கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 4, 2011

தி.மு.க. ஆட்சியிலேயே அரிசி இலவசமாக வழங்க ஆலோசித்தபோது அதிகாரிகள் தடுத்துவிட்டனர்: கலைஞர்


தி.மு.க. ஆட்சி காலத்திலேயே அரிசி இலவசமாக வழங்க ஆலோசித்தபோது அதிகாரிகள் தடுத்துவிட்டனர் என்று கலைஞர் கூறியுள்ளார்.


தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தி.மு.க. சார்பில் கடந்த காலங்களில் பல இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்திய போது, அதன் காரணமாக மக்களின் வாழ்க்கையையே பாழாக்குகிறார் என்றும், மக்களை தாங்களாக முன்னேறவிடாமல் சோம்பேறியாக்குகிறார் என்றும் சில எதிர்க்கட்சியினரும், ஏடுகள் நடத்தும் சிலரும் கண்டன கணைகளை பொழிந்தார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இலவசமாக 20 கிலோ அரிசி வழங்குகின்ற திட்டத்தை தொடங்கும்போது அதைப்போற்றுகிறார்கள், பாராட்டுகிறார்கள்.


தேர்தலுக்கு முன்பு அப்போது முதலமைச்சராக இருந்த என்னிடம் கடந்த மார்ச் திங்கள் இறுதியில் ஒரு டி.வி. சார்பில் பேட்டி கண்டபோது, தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது இலவச சலுகைகளை அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பது தான் என்று கூறப்படுவதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டபோது நான், இலவச சலுகைகள் என்பது வாக்குகளை பெறுவதற்காக அல்ல ஏழை, எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க வேண்டும் என்ற குறிக்கோள் தி.மு.க. அரசுக்கு இன்று நேற்றல்ல இந்த இயக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழவைப்பதற்காகத்தான் ஏழைகளின் முகங்களிலே சிரிப்பை காண்பதற்காகத்தான்'' என்று கூறினேன்.


ஜெயலலிதா பொறுப்புக்கு வந்தவுடன் எதற்கெடுத்தாலும் தி.மு.க. அரசு ஒரு லட்சம் கோடி கடனை வைத்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் நிதித்துறை பொறுப்பிலே உள்ளவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்திருப்பார்கள் என்று கருதுகிறேன்.

ஏழை எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அனைத்து அரசுகளுக்கும் உண்டு. வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளில் கூட இலவச கல்வி, முதியோர் பென்சன், வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை, உணவு கூப்பன், தேசிய சுகாதார பாதுகாப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் ஏழைகளுக்கு நேரடியாகவே பணமாகவும் உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிலும் தி.மு.க. அரசு உணவு பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வேட்டி சேலை, உணவு உற்பத்தியை பெருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியம், ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி தொகை, ஏழைகளுக்கு உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டம், குடிசையில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள், தொழிற்கல்வி வரை இலவசம் போன்ற எண்ணற்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது.

தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தி வந்த ஒரு சில திட்டங்களை தான் தற்போது அ.தி.மு.க. அரசு சற்று விரிவாக்கம் செய்து நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது. குறிப்பாக தி.மு.க. அரசு 2006 ம் ஆண்டு ஏற்பட்ட போது தான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்டு, சில மாதங்களுக்கு பின் அந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி வந்தது. அந்த திட்டத்தையே தான் தற்போது ஜெயலலிதா அரசு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் 20 கிலோ அரிசி 20 ரூபாய்க்கு வழங்கப்பட்டதற்கு மாறாக தற்போது அதே 20 கிலோ அரிசியை 20 ரூபாய் வாங்காமலே இலவசமாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.


தி.மு.க. அரசு இருந்தபோது இதே முறையில் 20 கிலோ அரிசியினை இலவசமாக மக்களுக்கு வழங்கலாமா என்று அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த போது, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வழங்கும்போதே, எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டித்து பேசுகின்ற நேரத்தில் இலவசமாகவே அரிசியை வழங்குவது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தார்கள் என்பதை மனசாட்சியுள்ள அந்த அதிகாரிகள் மறந்திருக்க மாட்டார்கள்.


ஏழை பெண்களுக்கான திருமண உதவி திட்டமும் தி.மு.க. அரசின் திட்டம் தான். அந்த திட்டத்தொகையை தான் அ.தி.மு.க. அரசு அதிகமாக்கி தற்போது அறிவித்திருக்கிறார்கள்.


இது தவிர, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களான இலவச சமையல் எரிவாயு திட்டம், வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களும் தி.மு.க. அரசால் செயல்படுத்தப்பட்டு வந்தன. இவையெல்லாம் இலவச திட்டங்கள் என்றும், இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடைழூறு விளைவிப்பவை என்றும் கண்டித்து பேசியவர்கள் எல்லாம் தற்போது இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முன் வந்திருப்பதை பார்க்கும்போது, எப்படியோ தி.மு.க. அரசு செய்ய தொடங்கிய சாதனைகள் நல்லவேளை நிறுத்தப்பட்டு விடாமல் தொடருகிறதே என்று அந்த இலவச உதவிகளை பெறுவோர் எண்ணிப்பார்ப்பார்கள் என்று நம்பலாம்.


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடக்கத்திலேயே பயன்தந்துவிடும் என கருத முடியாது. பல்வேறு சமூகநல திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுவதால் தான் ஏழைகளுக்கும், மற்றவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தில் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டு ஏழைகளும், பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணமாக தி.மு.க. அரசு இலவச கல்வியை முதல் தலைமுறை மாணவர்களுக்கு தொழிற்கல்வி வரை நீட்டித்ததால் 2005 2006 ம் ஆண்டில் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக்குகளிலும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2.85 லட்சத்திலிருந்து 2010 11 ம் ஆண்டில் 6.9 லட்சமாக உயர்ந்தது. தி.மு.க. அரசு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களுக்கு ரூ.4000 கோடி செலவிட்டதால் தான் ஏழை குடும்பங்கள் விலைவாசி உயர்வின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு உணவு பாதுகாப்பை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், பட்டினிச் சாவு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியிலே இல்லை என்ற நிலை உருவாகியிருந்தது.

சுமார் 2.62 லட்சம் ஏழைகள் உயர்சிகிச்சையை இலவசமாக பெற்றுள்ள காப்பீட்டு திட்டம், பல உயிர்களை காத்துவரும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க. அரசு முன்பிருந்த அதே வேகத்தோடு நடத்தப்போகிறார்களா? அல்லது அதையும் தலைமை செயலகத்தை போல தமிழ் செம்மொழி மையத்தை போல சமச்சீர் கல்வி திட்டத்தை போல நிறுத்தப்போகிறார்களா என்பதெல்லாம் இனிமேல் தான் தெரியும்.


இத்தகைய சமூக பாதுகாப்பு திட்டங்களை புறக்கணித்துவிட்டு வளர்ச்சி திட்டங்களை மட்டும் ஒரு அரசு செயல்படுத்தினால் ஏழை, எளிய மக்களின் நலனை புறக்கணிக்கும் அரசாகவே அந்த அரசு இருக்கும்.

இந்த திட்டங்களை செயல்படுத்துவதால் தான் அரசுக்கு கடன் சுமை ஏறியுள்ளது என்ற வாதமும் சரியல்ல. ஒரு அரசு அதன் வளர்ச்சி திட்டங்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கும் கடன் வாங்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் கூட கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்துகின்றன. இந்தியாவில் பிற மாநிலங்களும் கடன் பெற்றுத்தான் வளர்ச்சி திட்டங்களையும், சமூகநல பாதுகாப்பு திட்டங்களையும் செயல்படுத்துகின்றன. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டிற்கு உள்ள கடன் பொறுப்பு மிகக்குறைவானது என்பது பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த அளவுப்படி ஒரு மாநிலத்தின் கடன் பொறுப்பு அந்த மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டின் கடன் பொறுப்பு 19.58 சதவீதம் அளவிற்கே உள்ளது.


மேலும், அரசு பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை 2006 07 முதல் செயல்படுத்தி வந்தாலும் 2008 09 வரை மாநிலத்தின் வருவாய் வரவு வருவாய் செலவை விட அதிகமாகவே இருந்தது. 2009 10 ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட காரணம் வரி வருவாய் குறைந்ததும், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட திருத்திய சம்பள விகிதமும் தான். அதுவும் வரும் ஆண்டுகளில் மீண்டும் வருவாய் உபரியை எட்டும் நிலையில் தமிழக அரசின் நிதிநிலை வலுவாகவே அமையும். எனவே, இலவச திட்டங்களால் தான் தமிழக அரசின் கடன் சுமை ஏறிவிட்டது என்று ஒரு பொய் பிரசாரம் ஏழை மக்களுக்கு இத்தகைய நலத்திட்ட உதவிகளை அரசு வழங்குவதற்கு ஒரு இடையூறு ஏற்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment