கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, June 9, 2011

லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு மசோதாவை 1973 1398041963 திமுக அரசு கொண்டு வந்தது திரும்ப பெற்றது அதிமுக அரசு


பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு மசோதாவை 1973ல் திமுக அரசு கொண்டு வந்தது. அதை அதிமுக அரசு திரும்ப பெற்றது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி 08.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராம்தேவ் பிரச்னையை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் உயர்நிலை குழு கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2-6-2011 அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அண்ணா ஹஸாரேவின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் கூட்டம் அதன் தலைவரும், நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்றபோது, லோக்பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க்களை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது லோக்பால் வரம்புக்குள் இவர்களை கொண்டுவர அந்த குழுவிலே பொதுமக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றிருந்த பிரதிநிதிகள் எதிர்த்திருக்கிறார்கள்.

ராம்தேவ் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்த ஹசாரே, லோக்பால் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது, பிரதமரையும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு சம்மதித்ததாகவும், ஆனால் தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அரசு பின்வாங்கிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

லோக்பால் சட்டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை உட்படுத்தக்கூடாது என்ற அரசின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராம்தேவ், பிறகு தான் அவ்வாறு சொல்லவில்லை என்று முரண்பட்டிருக்கிறார்.

4-6-2011 அன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறும்போது, கறுப்பு பணத்தை தேசிய சொத்து என அறிவிக்க, மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது; சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்பு பணத்தை முழுமையாக கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது;

ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்றார். இதைப்பற்றி ராம்தேவ் தனது அதிருப்தியை தெரிவித்து, மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டுமென்றார். இல்லாவிட்டால் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்றார். பாபா ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாகவும் சாத்வி ரிதம்பரா அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வர அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஊழல்வாதிகள் குறித்து விசாரிக்க விரைவு நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும் தன்னை சமாதானப்படுத்த வந்த மத்திய அமைச்சர்களிடம் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் நடந்திராத வகையில், பாபா ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நான்கு அமைச்சர்கள் குழுவினர் டெல்லி விமான நிலையத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதன் பின்னரும் தனது உண்ணா விரதத்தை கைவிடப் போவதில்லை என்று ராம்தேவ் அறிவித்தார்.
இவ்வாறு ஹஸாரே, குரு பாபா ராம் தேவ் போன்றவர்கள் இப்போது கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராக போர் தொடுக்கின்ற நேரத்தில் எனது நினைவு 1970களுக்குச் செல்கிறது. அப்போது லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பொது வாழ்வில் இருப்போர் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தபோது, தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த நான் அந்தக் கருத்தை வரவேற்று அறிக்கை கொடுத்தேன். அது மாத்திரமல்ல திராவிட முன்னேற்றக் கழக அரசில் 1973ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதியன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்குப் பெயரே, பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா என்பதாகும்.
இதன்படி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் ஈடுபட்ட அவருக்கு ஏழு ஆண்டுக் காலம் வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வகை செய்யும். பொதுவாழ்வில் ஈடுபட்டவர் மீது சாட்டப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பொய்யானவை என்று விசாரணைக்குப் பிறகு முடிவானால் அவ்வாறு பொய்யான குற்றம் சுமத்தியவருக்கு மூன்றாண்டு காலம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.
இந்த சட்டத்தின் முக்கிய கூறு என்ன வென்றால், பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று கூறும்போது முதல் அமைச்சர், முன்னாள் முதல் அமைச்சர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் அடங்குவர். இந்த மசோதாவை அறிமுகம் செய்த பிறகு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக பொறுக்குக் குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவை எம்.ஜி.ஆர். அப்போது கறுப்பு மசோதா என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு கருத்து தெரிவித்த போதும், அப்போது தமிழகத்திற்கு வந்த அன்றைய ஜனசங்க தலைவர், எல்.கே. அத்வானி அந்த ஊழல் ஒழிப்பு மசோதா கொள்கையை வரவேற்கிறேன். ஊழல் பிரச்சினை மாநில மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு இதனை மேற்கொள்ளக்கூடாது. இந்த மசோதா வரம்பிற்குள் முதல் அமைச்சரும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சர்க்காரின் லோக்பால், லோக் அயுக்த் மசோதா வரம்புக்குள் பிரதமர் சேர்க்கப்பட வில்லை என்று கூறினார்.
ஒரு ஆங்கில நாளிதழில் அந்த சட்டம் பற்றி எழுதும்போது, எல்லாவற்றுக்கும் வழி காட்டும் தமிழ்நாடு, இந்த வகையிலும் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டி உள்ளது. நடைமுறைக்கேற்ற நல்ல சட்டங்களைக் கொணர்வதில் தமிழகம் எப்பொழுதுமே முன்னோடியாக இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
சுயராஜ்யா வார இதழில் அதன் ஆசிரியர் க. சந்தானம் இந்தச் சட்டம் குறித்து அப்போது எழுதிய கட்டுரையில், தமிழகச் சட்டமன்றத்தின் கடந்த கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஊழல் விசாரணை சட்டம் தீவிரமானதும் நெடுநோக்குடையதுமாகும். ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவெனில், எம்.ஜி. ராமச்சந்திரனும் வேறு சிலரும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்ட தானது ஏதோ ஊழலை மறைப்பதற்கென்றே செய்யப்பட்ட மாக்கியவல்லி நடவடிக்கை என்பதாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டதாகும்.
1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று அந்த மசோதா தமிழகத்தின் இரண்டு சபைகளிலும் நிறைவேறியது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த மாதவன் அந்தச் சட்டத்தை முன் மொழிந்து பேசினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் பேசிய பிறகு, அந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு நான் உரையாற்றினேன்.
அந்த சட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்த்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் கழக அரசை பாராட்டியதோடு தனது முழுப் புரட்சி இயக்கமான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்த சட்டம் உதவி புரியும் என்று கூறினார்.
கழக அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்திரி ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டார். பிறகு வந்த அ.தி.மு.க.வினர் அந்த சட்டத்தையே திரும்பப் பெற்று விட்டார்கள்.
லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணா விரதம் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1973ம் ஆண்டு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தைப் பற்றி உனக்கும் உலகத்திற்கும் நினைவூட்ட விரும்பினேன். அதன் விளைவாகத் தான் இந்தக் கடிதம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment