கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 2, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகனை தனது அதிகாரத்தை உணர்ந்து ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும் : கலைஞர் அறிக்கை


காலம் கடத்தாமல் தனது அதிகாரத்தை ஜெயலலிதா உணர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் உயிர்களை காப்பாற்ற ஜெயலலிதா முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 31.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டு மென்று கோரிக்கை வைத்து தமிழர்கள் எல்லாம் வாதாடி, சட்டமன்றத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்ட நேரத்தில் பிடிவாதமாக அதை மறுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இறுதியாக தமிழர்களின் எழுச்சியைக் கண்ட பிறகு பேரவையிலே அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினாலும், தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறி பிரச்சினையை தட்டிக் கழிக்கத் தான் எண்ணுகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் வழக்கறிஞர் காலின் கூறியது மட்டுமல்ல, ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இருவர் கொடுத்துள்ள வாக்குமூலங்களும் அதைத் தெளிவாக்குகிறது.
குறிப்பாக தியாகு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் காப்பாற்றப்பட்ட இடதுசாரி இயக்கத் தோழர்களில் ஒருவர். அவர் கூறியதை இங்கே அப்படியே சொல்கிறேன்; இடதுசாரி இயக்கப் பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலம் அது. வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பது என்பது நாங்கள் சார்ந்த கட்சி ஏற்றுக் கொண்ட கொள்கை.
ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த முத்துதங்கப்பா என்பவர் 1970ல் படுகொலை செய்யப்படுகிறார். இதில் நான் உட்பட தோழர்கள் ரங்கசாமி லெனின், குருமூர்த்தி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகிறோம். எங்கள் மீதான வழக்கு செசன்ஸ் கோர்ட்டில் நடந்து 1972ல் எங்கள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்கிறோம். ஆனால் உயர்நீதிமன்றமும் எங்களின் தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறது.
அப்போது தமிழக முதல்வராக கலைஞர் இருந்தார். உயர்நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு ஆளுநரிடம் நாங்கள் விண்ணப்பித்தோம். ஆளுநரும் தமிழக அரசிடம் இது குறித்து கருத்துரு கேட்டார். அப்போது கலைஞர் தனது அமைச்சரவையைக் கூட்டி எனது கருணை மனு மீது விவாதித்து ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்று முடிவு செய்து அதை ஆளுநருக்குப் பரிந்துரைத்தார். அதன்படி ஆளுநர் எங்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்.
இதன் மூலம் தூக்குக்கயிற்றை முத்தமிட இருந்த நாங்கள் காப்பாற்றப்பட்டோம். தேசத்தின் குடியரசு தலைவருக்கும் மாநிலத்தின் ஆளுநருக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனுக்கள் அனுப்பலாம். குடியரசு தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் தண்டனையை குறைக்க குடியரசு தலைவரிடமோ, ஆளுநரிடமோ மாநில அரசு பரிந்துரைக்க முடியும். நமது அரசியல் சட்டத்தில் அதிகாரம் உண்டு.
அதிகாரம் இல்லை என்கிற சர்ச்சைகள் எப்போதும் நடப்பது தான். அது தான் இப்போது நடக்கிறது. அதிகாரம் இருக்கிறது என்கிறோம் நாம். ஆனால் ஜெயலலிதாவோ தனக்கு அதிகாரம் இல்லை என்கிறார். அதிகாரமிருந்தால் காப்பாற்றுவேன் என இதில் அர்த்தம் தொனிப்பதால், அதிகாரம் இருக்கிற குடியரசு தலைவருக்கு மூவரையும் காப்பாற்றும்படி ஒரு வேண்டுகோளை ஜெயலலிதா விடலாமே? சட்ட அதிகாரமில்லை என்பவர் இதையாவது செய்யலாமே என்று தியாகு கூறி, அதனை நக்கீரன் வெளியிட்டுள்ளது.
தியாகுவைப் போலவே பெண்ணாடம் புலவர் கலிய பெருமாளின் தூக்குத் தண்டனையும் ரத்து செய்யப்பட்டது. அவர் தற்போது உயிரோடு இல்லை. 2007ல் மறைந்து விட்டார். அவரது இளைய மகன் சோழநம்பியார் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு நக்சல்பாரி இயக்கமான மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலச் செயலாளராக இருந்தவர் என் அப்பா கலியபெருமாள்.
தீவிர தமிழ்ப் பற்றாளர். போலீஸ் இன்ஃபார்மர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பா கலியபெருமாள், எனது சகோதரர் வள்ளுவன், நான் மற்றும் என் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்படுகிறோம். வழக்கு விசாரணை கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 1971ல் அப்பா கலியபெருமாளுக்கும் அண்ணன் வள்ளுவனுக்கும் நீதிபதி சிங்காரவேலு தூக்குத் தண்டனை விதித்தார். மற்ற எங்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை.
அண்ணன் வள்ளுவன் மட்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உயர்நீதி மன்றமே அவரது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அப்போது கல்யாணசுந்தரம் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்ததால், அவர் குடியரசு தலைவராக இருந்த வி.வி. கிரியைச் சந்தித்து கலியபெருமாள் பற்றி கூறிய போது, நீங்கள் மக்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பி வையுங்கள் என்று ஒரு கருத்தை வெளிப் படுத்தினார் கிரி.
அதன்படி பெண்ணாடத்தில் மாநாடு நடத்தி ஒரு லட்சம் கையெழுத்து பெற்று 1974ல் தமிழக ஆளுநருக்கு அனுப்பினோம். அவர் அதனை அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்கு அனுப்பினார். கலைஞர் தனது அமைச்சரவையில் இதனை விவாதித்து, மாநில அரசுக்கு உரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி புலவர் கலியபெருமாளின் தண்டனையைக் குறைக்கலாம் என்று சொல்லி அதன்படி முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரைத்தார் கலைஞர்.
மாநில அரசின் பரிந்துரையை ஏற்று எனது அப்பாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்தார் ஆளுநர். எனவே மாநில முதல்வர் மனது வைத்தால் தூக்குத் தண்டனையிலிருந்து யாரையும் காப்பாற்ற முடியும், மாநில முதல்வருக்கு அப்படிப்பட்ட மனது இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது என்று விவரித்திருக்கிறார்.
இந்த இருவரின் கூற்றினை மனதிலே கொண்டுதான் நான் எனது முந்தைய கடிதத்தில் மரணத்தின் பிடியிலிருந்து சிலர் விடுவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களில் நான் ஒருவன் என்ற அடிப் படையில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161ன் கீழ் இந்த மூவரையும் காப்பாற்றிடத் தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன்னதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு ஜெயலலிதா காலங் கடத்தாமல், இதில் தனக்கிருக்கும் அதிகாரத்தை இப்போதாவது உணர்ந்து கொண்டு தூக்கு மேடைக்கும் தொடரும் வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் உயிர்களையும் காப்பாற்ற முன் வரவேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment