நில அபகரிப்பு வழக்கில் மதுரை மேற்கு மண்டல முன்னாள் தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அவரது மகன் கைது செய்யப்பட்டார்.
மதுரை நரிமேடு தாமஸ் தெருவைச் சேர்ந்தவர் சேத்டேனிராஜ் தேசிங்கர் (30). இவர் மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார்:
எனது தந்தை தேசிங்கர் கடந்த 1996ம் ஆண்டு மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள அருள்நகரில் 4 சென்ட் பிளாட் வாங்கினார். அதன் மதிப்பு ரூ.20 லட்சம். அந்த இடத்தில் வேலி அமைக்கப்பட்டிருந்து. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் சென்று பார்த்த போது வேலி பிரிக்கப்பட்டிருந்தது. மீண்டும் ரூ.10 ஆயிரம் செலவு செய்து வேலி அமைத்தோம். அப்போது அந்த இடத்தை ராமச்சந்திரன் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கி விட்டதாக முரட்டம்பத்திரியை சேர்ந்த சின்னான், அவர் மனைவி பாக்கியம், மகன் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் கூறியதோடு, நாங்கள் அந்த இடத்திற்குள் நுழைய கூடாது என மிரட்டி இடத்தை அபகரித்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை மீட்டு தர வேண்டும்� என கூறியிருந்தார்.
இதுகுறித்து மாநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மதுரை மேற்கு மண்டல முன்னாள் தலைவரான திமுகவைச் சேர்ந்த சின்னான், மனைவி பாக்கியம், மகன் செந்தமிழ்ச் செல்வன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதில் செந்தமிழ்ச் செல்வனை போலீசார் 06.09.2011 அன்று அதிகாலை கைது செய்து ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி (பொறுப்பு) வீட்டில் ஆஜர்படுத்தி, மதுரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள சின்னான், அவர் மனைவி பாக்கியம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment