மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் 01.06.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2004 &07ஆண்டுகளில் நான் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமம் வழங்குவதில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சலுகை காட்டியதாக சில செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் சமீபகாலமாக வரும் சில செய்திகள் எனக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருவதாக இருக்கின்றன. இவை உண்மைக்குப் புறம்பானவை மட்டுமில்லை; விஷமத்தனமான அவதூறுகளும் கூட.
இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதால், இவற்றை வெளியிட்டு என்னை களங்கப்படுத்த முயன்ற செய்தித்தாள்களுக்கும், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இந்த அவதூறுகளுக்கு சட்டப்படியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன், வழக்கும் தொடர இருக்கிறேன்.
இந்த அவதூறு பிரசாரத்தில் தற்போது சில அரசியல் கட்சிகளும் தலையிட்டு ஆதாயம் தேட முயல்கின்றன. இந்நிலையில் நடந்தது என்ன என்பதை உரியமுறையில் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக நான் இருந்த காலத்தில் நேர்மையாகவும், யாருக்கும் பாரபட்சம் காட்டாமலும்தான் எல்லா முடிவுகளையும் எடுத்தேன். மற்ற நிறுவனங்களை புறக்கணித்துவிட்டு, எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் எந்த விதத்திலும் நான் சலுகை காட்டியதில்லை. உரிமம் தரும் விஷயத்தில் அரசுக்கு என்னால் ஒரு பைசா கூட வருமான இழப்பு ஏற்பட்டதில்லை. துறை விதித்திருந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்கிற அளவுக்கு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே, உரிய காலத்தில் முறைப்படி உரிமம் வழங்கப்பட்டது. என்னுடைய பதவிக்காலத்தில் உரிமம் வழங்கும் விஷயத்தில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டதாக, தலைமை தணிக்கை அலுவலரின் தணிக்கை அறிக்கையில்கூட குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்துகிறேன்.
நிறுவனத்தின் நிகர மதிப்பு, நிதியை கையாளும் முறை, வியாபார திட்டம், கடன் & ஈவு விகிதம் போன்ற பல விஷயங்களை பொறுத்தவரை, தொலைத் தொடர்புத்துறை விதித்திருந்த நிபந்தனைகளை திருப்தியான விதத்தில் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கும் நடைமுறை அப்போது பின்பற்றப்பட்டது. அதோடு அந்த நிறுவனம் ஏற்கனவே சேவை வழங்கும் பகுதியில் லைசென்ஸ் விதிமுறைகள் எதையாவது மீறியுள்ளதா? என்பதையும், துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த தவறியதா? என்பதையும் பரிசீலித்துதான் முடிவுகள் எடுக்கப்பட்டது.
டிஷ்னெட் வயர்லெஸ் லிமிடெட் (ஏர்செல்) நிறுவனத்துக்கு உரிமம் வழங்கிய விவகாரத்தை பொறுத்தவரை, 2004ம் ஆண்டு மே 27ம் தேதி மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக நான் பதவி ஏற்பதற்கு முன்பிருந்தே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து வந்தது. அந்த நிறுவனத்திடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது பற்றியும், நிறுவனத்தின் நிகர மதிப்பு பற்றியும், கடன் & ஈவு விகிதம் பற்றியும் தொலைத்தொடர்பு துறை அதற்கு முன்பே பல கேள்விகளை எழுப்பியிருந்தது.
இப்படி சட்டப்பூர்வ விஷயங்கள் உட்பட, அந்த நிறுவனத்தை பற்றிய எல்லா விவரங்களையும் தொலைத்தொடர்பு துறை முழுமையாக ஆராய்ந்து, உரிமம் பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் நிறுவனம் முழுமையாக பெற்ற பிறகே, அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்குமாறு கோப்பினை துறை சமர்ப்பித்தது. அதன் பிறகே அவர்களுக்கு உரிமம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நான் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த ஒரு தொலைத்தொடர்பு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எனது சகோதரரின் எந்த ஒரு நிறுவனத்திலும் எந்த விதமான முதலீடும் செய்ததில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சன் டைரக்ட் நிறுவனத்தில் ஆஸ்ட்ரோ நிறுவனம் 2007ம் ஆண்டு டிசம்பரில் முதலீடு செய்தபோது நான் அமைச்சர் பதவியிலேயே இல்லை. அதற்கு முன்பாக 2007ம் ஆண்டு மே 13ம் தேதியே நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தேன். மேலும் இந்த நிறுவனங்கள் எதிலும் எனக்கு பங்குகளும், எந்தவித பொறுப்புகளும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment