திமுக தலைவர் கருணாநிதியிடம் 02.09.2011 அன்று நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களே?
நீதிபதிகள் அதை மட்டும் கூறவில்லை. ஜெயலலிதாவிற்காக மூத்த வழக்கறிஞர் அரிஷ் சால்வே ஆஜராகி இருக்கிறார். அவரைப் பார்த்து நீதிபதிகள், ஜெயலலிதா இந்த வழக்கில் எத்தனை முறை வாய்தா வாங்குவார்? நீங்கள் அந்த அம்மையாருக்கு சொல்லக் கூடாதா? என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். வழக்கறிஞரிடமே கேட்டிருக்கிறார்கள். ஜெயலலிதா இப்படியெல்லாம் செய்வது நல்லதல்ல, நேரடியாக சென்று விசாரணையை சந்திக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
சட்டப் பேரவையில் திமுகவினர் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். மாநகராட்சிக்கான திறந்தவெளி ஒதுக்கீட்டிற்கான காலி இடம் அண்ணா அறிவாலயத்தில் உள்ளதை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
அண்ணா அறிவாலயத்தில் உள்ள அந்த இடம் பற்றி ஏற்கனவே பிரச்னை எழுப்பி அதற்கான ஆணைகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலே அண்ணா சிலை இருப்பதை அறிவீர்கள். அந்த சிலை அங்கே இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அண்ணா திமுக அல்லவா? ஆகவே அண்ணா சிலை இருக்க கூடாது என்பதற்கான முயற்சியிலே ஈடுபட எண்ணுகிறார்கள்.
தொடர்ந்து திமுகவை சேர்ந்த முக்கியமானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பேரவையிலும் பேசுவதற்கான வாய்ப்பு தரப்படுவதில்லை. இன்று கூட முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீண்டும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறாரே, இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்.
ஆமாம். உயர் நீதிமன்றத்தினால் ஜாமீனில் வெளியே அனுப்பப்பட்டவரை திடீரென்று வேறு ஒரு வழக்கில் கைது செய்கிறார்கள். அது எந்த வழக்கில் என்றால் ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சாதகமாக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் அவரை மீண்டும் கைது செய்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டத்திற்கு எதிரான அக்கிரமங்கள், அராஜகங்கள் இந்த ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இதனை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக. போலீசாரும் சேர்ந்து கொண்டு செய்கிற காரியங்கள் இவை. எதிர்காலத்தில் போலீசாரும் பதில் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment