இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தி, அந்த சமுதாத்தின் உற்ற தோழனாக திமுக விளங்கி வருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
அண்ணல் நபிகள் பெருமான் அறிவுரைகளை ஏற்று மனம், மொழி, மெய் மூன்றும் வலிமை பெற ஒருமாத காலம் கடுமையான நோன்புக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நான் கொண்டுள்ள பற்றின் காரணமாக 1969ல் முதல்வராக பொறுப்பேற்றபோது, மிலாது நபித் திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது. 1973ல் உருது பேசும் தெக்கனி முஸ்லீம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட் டது.
1989ல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் பயன்பெற நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 1998ல் 2200 எனவும், 2008ல் 2400 எனவும் உயர்த்தப்பட்டது. 1999ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய மக்கள் கடன் உதவிகள் பெற வழிவகுக்கப்பட்டது. 2000ல் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ‘‘உருது அகடமி’’ தொடங்கப்பட்டது. உலமா ஓய்வூதியத் திட்டத்தை தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. 2001ல் காயிதே மில்லத் மணி மண்டபம் சென்னையில் அமைத்திட ஆணையிட்டு, அடிக்கல் நாட்டி உருப்பெற வழிவகுக்கப்பட்டது. 2007ல் அரசு பணிகளில் அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமிய சமுதாயம் பயன்பெறுவதை உறுதி செய்திட 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது, சீறாப்புராணம் பாடிய உமறுப் புலவருக்கு 2008ல் எட்டைபுரத்தில் மணிமண்டபம் அமைத்ததுடன், 2009ல் உலமா மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைத்து உதவிகள் வழங்கப்பட்டன.
இஸ்லாமிய அமைப்புகள் அளித்த கோரிக்கையை ஏற்று, இஸ்லாமியர்களின் திருமணங்களைப் பதிவு செய்யும் படிவத்தில் தக்க திருத்தங்களைச் செய்தது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி இஸ்லாமிய சமுதாயத்தின் உற்ற தோழனாகத் திகழ்ந்து வருகிறது திமுக என்பதை நினைபடுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment