விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட 6 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா பெரியார் திடலில் 28.06.2011 அன்று நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு பெரியார் ஒளி விருதும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருதும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு காயிதே மில்லத் பிறை, எழுத்தாளர் சோலைக்கு காமராசர் கதிர், பாவலர் தணிக்கை செல்வனுக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் மற்றும் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வழங்கினார். மறைந்த மு.சுந்தரராசனுக்கான அயோத்தி தாசர் ஆதவன் விருது அவரது சகோதரர் சின்னப் பனிடம் வழங்கப் பட்டது.
தனக்கு கிடைத்த ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை தாய்மண் அறக்கட்டளைக்காக அன்பழகன் வழங்கினார். கூட்டத்தின் இறுதியில், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும், மின் தடைக்கு தீர்வு காண வேண்டும், சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் திருமாவளவன் பேசியதாவது:
2007ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கபட்டு வருகிறது. அம்பேத்கர் சுடர் விருதை 2007ம் ஆண்டே ராமதாசுக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக இப்போதுதான் வழங்க முடிந்தது. தற்போது இலவச திட்டங்களை சொல்லி, மீண்டும் நம்மை ஆடு, மாடு மேய்க்க அனுப்புவதற்கு திட்டமிடுகிறார்கள். இன்றைய எதிர்க்கட்சி தலைவரால் அம்பேத்கரை பற்றி 3 நிமிடம் பேச முடியுமா? திமுக ஆட்சியில் 1 மணி நேரம்தான் மின் வெட்டு இருந்தது. ஆனால் இப்போது 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. தமிழக அரசியலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அதை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழக அரசிடம் நாங்கள் கேட்பது, எங்களுக்கு இலவச பொருட்கள் வேண்டாம். கல்வியை மட்டும் இலவசமாக தாருங்கள். சமச்சீர் கல்வியை திரும்ப தாருங்கள்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
No comments:
Post a Comment