கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 15, 2011

கச்சத்தீவை தி.மு.க. தாரைவார்க்கவும் இல்லை, உடன்படவும் இல்லை: கலைஞர் பதில்


கச்சத்தீவை மீட்க முதல்வராக இருந்த போது ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை என்ன? என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 14.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கச்சத் தீவை திரும்பப் பெற உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறை இணைந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்து, அதற்காக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வந்து 9&6&2011ல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சத் தீவுக்காக பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது பற்றி நமக்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் அந்தத் தீர்மானத்தை முன் மொழிந்த இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், அந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய எதிர்க்கட்சியினரும் தேவையில்லாமல் கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட என்று ஆரம்பித்து, கச்சத் தீவினை நான்தான் மத்திய அரசிடம் கூறி இலங்கைக்கு வழங்கும்படி கூறியதைப் போல எண்ணிக் கொண்டு என்மீது வசைமாரி பொழிந்திருக்கிறார்கள்.
கச்சத் தீவு மத்திய அரசினால் திராவிட முன்னேற்றக் கழக அரசின் எதிர்ப்பையும் மீறி இலங் கைக்கு வழங்கப்பட்டது பற்றியும், அதனை வழங்கும்போது 1974ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்திலே இருந்த உரிமைகள்கூட, 1976ம் ஆண்டு தமிழகத்திலே குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்ற போது பறிக்கப்பட்டுவிட்டன என்பது குறித்தும் நான் பல முறை விளக்கமளித்திருக்கிறேன்.
அந்த 1976ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு வரையிலான 34 ஆண்டுகளில் சுமார் 22 ஆண்டுகள் அ.தி.மு.க.வும், 12 ஆண்டுகள் தி.மு.க.வும் தமிழகத்திலே ஆளுங்கட்சியாக இருந்திருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி செய்த 22 ஆண்டுகளில் கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை?
1991ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு தீர்மானத்தையும் பேரவையிலே முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றினார். 1992ல் தமிழகச் சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசும் போது, கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
9&6&2011ல் பேரவையில் பேசிய ஜெயலலிதா, தான் முதல் அமைச்சராக இருந்தபோது கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, குறிப்பாக நான் முதலமைச்சராக இருந்தபோது கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக் கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பேசியிருக்கிறார்.
அவர் என்ன முயற்சி மேற்கொண்டார் என்று அவரே சொல்லியிருக்கிறார். அதாவது மத்திய அரசையும், பாரதப் பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தியதாகவும் ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பேசியிருக்கிறாரே, அது உண்மையா?
2009ம் ஆண்டு தி.மு.கழகம் ஆளுங்கட்சியாக இருந்தபோது ஜூன் 18ம் தேதியன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்தபோது, பேரவைத் தலைவரால் அனுமதிக்கப்பட்டு உறுப்பினர்கள் ஜெயக்குமார், ஞானசேகரன், கோ.க.மணி, மகேந்திரன், சிவபுண்ணியம், ரவிக்குமார் பல்வேறு கருத்துக்களை அவையில் எடுத்துச் சொன்னார்கள்.
பேரவையில் 9&6&2011ல் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதின் காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரே முன்பொரு முறை இதைப்பற்றிக் கூறும் போது மீனவர்கள் இண்டர்நேஷனல் பவுண்டரி லைனைக் கடந்து சென்று கச்சத் தீவு அருகில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்தால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவர்கள் பிடித்து வைத்திருக்கின்ற மீன்களை எல்லாம் கைப்பற்றிக் கொண்டு, அவர்களுடைய படகுகளை எரித்து, இப்படிப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ நடந்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுவாக ஜெயலலிதா குறிப்பிட்டதைப் போல அந்த பவுண்டரி லைனைத் தாண்டிச் சென்றால், நல்ல வகை மீன் கிடைக்கும் என்று வரம்புமீறி எண்ணுகின்ற சில மீனவ மக்களால், அவர்கள் தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது என்ற விபரீதமான உண்மை வெளிப்படுவதை நாம் மறந்துவிடக் கூடாது.
கச்சத் தீவை தி.மு.க. ஆட்சி தாரை வார்த்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார்கள். அப்படி தாரை வார்த்த எந்தச் சம்பவமும் 1974ம் ஆண்டில் நடைபெறவில்லை. கச்சத் தீவிலே மீன் பிடிக்கும் உரிமை, யாத்திரை செல்கின்ற உரிமை, மீன் வலைகளை காய வைப்பதற்கான உரிமை இவைகள் எல்லாம் மீனவ மக்களுக்கு உண்டு என்கிற ஷரத்து ஒப்பந்தத்திலே சேர்க்கப்பட வேண்டுமென்று அன்றைய தமிழக தி.மு.க. அரசு வலியுறுத் தியதின் பேரில், அந்த ஷரத்து அதிலே சேர்க்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நெருக்கடி நிலை காலத்தில், அந்த ஷரத்துக்கள் பறிபோய் விட்டன.
ஒன்றைச் சொல்ல வேண்டுமேயானால் 30&9&1994ல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்று அன்றைய முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே பாடத்தைத்தான் இன்னமும் மத்தியிலே உள்ள அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இலங்கைக் கும் இந்தியாவிற்கும் பல பிரச்சினைகள் இருந்தாலும் இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத்தான் கச்சத் தீவு அளிக்கப்பட்டது என்று ஜெயலலிதா சொன்னதைப் போலவே, சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதாவும் அன்று தந்த விளக்கத்தை மறந்து, இன்று வீராவேசமாகப் பேசுகிறார்.
தி.மு. கழகம் தேர்தலிலே தோற்றிருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தி.மு. கழகத்தின் தாயகப்பற்றையும் என்னுடைய தமிழ்ப் பற்றையும் நன்கறிவார்கள். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் மீது பற்றுக் கொண் டவர்களுமல்ல தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுப் பற்றற்றவர்களும் அல்ல. வென்றவர்கள் சொல்வதெல்லாம் வேதமும் அல்ல.
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment