கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, June 7, 2011

தி.மு.க.விற்கு வாக்களித்த ஒன்றரைக் கோடி மக்கள் - சுப.வீரபாண்டியன்


2011 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

அணிகள் வென்ற இடங்கள் பெற்ற வாக்குகள்

அ.தி.மு.க.அணி 203 1,62,07,781
தி.மு.க.அணி 31 1,45,13,816

கடந்த சட்ட மன்றத் தேர்தலில், அ.தி.மு.க. அணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக வும், தி.மு.க. அணி படுதோல்வி அடைந்துள்ள தாகவும் நம்மில் பலரே கருதிக் கொண்டிருக் கிறோம். ஆனால் அது ஒரு மாயத் தோற்றமே, உண்மையன்று. இந்தத் தேர்தலில் மட்டுமில்லை, ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற ஒரு பொய்த் தோற்றமே உருவாக்கப் பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. அணி 40 இடங்களிலும் தோல்வியைத் தழுவி இருந்தாலும், அப்போதும் அந்த அணி ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை வாங்கி இருந்தது என்பதே உண்மை. எனவே தேர்தல் முறையில் உள்ள குறைபாடு, உண்மைக்கு மாறான தோற்றத்தையே ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துகிறது.

வாக்குகளின் எண்ணிக்கையில் கட்சிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்படும்போது மட்டுமே இக்குறை நீங்கும். எடுத்துக்காட்டாக, தமிழகம் முழுவதும் 180 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளதாக வைத்துக்கொள்வோம். தேர்தலில் ஓர் அணி 2 கோடி வாக்குகளையும், இன்னொரு அணி 1 கோடி வாக்குகளையும் பெறுவதாகக் கொள்வோம். இப்போது 2 கோடி வாக்குகளைப் பெற்ற அணிக்கு 120 இடங்களும், அடுத்த அணிக்கு 60 இடங்களும் ஒதுக்கப்படும். இதுவே சரியான ஜனநாயகம். ஆனால் இன்றுள்ள தேர்தல் முறையில், ஒரு தொகுதியில் ஒரு கட்சி அல்லது அணி, ஒரே ஒரு ஓட்டு கூடுதலாகப் பெற்றாலும், வெற்றிக்கு அது போதுமானதாக உள்ளது. ஒருவர் 1,00,001 வாக்குகளையும், இன்னொருவர் ஒரு இலட்சம் வாக்குகளையும் பெற்றிருப்பாரெனில், முதலாமவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுவார். அதில் பிழையில்லை. ஆனால், இரண்டாமவர் பெற்றுள்ள ஒரு இலட்சம் வாக்குகளுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான் இங்குள்ள மிகமிகப் பெரிய குறைபாடு.

இந்தக் குறைபாட்டின் காரணமாகவே, கடந்த தேர்தலில் தி.மு.க.அணி படுதோல்வி அடைந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ ஒன்றரைக் கோடி வாக்குகளைப் பெற்றுள்ள ஓர் அணி படுதோல்வி அடைந்துள்ளது என்றால் அது எப்படி உண்மையாகும்? இரண்டு அணிகளுக்கும் இடையில் உள்ள வாக்குகளின் வித்தியாசம் 16,93,965 மட்டும்தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வேறுபாடு சில மாதங்களிலேயே கூட மாறிவிடுவதற்கான வாய்ப்பு உண்டு. பெண்ணாகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில், கட்டுத் தொகையைக் கூட இழந்துவிட்ட அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும், 6 மாத கால இடைவெளியில் இப்போது அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடந்த தேர்தலில் மொத்தம் பதிவாகியுள்ள மூன்று கோடியே இருபது லட்சம் வாக்குகளில், 16.93 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் என்பது, வெறும் ஐந்து சதவீதத்திற்குச் சற்றுக் கூடுதல். பத்து சதவீதம் வரையிலான இடைவெளி என்பதே இயல்பானதுதான். இவ்வாறு இருக்க, ஐந்து சதவீத இடைவெளியை மாற்றுவதற்கு ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதில்லை. திட்டமிட்டும், ஒற்றுமையாகவும் உழைத்தால் ஐந்து மாதங்களிலேயே கூட மாற்றம் வரும். அந்த அம்மையார் தன் பங்கிற்கு ஏதேனும் செய்தால், அந்த மாற்றம் அதற்கு முன்பாகவே கூட வந்துவிடும். எனவே இந்தத் தோல்வி கண்டு சோர்ந்து, துவண்டு முடங்கிப் போகவேண்டிய முகாந்திரம் ஏதுமில்லை. உணர்வெனும் கனலிடை அயர்வினை எரித்து, உரிய செயல்களில் ஈடுபட வேண்டிய நேரமிது.

சுவிஸ் போன்ற சில மேலை நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தேர்தல் முறைகளை நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய தருணமும் இப்போது வந்திருக்கிறது. நம் அரசமைப்புச் சட்டத்திலும் அதற்கேற்ப சில மாற்றங்களைச் செய்தால், எதிர்காலத்திலாவது ஜனநாயகம் மேலும் வலுப்பெற வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக இரண்டு மாற்றங்களை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒன்று, ஒவ்வொரு தொகுதிக்குமான தேர்தல் என்றில்லாமல், போட்டியிடும் கட்சிகள் அல்லது அணிகளுக்கு இடையிலான ஒட்டுமொத்தத் தேர்தலாக அறிவிக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் பதிவாகின்ற வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில், விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் வகையில் ஒவ்வொரு அணிக்கும் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, இந்தத் தொகுதிக்கு இவர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட வேண்டிய தேவை இல்லை. எல்லாத் தொகுதிகளிலும் கட்சிகள்தான் மோதுகின்றனவே தவிர, தனிப்பட்ட வர்களுக்குள் எந்தப் போட்டி யும் இல்லை. இறுதி முடிவு வந்த தற்குப் பிறகு, தங்கள் அணி எத்தனை இடங் களில் வெற்றி பெறுகிறதோ, அத்தனை உறுப்பினர்களின் பெயர்களைக் கட்சி அறிவிக்கலாம்.

அப்படியானால், இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது எப்படித் தெரியும் என்ற கேள்வி எழலாம். மாநகர, நகர, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகளின் மேம்பாட்டிற்குப் பொறுப்பான வர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், ஒட்டுமொத்தமாக நாட்டுநலன், புதிய சட்டங்கள், பல்வேறு துறைகளின் மேம்பாடு ஆகியனவற்றிற்கே பொறுப்பேற்க வேண்டும்.

புதிய முறையின் மூலம், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியைச் சார்ந்தவர்கள் கூடுதலாக இருக்கின்றனர் என்று பார்த்து, அந்த சாதியைச் சார்ந்த ஒருவரை நிறுத்தும் பிற்போக்குத்தனம் உடைபடும். அதனால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் சாதிகளின் செல்வாக்கு முற்றிலுமாய் முறிந்து போகும். உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மட்டுமே, வேட்பாளர் நல்ல குணநலன் உடையவரா, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவாரா என்பன போன்ற கேள்விகள் எழும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் அதற்கு இடமில்லை.

ஒவ்வொரு கட்சியும், வெற்றி பெற்றுள்ள இடங்களின் அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிக்கும்போது, குறிப்பிட்ட சதவீதத்தினர், அட்டவணைச் சாதியின ராக (எஸ்.சி) இருக்க வேண்டும் என்பது சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான வேறுபாடு, மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக இல்லாமல், இரண்டு அணிகளும் நெருக்கமான இடங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு புதிய தேர்தல் முறையில் உள்ளமையால், ஜனநாயகம் வலிமைப்படும்.

எனவே நாம் நெஞ்சில் கொள்ளவேண்டியவை இரண்டு. கடந்த தேர்தலில், இரண்டு அணிகளுக்கும் இடையில் வாக்குகளில் பெரும் வித்தியாசம் ஏதும் இல்லை என்பதும், புதிய முறையில் தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதுமே அவை.

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment