கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, June 17, 2011

ரகளை செய்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரி மாற்றம்: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயலா? கலைஞர் கேள்வி


போலீஸ் துணை கமிஷனர் மீது அமைச்சர் தந்த புகாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா என்ன பதில் கூறப் போகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
கருணாநிதி 16.06.2011 அன்று வெளியிட்ட கேள்வி & பதில் அறிக்கை வருமாறு:
உள்துறை செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்ட ஒரு அதிகாரியை 24 நாட்களில் திடீரென்று மாற்றி விட்டார்களே?
நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற பெருமை உடையது இவ்வுலகம் என்று வாழ்க்கையை பொறுத்தே வள்ளுவர் எழுதிவைத்திருக்கிறார். அவ்வாறிருக்க அரசுப் பதவியில் இருப்பவர்கள் நிர்வாக வசதிக்காக இப்படி மாற்றப்படுவது இயல்புதானே?
உள்துறை செயலாளராக இருந்தவர் 24 நாட்களில் மாற்றப்பட்டார் என்றால், அந்த பதவிக்கு புதிதாக வந்திருப்பவரோ இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று பொறுப்புக்களில் அமர வைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளார்.
மின் வாரிய தலைவராக ஒருவரை நியமித்தார்கள். மூன்றாவது நாளே அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை அமர்த்தியிருக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவதாக சொன்னவர் ஆட்சிதானே? இப்படி மாற்றப்படுவதெல்லாம் வேடிக்கை இல்லை. வாடிக்கை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை நீங்கள் வாங்கித் தந்தீர்கள் என்பதால், செம்மொழி மைய நிறுவனத்திற்கு இடம் கொடுக்காமல் அவமானப்படுத்தி வரும் அ.தி.மு.க. அரசு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாட புத்தக அட்டையில் இருந்த செம்மொழி மாநாட்டு அடையாள சின்னத்தை மறைப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாட புத்தகங்கள்தான் இந்த ஆண்டும் வழங்கப்பட வுள்ளன. அந்த புத்தகங்கள் ஏற்கனவே தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன.
அதில் வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயன்ஸ் முதலிய பாட புத்தகங்களில் உள்ள அட்டைப் படங்களில் தமிழ் செம்மொழி மாநாட்டு அடையாள சின்னம் (லோகோ) மற்றும் சில பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
அய்யன் திருவள்ளுவரின் உருவமும், சிந்து சமவெளி நாகரிகத்தின் குறியீடுகளும், குறள்வரியும் அடங்கியுள்ள அந்த அடையாள சின்னத்தையும், அதன் கீழ் இடம் பெற்றுள்ள பாடல்களையும் மறைக்க அ.தி.மு.க அரசு முடிவு செய்து, ஏற்கனவே அனுப்பப்பட்ட அந்தப் புத்தகங்களில் உள்ள அடையாள சின்னத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கின்ற முயற்சி நடைபெறுகிறது.
அரசுக்கு பொருள் ஆழம்மிக்க அந்த சின்னத்தில் வெறுப்பு ஏற்பட்டிருக்காது. அதன் மத்தியில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நான் கைப்பட எழுதிய வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. சமதர்மத்தை புறந்தள்ளும் இந்த ஆட்சியில் அந்த வார்த்தைகள் இருக்கலாமா? எனவே அகற்றிடும் முயற்சி போலும். இப்படியெல்லாம் செய்தால்தானே அதிகாரிகள் நல்ல பெயர் எடுக்க முடியும்.
காவல் துறை விவகாரங்களில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகமாக இருந்தது, ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறை விவகாரங்களில் கட்சிக்காரர்கள் தலையிட மாட்டார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
அ.தி.மு.க ஆட்சி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் காவல் துறை விவகாரங்களில் ஆளுங்கட்சியினர் எந்த அளவிற்கு தலையிட்டார்கள் என்பதற்கு வேறு எங்கும் சாட்சி தேடி அலைய வேண்டாம். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவமே தக்க சான்றாகும்.
ஆளுங்கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரும், அமைச்சர் ஒருவரும் காவல் நிலையத்திற்கே அதுவும் இரவிலே சென்று காவல் துறையினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆளுங் கட்சியை சேர்ந்த ஏழு பேரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். துணை கமிஷனர் மீது ஒரு அமைச்சரே புகார் கூறியிருக்கிறார். காவல்துறை முதலமைச்சர் பொறுப்பிலே உள்ளது.
இது போன்ற சம்பவம் தி.மு.க ஆட்சியில் நடைபெற்றிருந்தால் இந்நேரம் ஜெயலலிதா காவல் துறை பொறுப்பையேற்றுள்ள முதலமைச்சர் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென்று அறிக்கை கொடுத்திருப்பார். இந்த சம்பவத்திற்கு என்ன பதில் கூறப் போகிறார்?
கட்சிக்காரர்கள் தவறு செய்யவில்லை, காவல் துறை அதிகாரிகள்தான் தவறு செய்து விட்டார்கள் என்று பதில் கூறுவாரேயானால், அந்த காவல் துறைக்குப் பொறுப்பேற்றிருப்பவர் என்ற முறையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்து விட்டார். என்ன பதில் தெரியுமா? நள்ளிரவுக்கு மேல் ஓட்டலில் கூடி காவல் துறையினரை எதிர்த்துப் பேசி தகராறு செய்தவர்கள் மீது நியாயமாக நடவடிக்கை எடுத்த காவல் துறை அதிகாரி ஒரே நாளில் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டு விட்டார்.
என்னே நியாயம்? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் செயல் எப்படி? இனி எந்த காவல் துறை அதிகாரியாவது அராஜகம் செய்யும் கட்சிக்காரர்கள் மீது, ஏன் காவல் நிலையத்திற்கே ஒரு அமைச்சர் வந்து கட்சிக்காரர்களை மீட்டுச் சென்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? அ.தி.மு.க. வினரை வெற்றி பெறச் செய்த தமிழக மக்களுக்கு ஒரு ஜே போடலாமா?
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய கூலியை அ.தி.மு.க ஆட்சியிலே குறைத்துக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறதே?
அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தீக்கதிரில், அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு கிராமத்தில் 100 நாள் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு
^20
மட்டுமே கூலியாக வழங்கப்பட்டதாகவும் அதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிறகு அதிகாரிகள் வந்து நாள் ஒன்றுக்கு ரூ. 85 கூலியாக வழங்குவதாக தெரிவித்த பிறகு மறியலை திரும்பப் பெற்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. வாழ்க மகாத்மா என்று வாய் நிறைய குரலெழுப்ப தோன்றுகிறதல்லவா?
பறிபோன தலித் நிலங்கள் மீட்கப்படுமா? என்று அந்த ஏட்டில் எழுதியிருக்கிறார்களே?
படித்தேன். எந்தெந்த ஊர்களில் தலித் நிலங்கள் யார் யாரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
தி.மு.க ஆட்சியில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் என்.வரதராசன் தலைமையில் என்னை சந்தித்து, சிறுதாவூர் கிராமத்தில் தலித்களுக்கு சொந்தமான நிலங்களை ஜெயலலிதாவிற்கு வேண்டியவர்கள் பறித்துள்ளதாகவும், அதனை மீட்க வேண்டும் என்றும் மனு கொடுத்தார்கள். நீதியரசர் சிவசுப்ரமணியம் தலைமையிலே குழு அமைத்து அதை விசாரிக்க சொன்னேன். தலித் நிலங்கள் பறிக்கப்பட்டது உண்மைதான் என்றும், அந்த நிலங்களை மீண்டும் அரசு கைப்பற்ற வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால் தீக்கதிர் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் தேடித் தேடி பார்த்தாலும் சிறுதாவூர் விவகாரத்தையே காணவில்லை. அந்தக் கோரிக்கையை மீண்டும் வைப்பார்கள் என்றும், சிறுதாவூர் தலித்களுக்காக வாதாடுவார்கள் என்றும் நம்புவோம்.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து தாக்கியிருக்கிறார்களே?
அப்படியா? அது தவறான செய்தியாக இருக்கலாம். அம்மையாரின் ஆட்சியிலே அப்படியெல்லாம் சட்டம் ஒழுங்கு கெடுகின்ற அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறாது.
அமைச்சர் இல்லாத மாவட்டங்களில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்களே அமைச்சர் பாணியில் செயல்படுகின்றனர் என்று செய்தி வெளியாகியிருக்கிறதே?
பொறுப்புக்கு வந்து ஒரு மாதம்தானே ஆகிறது. அதனால்தான் அமைச்சர் பாணியில் செயல்படுகிறார்கள். இன்னும் சில நாட்கள் ஆகிவிட்டால் அமைச்சர்களை போலவே செயல்படுவார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். அரிசி கடத்தல்: அரசின் பதில் என்ன? - கலைஞர்
ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வெளியாகும் செய்திக்கு அதிமுக அரசு பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்பதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

அரிசி கடத்தல் வாகனங்கள் பெரும்பாலும் மதுரை, பழனி, திண்டுக்கல், நத்தம், ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. திமுக ஆட்சியில் ரேஷன் அரிசி கடத்தல் நடந்ததாக சொன்னவர்கள், இதற்கு விரைவில் பதில் சொல்லுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment