ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பே, அம்மையார் கொடுத்த முதல் அடி அன்னைத் தமிழுக்குத்தான்! எழிலார்ந்த புதிய சட்டமன்றக் கட்டிடத்தைப் புறக்கணித்து, பழைய கோட்டைக்கே மீண்டும் அவர் பயணப்பட்டார். மிகப்பழைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை இனிமேல் உதவாது என்று சொல்லி, ராணி மேரிக் கல்லூரியைத் தலைமைச் செயலகம் ஆக்க முயன்றதும், பின்பு கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய சட்டமன்றக் கட்டிடத்திற்கு கால்கோள் விழா நடத்தியதும் அவர்தான். ஆனால் இப்போது பழைய கோட்டைதான் பரவசமானது என்கிறார். போகட்டும், அதன் விளைவு என்ன என்பதுதான் நமக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு, பழைய கோட்டையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் செம்மொழி ஆய்வு நூலகம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே அரிய செவ்வியல் இலக்கியங்கள் பலவும், பழம் ஓலைச் சுவடிகள் பலவும் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தையும் அகற்றிவிட்டுத்தான் புதிய சட்டமன்ற வளாகம் இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பழம் நூல்கள், ஓலைச் சுவடிகள், தமிழ் அறிஞர்களின் படங்கள் என்னாகுமோ என உணர்வாளர்கள் கவலை கொள்கின்றனர். அம்மையார் ஆட்சியில் தமிழுக்குத்தான் முதல் அடி விழுந்திருக்கிறது.
சந்தேகம்
1 நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலித் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு இரயிலேறி விட்டார்கள் என்றார் ஜெயலலிதா. அடுத்தடுத்த நாட்களிலேயே ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் நகை பறிப்பு, ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டில் திருட்டு என்று வரிசையாய்ச் செய்திகள் வருகின்றன. ஒரு வேளை ஆந்திராவுக்குப் போன திருடர்கள், அங்கிருந்த கொள்ளைக்காரர்களையும் அழைத்துக்கொண்டு அடுத்த இரயிலில் இங்கு வந்துவிட்டார்களோ ?
2 கலைஞர் கட்டிய புதிய சட்டமன்றக் கட்டிடத்தைப் பயன்படுத்த மறுத்துவிட்டார் ஜெயலலிதா. கலைஞர் உருவாக்கிய புதிய புதிய பாலங்கள், பெரிய பெரிய சாலைகளையும் இனி அவர் பயன்படுத்த மாட்டாரோ?
விடுதலைக்குத் தடை
புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன், ஏராளமான பணிகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். ஆனால் அம்மையாரின் ஆட்சி அவசர அவசரமாக ஓர் ஆணையை எல்லா மாவட்ட நூலகங்களுக்கும் அனுப்பி வருகிறது. தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பெற்று, அறிஞர் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றிய, இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிற விடுதலை நாளேட்டினை இனிமேல் அரசு நூலகங்களில் வாங்கக் கூடாது என்பதுதான் அந்த ஆணை. திராவிட இயக்கக் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவிவிடக் கூடாது என்பதில்தான் இந்த அரசுக்கு எவ்வளவு அக்கறை !
கலைஞர் தலைமையிலான அரசு 2006ஆம் ஆண்டு பதவியேற்றதும், சமச்சீர்க் கல்வி குறித்துச் சிந்திக்கத் தொடங்கியது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கல்வி முறைகளைச் சமப்படுத்தி, எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக 2006 செப்டம்பரில், மேனாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 2007இல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2010ஆம் கல்வியாண்டு முதல், ஐந்தாம் வகுப்பு வரையில், சமச்சீர்க் கல்வித் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்தக் கல்வியாண்டிலிருந்து அத்திட்டம் 10ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்பட இருந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வருமானால், மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி, தனியார்ப் பள்ளி, மெட்ரிக்குலேசன் பள்ளி என எந்தப் பள்ளியில் படித்தாலும் ஒரே பாடத்திட்டம் அமையும். அதனால் பிள்ளைகளுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாத சமச்சீரான நிலை உருவாகும். இதற்காக பலகோடி ரூபாய் செலவிடப்பட்டு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்பட்டன. ஆனால் இப்போது, ஆட்சிக்கு வந்திருக்கும் புது அரசோ அத்திட்டத்தையே தள்ளி வைத்துவிட்டது. அல்லது, மறைமுகமாகக் கைவிட்டுவிட்டது. இப்போது மீண்டும் பல கோடிகள் செலவழிக்கப்பட்டு, புதிய பாட நூல்கள் அச்சேற்றப்பட்டுள்ளன. சமத்துவமும் போயிற்று, நம் வரிப்பணமும் போயிற்று. சமச்சீர்க் கல்விக்கு மறுப்பு
ஆதரவாளர்களுக்கே விலங்கு
நெடுமாறன் அவர்கள் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், கடந்த ஐந்தாண்டுகளாக கலைஞருக்கும், தமிழக அரசுக்கும் எதிராக எழுதியும் பேசியும் வந்தது. அவ்வியக்கத்தின் விருப்பப்படி, தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்ட காரணத்தால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களவனுக்குத் துணைநின்ற கருணாநிதி - சோனியா தோல்வியை அளித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி என்று சுவரொட்டி அச்சடித்து மதுரை தெருக்களில் ஒட்டினர். அப்படி ஒட்டியதற்காகத் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாணிக்கமும், அச்சக உரிமையாளரும் அன்றே கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் பெயரைச் சுவரொட்டியில் பயன்படுத்தியதற்காகவே கைது நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.(2002ஆம் ஆண்டு அந்த இயக்கத்தைத் தடை செய்ததும் ஜெயலலிதா அரசுதான் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது) குற்ற எண்.1579/2011, u/s 17/1,CLA Act, 1908 and 4 of TNOPPD Act ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்திற்கு அனுப்பவிருந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த தொலைபேசியின் பொருட்டு, சிறைக்கு அனுப்பாமல், கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வெளியில் செல்ல அனுமதித்துள்ளனர். பாவம் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள், கலைஞரின் ஆட்சியில் பெற்றிருந்த பேச்சுரிமை, எழுத்துரிமையை இழந்து நிற்கிறார்கள்.
No comments:
Post a Comment