ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக, சிம்கார்டு விற்பனையாளர் கொடுத்த புகாரின்பேரில், திமுக இளைஞரணிச் செயலாளர் ஜெயராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 07.09.2011 அன்று கைது செய்தனர்.
மதுரை எல்லீஸ்நகரைச் சேர்ந்தவர் சக்திதாசன்(32). இவர் போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘மதுரை பழங்காநத்தம் பகுதியில் நான் செல்போன் சிம்கார்டு விற்பனைக் கடை வைத்துள்ளேன். ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நகர திமுக இளைஞரணி செயலாளர் ஜெயராமன் என்னை அணுகினார். ஒரு குறிப்பிட்ட கம்பெனி பெயரைச் சொல்லி, அந்நிறுவனத்திற்கு 500 சிம் கார்டுகள் தேவை இருக்கிறது. ஆவின் பணியாளர்களுக்கு இந்த சிம் கார்டுகள் வழங்க வேண்டும்.
இதற்காக தனக்கு ரூ.3.5 லட்சம் கமிஷன் கொடுத்தால், இந்த 500 சிம் கார்டுகளுக்கான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். இதற்கு சம்மதித்த என்னிடம், மூன்று தவணைகளில் கமிஷன் தொகையான ரூ.3.5 லட்சம் பெற்றுக் கொண்டார். ஆனால், சொன்னபடி 500 சிம் கார்டுகளை வாங்கவில்லை. கமிஷனாக கொடுத்த பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார்’ எனத் தெரிவித்திருந்தார்.
போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் உத்தரவில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் 07.09.2011 அன்று ஜெயராமனை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதற்கிடையில் ஏற்கனவே மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பவுன். ஆகியோர் ஜெயராமன் மீதும், துணைமேயர் மன்னன் மீதும் கரிமேடு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதில் தங்கள் வீட்டுக்குள் சோடாபாட்டில் வீசியதாகவும், செல்போனில் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இப்புகார்களின் பேரிலும் ஜெயராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலும் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment