளை தேர்தல் அறிக்கையில் இலவசமாக வழங்கப் போவதாக அறிவித் திருக்கிறீர்கள்.

தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவசச் சலுகைகளை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது தான் என்று கூறப்படுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்ட போது நான் அளித்த பதிலில், இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற் காக அல்ல-ஏழையெளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.

அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இன்று நேற்றல்ல - இந்த இயக்கத்தைத் தொடங்கியதே அந்த ஏழைகளை வாழவைப் பதற்காகத் தான். ஏழை யின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என் பது தான் எங்கள் தலைவர் அண்ணா அவர் களுடைய முழக்கம். அந்தச் சிரிப்பைக் காண் பதற்காகத்தான்- ஏழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத் தான்-நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவசத் திட்டங்களும் ஒன்றாகும் என்று கூறினேன்.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் என்ற தலைப்பில் தினமணி 25-3-2011 அன்று வெளியிட்ட தலையங்கத்தில், சாலையோரம் கடை விரித்த ஒருவர், ரெண்டு வாங்கினா ஒண்ணு இலவசம் என்று கூவி நுகர்வோரைக் கவர முயன்றால், எதிரே அதே பொருள்களைக் கடை விரித்திருக்கும் மற்றொருவர் ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம் என்று கூவினால் எப்படி இருக்கும்?

அது போலத் தான் இருக்கிறது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை! அ.தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையைப் பற்றிச் சொல்வதென்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொல்லியிருப்பதை விட அதிகமாக நான் இலவசங்களை அள்ளித் தருகிறேன் என்று ஜெயலலிதா சொல்லி யிருக்கிறார் என்று ஒரே வரியில் முடித்து விடலாம்.

2006 தமிழகச் சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க. வின் தேர்தல் அறிக்கை இலவச டி.வி., சமையல் எரிவாயு பற்றிக் குறிப் பிட்ட போது, இத்தகைய இலவசங்களை முழு மையாக எதிர்த்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என்று ஜெயல லிதாவும் இலவசங்களை எதிர்த்தவர் தான் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அந்த ஜெயலலிதா தான் தற்போது ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக இலவச அரிசி திட்டத் தொடக்க விழாவிலே கலந்து கொண்டிருக்கிறார்.

தினமணி நாளிதழில் வெளி வந்துள்ள ஒரு கட்டுரையில் இலவசத் திட்டங்களை தி.மு. கழக அரசு நிறைவேற்றுவதற்காக அதிக அளவில் கடன் வாங்குவதாக எழுதியிருந்தது. தமிழக அரசு வாங்கியிருக்கின்ற கடன்கள் பற்றி நான் முதல்வர் பொறுப்பிலே இருந்தபோதே பல முறை விளக்க மாக எழுதியிருக்கிறேன்.

பேரவையிலும் நிதி அமைச்சர் பேராசிரியர் நிதிநிலை அறிக்கைக்கு பதிலளித்த போது தெளிவாகப் பதில் சொல்லி யிருக்கிறார். இருந்தும் தி.மு. கழக அரசாங் கத்தைக்குறைகூறும் நோக்கத்தோடு தினமணி தாக்கி கட்டுரை வெளியிட்டிருந்தது.

ஆனால் அதே ஏடு அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களைப் பற்றி தற்போது வாயைத் திறக்க வில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஓர் அரசாங்கத்திற்கு எப்படியாவது கடன் வாங்கியே தீரவேண்டும் என்பது நோக்கமல்ல. தி.மு. கழகம் பொறுப்பிலே இருந்த போதுள்ள நிதி சூழ்நிலையில், அரசாங்கம் மக்களுக்காக நல்லபல திட்டங்களைத் தீட்ட வேண்டுமேயானால், கடன் வாங்கித் தான் அந்தத் திட்டங்களைத் தீட்ட வேண்டிய நிலையிலே இருந்தது என்பது தான் உண்மை.

மேலும் தமிழக அரசைப் பொறுத்தவரையில் இலவசத் திட்டங் களுக்காக கடன் வாங்கவில்லை என்றும், கட்டுமானப் பணிகள் போன்ற மூலதனச் செலவுகளுக்காக மட்டுமே கடன் வாங்கியது என்றும், அதுவும் எந்தெந்த திட்டங்களுக்காக எவ்வளவு கடன் யார் யாரிடமிருந்து வாங்கப் பட்டுள்ளன என்ற விவரங்களை யெல்லாம் நான் விரிவாகவும், விளக்க மாகவும் அப்போது எழுதியதை; தினமணி போன்ற நாளிதழ்கள் படிக்காமலேயே பொத்தாம்பொதுவில் கழக அரசைத் தாக்கி எழுதியிருந்தது.

மேலும் கழக ஆட்சியில்

மத்திய அரசு கூறியுள்ள அந்தக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தான் கடன் வாங்கப்பட்டது, அதுவும் அத்தியாவசியப் பணிகளுக்காகத் தான் வாங்கப்பட்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரையாளர் புரிந்து கொள் வது நல்லது. மேலும் ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன் எதற்கெடுத்தாலும் தி.மு. கழக அரசு ஒரு இலட்சம் கோடி கடனை வைத்துள்ளது, அதனை சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் நிதித் துறை பொறுப்பிலே உள்ளவர்கள் அதற்கான விளக் கத்தை அளித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், முதி யோர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் பொறுப்பு மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசு களுக்கும் உண்டு. வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளில் கூட இலவசக் கல்வி, முதியோர் பென் ஷன், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை, உணவுக் கூப்பன், தேசிய சுகாதாரப் பாதுகாப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

சில நாடுகளில் ஏழைகளுக்கு நேரடி யாகவே பணமாகவும் உதவிகள் வழங்கப்படு கின்றன. இதன் அடிப்படையில்தான் தமிழ்நாட்டி லும் தி.மு. கழக அரசு, உணவுப் பாதுகாப்பை அளிக்கும்வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச வேட்டி சேலை, உணவு உற்பத் தியைப் பெருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியம், ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் தொகை, ஏழைகளுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டம், குடிசையில் வாழும் மக்களுக்கு கான்க்ரீட் வீடுகள், பள்ளிகள் கல்லூரிகள்,

தொழிற்கல்வி வரை இலவசக் கல்விக் கட்டணம் போன்ற எண்ணற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது. தி.மு. கழக அரசு நடைமுறைப்படுத்தி வந்த ஒரு சில திட்டங்களைத் தான் தற்போது அ.தி.மு.க. அரசு சற்று விரிவாக்கம் செய்து நடைமுறைப் படுத்த முன் வந்துள்ளது. குறிப்பாக தி.மு. கழக அரசு 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட போது தான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்து, தொடங்கி பிறகு சில மாதங் களுக்குப் பின் அந்தத் திட்டத்தையே மேலும் விரிவுபடுத்தி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப் படுத்தி வந்தது.

அந்தத் திட்டத்தையே தான் தற் போது ஜெயலலிதா அரசு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 20 கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்கப்பட்டதற்கு மாறாக தற்போது அதே 20 கிலோ அரிசியை 20 ரூபாய் வாங்காமலே இலவசமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இலவச அரிசி
தி.மு. கழக அரசு ஆட்சியிலே இருந்த போது இதே முறையில் 20 கிலோ அரிசியினை இலவசமாக மக்களுக்கு வழங்கலாமா என்று அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த போது, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்கும்போதே, எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டித்துப் பேசுகின்ற நேரத்தில் இலவசமாகவே அரிசியை வழங்குவது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தார்கள் என்பதை மனச்சாட்சியுள்ள அந்த அதிகாரிகள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏழையெளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கான திருமண உதவித் திட்டமும் தி.மு. கழக அரசின் திட்டம் தான். அந்தத் திட்டத் தொகையைத் தான் அ.தி.மு.க. அரசு அதிகமாக்கி தற்போது அறிவித்திருக் கிறார்கள். இது தவிர, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களான இலவச சமையல் எரிவாயு திட்டம், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களும் தி.மு. கழக அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இத்திட்டங்களையெல்லாம் இலவசத் திட்டங்கள் என்றும் இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு விளைவிப்பவை என்றும் கண்டித்துப் பேசியவர்கள் எல்லாம் தற்போது இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வந்திருப்பதைப் பார்க்கும்போது, எப்படியோ தி.மு. கழக அரசு செய்யத் தொடங்கிய சாதனைகள் நல்லவேளை நிறுத்தப்பட்டு விடாமல் தொடரு கிறதே என்று அந்த இலவச உதவிகளைப் பெறுவோர் எண்ணிப் பார்ப்பார்கள் என்று நம்பலாம்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தொடக்கத் திலேயே பயன்தந்துவிடும் எனக் கருத முடியாது. பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதால்தான் ஏழைகளுக்கும் மற்றவர் களுக்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டு ஏழைகளும், பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது.

உதாரணமாக தி.மு. கழக அரசு இலவசக் கல்வியை முதல் தலை முறை மாணவர்களுக்கு தொழிற்கல்வி வரை நீட்டித்ததால் 2005-2006 ஆம் ஆண்டில் கல்லூரி களிலும் பாலிடெக்னிக்குகளிலும் சேர்ந்த மாணவர் களின் எண்ணிக்கை 2.85 இலட்சத்திலிருந்து 2010-2011 ஆம் ஆண்டில் 6.9 இலட்சமாக உயர்ந்தது.

கழக அரசு வழங்கி வந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, எண்ணை போன்ற பொருள்களுக்கு ரூபாய் 4000 கோடி செலவிட்டதால்தான் ஏழைக் குடும்பங்கள் விலைவாசி உயர்வின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப் பட்டு உணவுப் பாதுகாப்பைப் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், பட்டினிச் சாவு தமிழகத்தில் கழக ஆட்சியிலே இல்லை என்ற நிலை உருவா கியிருந்தது.

அதே போல் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு. கழக ஆட்சியில் ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்திற்கு ரூபாய் 922 கோடியும், பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூபாய் 4251 கோடியும் என பல திட்டங்களின் வாயிலாக வழங்கப்பட்ட இந்த நிதியுதவி ஏழை மக்களைச் சென்றடைந்துள்ளது.

சுமார் 2 இலட்சத்து 62 ஆயிரம் ஏழைகள் உயர்சிகிச்சையை இலவசமாகப் பெற்றுள்ள காப்பீட்டுத் திட்டம், பல உயிர்களைக் காத்துவரும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. அரசு முன்பிருந்த அதே வேகத்தோடு நடத்தப் போகி றார்களா? அல்லது அதையும் தலைமைச் செயல கத்தைப் போல தமிழ்ச் செம்மொழி மையத்தைப் போல - சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போல நிறுத்தப் போகிறார்களா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியும்.

இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங் களைப் புறக்கணித்துவிட்டு வளர்ச்சித் திட்டங்களை மட்டும் ஒரு அரசு செயல்படுத்தினால் ஏழை எளிய மக்களின் நலனைப் புறக்கணிக்கும் அரசாகவே அந்த அரசு இருக்கும். இந்தத் திட்டங்களைச் செயல் படுத்துவதால் தான் அரசுக்குக் கடன் சுமை ஏறியுள்ளது என்ற வாதமும் சரி அல்ல. ஒரு அரசு அதன் வளர்ச்சித் திட்டங் களுக்கும், சமூகப்பாது காப்புத் திட்டங்களுக்கும் கடன் வாங்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பல முறை தெளிவு படுத்தப்பட்டுள்ளபடி அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் கூட கடன் பெற்று திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

இந்தியாவில் பிற மாநிலங்களும் கடன் பெற்றுத்தான் வளர்ச்சித் திட்டங்களையும், சமூகநலப் பாதுகாப்புத் திட்டங் களையும் செயல் படுத்துகின்றன. பிற மாநிலங் களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு உள்ள கடன் பொறுப்பு மிகக் குறைவானது என்பது பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிர்ணயித்த அளவுப்படி ஒரு மாநிலத்தின் கடன் பொறுப்பு அந்த மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் கடன் பொறுப்பு 19.58 சதவீதம் அளவிற்கே உள்ளது.

மேலும், அரசு பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை 2006-2007 முதல் தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும் 2008-2009 வரை மாநிலத்தின் வருவாய் வரவு வருவாய் செலவை விட அதிகமாகவே இருந்தது. 2009-2010 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்படக் காரணம் வரி வருவாய் குறைந்ததும், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட திருத்திய சம்பள விகிதமும் தான்.

அதுவும் வரும் ஆண்டுகளில் மீண்டும் வருவாய் உபரியை எட்டும் நிலையில் தமிழக அரசின் நிதி நிலை வலுவாகவே அமையும். எனவே, இலவச திட்டங்களால் தான் தமிழக அரசின் கடன் சுமை ஏறிவிட்டது என்ற ஒரு பொய்ப் பிரச்சாரம் ஏழை மக்களுக்கு இத்தகைய நலத் திட்ட உதவிகளை அரசு வழங்குவதற்கு ஒரு இடையூறு ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.

தினமணி நாளிதழ் தனது தலையங்கத்தில் ஒரு புறம் உபரி, மறுபுறம் கடன் என தி.மு. கழக ஆட்சியிலே இருந்த நிதி நிலைமை பற்றி விமர்சனம் செய்தது. தமிழக அரசின் கடன் பொறுப்புகள் பற்றி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பக்கம் 55 பத்தி 4-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 31.3.2006 ஆம் நாளன்று தமிழக அரசின் மொத்த கடன் பொறுப்பு ரூபாய் 57457 கோடி என்பது அப்போதைய மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதம் ஆகும்.

2010-11 ஆம் ஆண்டில் அரசின் மொத்த கடன் பொறுப்பு ரூபாய் 101541 கோடியாக உயர்ந்திருந்த போதிலும், இது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 19.58 சதவீதம் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என அனுமதித்துள்ளது.

எனவே தமிழக அரசின் கடன் பொறுப்பு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளது. தமிழக அரசால் பெறப்பட்ட கடன்கள் எதுவும் ஊதாரித் தனமாக செலவிடப்படவில்லை. இவை அனைத்தும் மூலதனப் பணிகளுக்காக செலவிடப் பட்டுள்ளன. 2006-07 ஆம் ஆண்டு முதல் 2010-11 ஆம் ஆண்டு வரை இந்த மாநில அரசின் கடன் தொகை ரூபாய் 44083 கோடியாகும்.

இதே காலகட்டத்தில் தி.மு. கழக அரசு மூலதனப் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ரூபாய் 44666 கோடியாகும். கடன் பெற்று இலவசத் திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது என்பது தவறான கருத்து.

அ.தி.மு.க ஆட்சியிலிருந்த போது அதாவது 2001-02 முதல் 2005-06 வரை மொத்தமாக பெறப்பட்ட கடன் ரூபாய் 28721 கோடி. இதே காலகட்டத்தில் அ.தி.மு.க. அரசால் மூலதனப் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை ரூபாய் 15613 கோடிதான். தி.மு.கழக அரசு உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண்டது.

அதேபோல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் கழக அரசு மேற்கொண்டுள்ளது.

எனவே பொறுப் போடுதான் கடனைப் பெற்று தி.மு. கழக அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளலாம். தமிழகத்தின் நிதிநிலை குறித்து மத்திய நிதி அமைச்சர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் 9.4.2011 அன்று சென்னையில் கூறும்போது

கடன் அளவு

13வது நிதி ஆணையம் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், எந்த மாநிலமும் 2011-12ஆம் ஆண்டில் அதன் ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் 3 முதல் 3.5 சதவிகிதத்திற்குமேல் கடன் வாங்கக் கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத் தன்மையை யும் திருப்திகரமாகக் கடைப்பிடித்து வரும் ஒருசில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். 2011ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிய நிலவரப்படி, தமிழக அரசின் ரொக்கக் கையிருப்பு 13 ஆயிரத்து 537 கோடி ரூபாயாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி யிலிருந்து ஒருநாள்கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையைத் (over draft) தமிழக அரசு பெற்றதில்லை. ஆனால், பல மாநிலங்கள் கூடுதல் வரைவுத் தொகையைப் பெற்றுள்ளன என்று தெரிவித்திருப்பதையும் கவனித்தால் தி.மு. கழக ஆட்சியில் அளவுக்கு மீறி கடன் வாங்கவில்லை என்பதையும், கடன் வாங்கி கழக அரசு இலவசத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

- அன்புள்ள,

மு.க.



இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment