அரசு கேபிள் நிறுவனம் தனது ஒளிபரப்புக்கு யாருடைய கேபிளை பயன்படுத்துகிறது என்று தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கால் கேபிள் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளர் ஜே.ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று மனுக்களில் கூறியிருப்பதாவது:
எங்களது கம்பெனி எம்.எஸ்.ஓ மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த பிசினசில் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த 1995ம் ஆண்டு கேபிள் டி.வி ஓழுங்குமுறை சட்டத்தின்படி நாங்கள் இதற்கு உரிய லைசென்ஸ் பெற்றுள்ளோம். 12 ஆண்டுகளாக இந்த தொழிலை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். இதற்காக தமிழகம் முழுவதும் கேபிள் வயர்களை பதித்துள்ளோம். இதற்கு தனியாக அரசு அதிகாரிகளிடம் ஆங்காங்கே லைசென்ஸ் பெற்றுளோம். அதற்கான கட்டணமும் செலுத்தி வருகிறோம்.
டிராக் வாடகை என்று ஒரு கட்டணத்தையும் தவறாமல் அரசுக்கு செலுத்தி வருகிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் எங்கள் டி.வி நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு ஒளிபரப்பி வருகிறோம். சட்டப்படி, அமைதியான முறையில் எங்கள் கேபிள் மூலம் எங்கள் தொழிலை செய்து வருகிறோம். இதில் எந்த சட்டவிதியும் மீறப்படவில்லை.
அப்படி இருக்கும்போது கடந்த 2ம் தேதி தமிழக அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனக்கென தனியாக எந்த கேபிளும் பதிக்காமல் அவசரம் அவசரமாக சேவையை தொடங்கியுள்ளது. அரசு கேபிள் தொடங்கியவுடன் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளில் எங்கள் கேபிள் வயர்களை கட் செய்து அதே கேபிள்கள் மூலம் அரசு கேபிள் உரிமம் பெற்ற சேனல்களை சட்டவிரோதமாக ஒளிபரப்பி வருகிறது. போலீஸ் உதவியுடன் இந்த சட்டவிரோத நடவடிக்கை நடந்துள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் கேபிளுக்கு ஆண்டு வாடகை கட்டணம் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி சேவைக்கு எங்களுக்கு சொந்தமான கேபிளை சட்ட விரோதமாக பயன்படுத்துவது பெரும் குற்றம்.
எங்கள் கேபிள்களை அரசு கேபிள் நிறுவனம் சட்டவிரோதமாக பயன்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால் மாவட்ட கலெக்டர்கள் எங்கள் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களிடமும் மனு கொடுத்தோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோவில், குமரன் ஓட்டல், ஈஸ்வரன் கோவில், லோட்டஸ் கண் மருத்துவமனை, நொய்யல் வீதி ஆகிய இடங்களில் எங்கள் கேபிள்களை அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து அதன் மூலம் அரசு கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல கோவையிலும், ஈரோட்டிலும் பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனம் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. போலீஸ் ஒத்துழைப்புடன் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பலன் இல்லை. சட்டப்படியான எங்கள் வியாபாரத்தில் அரசு கேபிள் நிறுவனம் வேண்டுமென்றே குறுக்கீடு செய்கிறது.
அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இந்த செயல் திருட்டுத் தனமானது என்பதை சுட்டிக் காட்டியும், அதிகாரிகளிடம் முறைட்யிட்டும் அந்த குற்றம் தடுக்கப்படவில்லை என்பதை விளக்கியும் எங்கள் நிறுவனம் சார்பில் தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் கடந்த 7ம் தேதி மனு கொடுத்தோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சட்டப்படி வியாபாரம் செய்ய உரிமையுள்ளது. அதன்படி நாங்கள் சட்டப்படி எங்கள் வியாபாரத்தை நடத்தி வருகிறோம். இதை அரசு கேபிள் நிறுவனம் தடுத்து வருகிறது. இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1) (ஜி)க்கு எதிரானது. எங்கள் வியாபாரத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எங்களது அனைத்து அடிப்படை வசதிகளையும் சட்டவிரோதமாக திருடி வருகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி வரை எங்களது எம்.எஸ்.ஓ.வுக்கு லைசென்ஸ் உள்ளது.
எனவே எங்கள் கேபிள்களை சட்டவிரோதமாக பயன்படுத்த அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 3ம் தேதி, 5ம் தேதி, 7ம் தேதி நாங்கள் மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்களிடம் கொடுத்த புகார்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
எங்கள் கேபிள்களை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
எங்கள் கம்பெனிக்கு உரிய பாதுகாப்பு தர போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
அமைதியான முறையில் நாங்கள் நடத்தும் வியாபாரத்தில் அரசு கேபிள் நிறுவனம் குறுக்கீடு செய்ய தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கால் கேபிள் நிறுவனத்தின் பொதுமேலாளர் ராஜேஷ் கூறியுள்ளார். இந்த மனுக்களை வக்கீல்கள் கிரிஸ் நீலகண்டன், எம்.ஏ.விமல் மோகன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
மனுக்களை 08.08.2011 அன்று நீதிபதி பால் வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல்கள் விஜயநாராயணன், பி.எஸ்.ராமன் ஆகியோரும் அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள்.
�அரசு கேபிள் நிறுவனத்திற்கு தனி கேபிள் இருக்கிறதா? எந்த கேபிள்களை பயன்படுத்துகிறீர்கள்? இந்த கேள்விகளுக்கு 12ம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்� என்று நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment