திமுக தலைவர் கலைஞர் 12.06.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை மீது பொருளாதாரத் தடை கோரும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் வரவேற்றது திமுக. அப்போது பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், காவிரிப் பிரச்னையில் தமிழகத்தை திமுக வஞ்சித்துவிட்டது என்று வேண்டுமென்றே பேசி விஷத்தைக் கக்க வேண்டிய அவசியம் என்ன?
இலங்கைத் தமிழர்களுக்காக நான் எதைச் செய்தாலும் அதை ""கபட நாடகம்'' என அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா.
1956 ல் சிதம்பரம் திமுக பொதுக் குழுவில் அண்ணா முன்னிலையில் இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை நான்தான் முன்மொழிந்தேன். 24.8.1977 ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பிரமாண்ட பேரணி நடத்தியது திமுக. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு கோரி 13.8.1981 ல் பிரதமருக்கு தந்தி அனுப்பியது நான்.
1981 ல் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஆகஸ்ட் 15 ம் நாள் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டேன்.
25.7.1983 ல் வெலிக்கடை சிறையில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற 35 தமிழர்களை கொலை செய்தபோது பெரிய பேரணியை திமுக நடத்தியது. மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை காட்ட நானும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை 10.8.1983 ல் ராஜிநாமா செய்தோம். 16.5.1985 ல் காஞ்சிபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 23 ம் தேதி சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதை அடுத்து சென்னையில் ஊர்வலம் நடத்தி, அந்த உத்தரவை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்து, அதன் தொடர்ச்சியாக நாடு கடத்தும் உத்தரவைத் திரும்பப் பெறச் செய்தோம்.
1990 ஜூன் 19 ல் வி.பி. சிங் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அத்வானி, வாஜ்பாய், அருண் நேரு உள்ளிட்ட தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். பிரச்னை குறித்து அனைத்து விவரங்களையும் விளக்கிவிட்டு, தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பிய போதுதான், சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்கள் பத்மநாபா உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது.
1997 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது, ""சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கிவிட்டார்கள்'' என ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காக திமுக ஆட்சியில் மத்திய அரசை வலியுறுத்தி எதுவும் செய்யவில்லை என கூறுகிறார்கள். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி 23.4.2008 ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 6.10.2008 ல் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசியதை மறந்துவிட்டார்கள்.
இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ""விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என தெரிவித்தார்.
அப்போது அப்படிக் கூறிவிட்டு இப்போது நடத்துவதுதான் கேலிக்கூத்தே தவிர, நான் எந்தக் காலத்திலும் கேலிக் கூத்தாடியவன் இல்லை. இதை இலங்கைத் தமிழர்களும், உலகம் முழுதும் இருக்கிற தமிழர்களும் நன்கு உணர்வார்கள். 2006ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 7.12.2006, 23.4.2008, 12.11.2008, 23.1.2009 நாள்களில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காகப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். குறிப்பாக 23.4.2008 ல் பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக திமுக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய அரசு இலங்கைத் தூதர்களை அழைத்து அன்று பிற்பகலிலேயே பேசியதாகவும், இந்தத் தகவலை எனக்குத் தெரிவிக்குமாறு பிரதமர் கூறியதாகவும் சொன்னார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் கவிதை பற்றிக் குறிப்பிட்ட ஜெயலலிதா, புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார். 2009 ல் இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக்கூட தயார் என்று அறிவித்தவன் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் நிச்சயம் உணர்வார்கள். மனசாட்சி உள்ள சிலராவது இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால், அதுவே எனக்கு ஓர் ஆறுதல்தான் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment