சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் ஆஜராகாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கி வருவதற்கு பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜூலை 27ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்கள் தரப்பு விளக்கத்தை பதிவு செய்யும்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டார்.
தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் �இசட்� பிரிவு பாதுகாப்பில் இருப்பதாகவும், தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதாலும் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ஜெயலலிதா கோரினார். அதை நிராகரித்த நீதிபதி, கட்டாயமாக ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை நேற்று முன்தினம் நிராகரித்த உச்ச நீதிமன்றம், பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு 06.09.2011 அன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் சார்பிலும் வாய்தா கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும், சசிகலா கண் சிகிச்சை காரணமாகவும், இளவரசி சர்க்கரை நோய் காரணமாகவும், சுதாகரன் கை எலும்பு முறிவு காரணமாகவும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது.
இவற்றை பரிசீலித்த நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, �ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் பரவாயில்லை. மற்றவர்கள் ஒவ்வொரு முறையம் மருத்துவ காரணங்களை கூறுவது சரியல்ல.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறுவதன் நோக்கமே, நீதிமன்ற நடவடிக்கைகளை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான். ஆனால், ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்வது இந்த வழக்கில் வாடிக்கையாகி விட்டது. இதுபோன்ற காரணங்களை நீதிமன்றம் இனியும் ஏற்காது� என்று கண்டிப்புடன் கூறினார். அதே நேரம், 4 பேரின் வாய்தா மனுக்களையும் ஏற்றுக் கொண்டார்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், இந்த விசாரணையை 2 வாரங்கள் ஒத்திவைக்கும்படி ஜெயலலிதாவின் வக்கீல் கந்தசாமி புதிய மனு தாக்கல் செய்தார்.
இதற்கு, 12ம் தேதி தீர்ப்பு வெளியாகும் நிலையில் 13ம் தேதியே விசாரணை நடத்தலாம் என்று அரசு வக்கீல் சவுட்டா தெரிவித்தார். அதை ஏற்ற நீதிபதி, விசாரணையை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment