கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 29, 2011

குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி


ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடத்தைக் கற்றுக் கொண்டு முன்னேறுபவன் நல்ல அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், நல்ல மனிதனாகவும் உருவாகும் வாய்ப்பு உண்டு. இந்த இதழ், குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியை பாருங்கள்.

தமிழ்த்தேசியம், தலித் விடுதலை, ஈழ விடுதலை என எல்லாத் தளங்களிலும் வேலை செய்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.சட்டமன்றத் தேர்தல் தோல்வியை உதறிவிட்டு தொடர்ந்து தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் திருமாவளவன். அவருடன் பேசியதிலிருந்து....

தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் உங்கள் கட்சி தோற்றுப் போயிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

‘‘கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதும், கூட்டணிக்கான ஆதரவு குறைந்ததும் முக்கியக் காரணம். இந்தத் தேர்தல் தோல்வியில் சினிமா நடிகர்களின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், சரத்குமார் ரசிகர்கள், வெளியில் இருந்து ஆதரவளித்த விஜய், அஜீத், ரஜினிகாந்த் ரசிகர்கள் என அவர்கள் கண்மூடித்தனமாக அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்தார்கள்.’’

தி.மு.க.வின் தோல்விக்கு அவர்களது குடும்ப அரசியலும், வாரிசுகளின் ஆதிக்கமும் முக்கிய காரணம் என்று நினைக்கிறீர்களா?

‘‘தி.மு.க.வில் குடும்ப அரசியல் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி எல்லோரும் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டார்கள். ஆனாலும், இந்தத் தேர்தல் தோல்விக்கு குடும்ப ஆதிக்கமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. அதைவிட முக்கியமான காரணம் ஊடகங்கள்தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிற்கு முன்னதாகவே தி.மு.க.விற்கு எதிரான பிரசாரங்கள் தொடங்கிவிட்டன. ஒரே நேரத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மட்டும்தான் கடுமை காட்டினார்கள். வரலாற்றில் எந்த மாநிலத்திலும், எந்தத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி நடந்து கொண்டதில்லை.’’

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதற்கு காரணம் சொல்லியதே ?

‘‘புதுச்சேரியில் காலங்காலமாக எல்லாத் தேர்தல்களிலும், எல்லா வேட்பாளர்களும் ஓட்டுக்குப் பணம், மது கொடுப்பது வெளிப்படையாக நடக்கிறது. அங்கே இந்தக் கெடுபிடிகள் நடைபெறவில்லை. இந்தத் தேர்தலிலும் விளம்பரம் எழுதுவதிலோ, பிரசாரம் செய்வதிலோ அங்கே எந்தக் கடுமையும் காட்டப்படவில்லை.’’

தமிழகத்தில் மட்டும் இந்தக் கெடுபிடிகளுக்கு என்ன காரணம்?

‘‘தமிழகத்தில் தி.மு.க.தான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிற, பெரியாரிஸம் பேசுகிற, கொள்கை ரீதியாக ஈழத்தை ஆதரிக்கிற கட்சி. இந்தியாவிலேயே மாநில உரிமைகளைப் பேசுகிற, மாநில சுயாட்சி பற்றிப் பேசுகிற ஒரே கட்சி தி.மு.க.தான்.

இதெல்லாம் பிடிக்காதவர்கள் தி.மு.க.ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று நீண்ட காலமாகவே ஊடகத் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்கள். ஊடகங்கள் மூலமாக, தி.மு.க.வை மக்கள் விரோதக் கட்சி, ஊழல் கட்சி என அம்பலப்படுத்தினார்கள். தி.மு.க.வினர் ஊழலே செய்யாதவர்கள் என நான் சொல்லவில்லை. ஆனால், நாட்டில் இதற்கு முன்னரும் எத்தனையோ பெரிய ஊழல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், தி.மு.க.வை மட்டும் எதிர்ப்பதற்கு பெரிய தத்துவார்த்தப் பின்னணி இருக்கிறது.

இதையெல்லாம் மீறி இரண்டு லட்சம் வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 25 ஆயிரம் வாக்குகள் முதல் 30 ஆயிரம் வாக்குகள் ரசிகர்களின் வாக்குகள்தான். தி.மு.க. கூட்டணி தோற்றுப் போனதற்கு ரஜினிகாந்தும் ஒரு காரணம். ரஜினிகாந்த் அ.தி.மு.க.விற்கு வாக்களித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதும், அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் அதிகரித்துவிட்டது.’’

உங்கள் கூட்டணியும் பிரசாரத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும்தானே நம்பியிருந்தது? சினிமா நடிகர்களை நம்பி தேர்தல் முடிவு இருப்பது ஆபத்தான போக்குதான் இல்லையா?

‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் என சினிமா நடிகர்கள்தானே இங்கே வெற்றி பெறுகிறார்கள். இங்கே உழைப்புக்கோ, திறமைக்கோ, தியாகத்துக்கோ, அறிவுக்கோ, ஆற்றலுக்கோ மரியாதை இல்லை. ஒரு சினிமாக்காரன் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்கிற நிலைமை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது.’’

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என நினைக்கிறீர்களா?

‘‘2006 தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைத்தோம். அந்தத் தேர்தலில் எங்களை ஓரங்கட்டுவதற்கான அத்தனை வேலைகளையும் அ.தி.மு.க. செய்தது. அதிலிருந்து வெளியேறி நாங்கள் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தோம். இடையில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. ஈழப்பிரச்னை உச்சத்தில் இருந்த நேரம் அது. அப்போது ஒரு பத்திரிகையில், ‘விடுதலைச் சிறுத்தைகளை உங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா?’ என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு செல்வி. ஜெயலலிதா, ‘சேர்த்துக்கொள்ள வாய்ப்பே இல்லை’ என்று சொன்னார்.

எந்த அணியில் இருக்கிறோம் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட பெரிய கட்சிகள்தான் அதைத் தீர்மானிக்கின்றன. 2006 தேர்தலில் நாங்கள் தி.மு.க.வில் சேர நினைத்தபோது ‘விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கூட்டணியில் இடமில்லை’ என கலைஞர் சொன்னார். 2009-ல் நாங்கள் பா.ம.க., ம.தி.மு.க., தமிழ்த்தேசிய அமைப்புகளோடு தனி அணி அமைக்க முயற்சி செய்தோம். யாரும் ஒத்துழைக்காததால், தி.மு.க.வில் நாங்கள் தொடர வேண்டியதாயிற்று.

மறுபடியும் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.விற்குப் போக வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்கு எழவில்லை. அதிகாரபூர்வமான அழைப்பும் அ.தி.மு.க.விடமிருந்து வரவில்லை. கிடைத்துள்ள தோல்வியை மனமுவந்து ஏற்றுக்கொண்டுள்ளோம்.’’

பா.ம.க., சிறுத்தைகள் கூட்டணி மூலம் வடமாவட்டங்களில் பெரிய வெற்றி கிடைக்கும் என சொல்லி வந்தீர்கள். ஆனால் முடிவு எதிர்மறையாக இருந்ததே ?

‘‘தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ம.க. நிறுவனரோடு அமர்ந்து வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு செய்தோம். விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஓட்டு விழாத இடங்களில் நூற்றுக்கணக்கிலும், தலித் வாக்குச் சாவடிகளில் பா.ம.க.விற்கு அதிக அளவிலும் வாக்குகள் கிடைத்திருக்கிறது. இரு சமூகத்தையும் சாராதவர்கள் இதைத் தவறாகப் பார்த்திருக்கலாம். ஆனால், எங்களுக்கு இரு தரப்பு மக்களிடமும் நல்லிணக்கம் தெரிந்தது. இரு கொடிகளும் சேர்ந்து இருந்ததே ஒரு பெரிய மாற்றம்.’’

ஈழத்தையும் ஆதரித்துவிட்டு, காங்கிரஸோடு கூட்டணி என்பது உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?

ஈழ விஷயத்தில் காங்கிரஸுக்கு என்ன கொள்கையோ அதே கொள்கைதான் பி.ஜே.பி.க்கும், அ.தி.மு.க.விற்கும். நாங்கள் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸை எந்த இடங்களில் எல்லாம் விமர்சிக்க வேண்டுமோ, அங்கெல்லாம் விமர்சித்திருக்கிறோம்.’’

தேர்தல் தோல்வி, கனிமொழி கைது விவகாரங்களுக்குப் பிறகு தி.மு.க.வோடு காங்கிரஸுக்கு நல்லுறவு இல்லை. டெல்லி செல்லும் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பது கூட இல்லை. ஆனாலும் கூட்டணி தொடர்வதாக கருணாநிதி அறிவிக்கிறார். இது முரண்பாடாக இல்லையா?

‘‘நாங்கள் தனிப்பட்ட முறையில், காங்கிரஸ் அணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே கலைஞரிடம் சொல்லி வருகிறோம். ஆனால், தி.மு.க. ஒரு சூழ்நிலைக் கைதி போல் இருக்கிறது.’’

தேசியக் கட்சிகள் மாநிலங்களில் செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், அந்தக் கட்சிகளை மாநிலக் கட்சிகள் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் என்ன ?

‘‘மத்தியில் கூட்டணியில் இருந்தால்தான் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்கிற நோக்கில் அந்தக் கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டியது அவசியமாகிறது. மற்றபடி மாநிலங்களில் தேசியக் கட்சிகள் பெரும் தேய்வைத்தான் சந்தித்து வருகிறது. அதனால் அவர்கள் அதிகாரம் செலுத்துவார்கள் என பயப்படத் தேவையில்லை.’’

சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது? இதனால் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்ன பயன் இருக்கும் என நினைக்கிறீர்கள்?

‘‘இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே ஒரு பெரிய மாறுதல்தான். ஆனால், இதைப்போல் பல தீர்மானங்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு அது அவைக் குறிப்பில்தான் இடம் பெற்றுள்ளது. இந்திய அரசு அந்தத் தீர்மானங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.’’

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

‘புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்தது, செம்மொழிப் புத்தகங்களைத் தூக்கிப் போட்டது போன்றவை தி.மு.க.மீதான வெறுப்பை வெளிப்படுத்துவது போல்தான் செயல்பட்டு வருகிறார். சமச்சீர் கல்வி என்கிற சமூக மாற்றத்துக்கான அருமையான திட்டத்தை பெருந்தன்மையோடு நடைமுறைப் படுத்தாமல் முடக்குவது பெருந்தவறு.’’

தலைமைச் செயலகம் பற்றி பேசுவதால் இந்தக் கேள்வி. தலைமைச் செயலகம் கட்டுவதற்கு மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை நீங்கள்தானே கேள்வி கேட்டிருக்க வேண்டும்?

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், தலைமைச் செயலகம் கட்டியது, தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கியது எல்லாவற்றிற்கும் தாழ்த்தப்பட்டோர் நிதி செலவிடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவை எதற்கும் இதுவரை ஆதாரங்கள் இல்லை. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தாழ்த்தப்பட்டோர் து ணைத் திட்டத்தின் கீழ் 2800 கோடி ரூபாயை தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பட்ஜெட்டில் வெளிப்படையாக ஒதுக்கியது தி.மு.க. தான். மேம்போக்கான குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்க முடியாது’’ நிதானமாக முடிக்கிறார் திருமா

No comments:

Post a Comment