அதிமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், சமச்சீர் கல்வி சட்டத்திருத்த மசோதாவிற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து லயோலா கல்லூரி மாணவர் கருத்து கணிப்பு (மக்கள் ஆய்வகம்) குழுவின் ஒருங்கிணைப்பாளர் ச.ராஜநாயகம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுக புதியதாக ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசின் செயல்பாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் 3132 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் நிறைய தகவல்கள் தெரியவந்துள்ளன.
பெரும்பாலான குடும்பங்களுக்கு கடந்த ஆட்சியிலேயே இலவச டி.வி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள குடும்பங்களை ஏமாற்றாமல், அவர்களுக்கும் வழங்குவதுதான் நியாயமானது என 47% மக்கள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு பதிவாகியுள்ளது. அதாவது 73.8% பேர் எதிர்க்கின்றனர். சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்து சட்டத்திருத்தம் நிறைவேற்றியுள்ளதற்கு 62.3% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை 74.7% மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த கல்வி ஆண்டே சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டுமெனவும் தெரிவிக்கின்றனர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென 32.9% பேர் வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment