தி.மு.க.வை சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த வாரம் டெல்லி சென்று திகார் சிறையில் கனிமொழியை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கு முன்பும் ஒருமுறை சந்தித்து இருக்கிறார்.
இதுபோல் தி.மு.க. பொருளாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினும் ஏற்கனவே டெல்லி சென்று கனிமொழியை சந்தித்து இருக்கிறார். மீண்டும் அவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் முடிவு செய்து 27.06.2011 அன்று காலை 8.40 மணிக்கு மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
அவரை தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாலையில் திகார் ஜெயிலுக்குச் சென்று கனிமொழியை சந்தித்து பேசினார். மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மற்றும் எம்.பி.க்கள் ஏ.கே.எஸ்.விஜயன், ஜெயதுரை ஆகியோரும் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
ஏறத்தாழ 30 நிமிட நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. அதே ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, சரத்குமார் ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
No comments:
Post a Comment