பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 30.08.2011 அன்று அளித்துள்ள கேள்வி பதில்கள் வருமாறு:
சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, தேவையில்லாமல் கருணாநிதியின் இரட்டை வேடம், பித்தலாட்டம், கபட நாடகம் என்றெல்லாம் பேசியிருக்கிறாரே?
அவரவர் தகுதிக்கேற்பத்தான் வார்த்தைகள் வெளிவரும். 110ம் விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போது குற்றச்சாட்டே கூறக்கூடாது. ஆனால் அந்த அறிக்கை முழுவதும் குற்றச்சாட்டுகள், அதுவும் என் மீதுதான்.
2000ம் ஆண்டில் அமைச்சரவையிலே எடுக்கப்பட்ட ஒரு முடிவினை தற்போது ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை நடைபெற்ற ஒரு சில ஆண்டுகளில் 8&10&1999ல் உச்ச நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து கருணை மனு மீது 25&11&1999ல் சென்னை உயர் நீதிமன்றமும் இவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட சூழ்நிலையில் நாட்டு மக்கள் எல்லாம் இவர்கள் மீது எதிர்ப்புக் கருத்தினைக் கொண்டிருந்தபோது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவினை ஜெயலலிதா பேரவையில் படித்துக் காட்டியிருக்கிறார்.
2000ம் ஆண்டில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் ஒரு சில ஆண்டுகளே தண்டனையை அனுபவித்திருந்தனர். அப்போது தான் ராஜீவ் காந்தியின் மறைவுக்குக் காரணமாக இவர்கள் மீது குற்றஞ் சாட்டியபோது தி.மு.கழக அமைச்சரவையில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. அப்போது கூட தூக்குத் தண்டனைக்கு ஆளான நான்கு பேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று நான் தெரிவித்த கருத்தினை ஏற்றுத்தான் அவருக்கு அப்போது கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
நளினியின் தண்டனையைக் குறைத்ததற்கே 27&4&2000ல் பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஏன் நளினியை விடுதலை செய்தது பற்றி 23&10&2008 நமது எம்.ஜி.ஆர். இதழில் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இப்படியெல்லாம் கூறிவிட்டு நேற்றைய தினம் கூட அவர்களின் தண்டனையைக் குறைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற முன் வராமல், தற்போது கழகமும், மற்ற எதிர்க்கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் அறிக்கை விடுத்த பிறகு, அதனால் எழுந்துள்ள எழுச்சியைக் கண்டு பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.
எப்படியோ தற்போது மற்ற மூவரும் இதுவரை 20 ஆண்டுகளுக்கு மேல் தூக்குத் தண்டனைக்கு சமமாக சிறையிலே இருந்து தண்டனையை அனுபவித்து விட்டார்கள். எனவே அவர்களின் தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று தி.மு. கழகத்தின் சார்பில் கோருகிறோம். அவர்கள் அனுபவித்த முழு தண்டனையாக எண்ணி அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டு மென்று மத்திய அரசை தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.
தி.மு.கழக ஆட்சி நடைபெற்ற போது தமிழகத்தில் மணல் கொள்ளை நடைபெறுவதாக ஜெயலலிதாவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அன்றாடம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்களே, தற்போது மணல் கொள்ளை தடுக்கப்பட்டு விட்டதா?
சட்ட விரோதமாக தற்போது மணல் அள்ளப்படுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆர். நல்லகண்ணு நேரில் பார்வையிட்டிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, காவிரி ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது என்றும், தமிழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி பொக்லைன் மூலம் 20 அடி முதல் 30 அடி வரை மணல் அள்ளப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
மணல் கொள்ளையை அரசு தடுக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என்று நல்லகண்ணு சொல்கிறார். மேலும் பத்திரிகைகளில் எல்லாம் தற்போது நடைபெறும் மணல் கொள்ளையைப் பற்றியும், மணல் விலை ஏறியிருப்பது பற்றியும், வசூல் வேட்டை நடைபெறுவது பற்றியும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
சேலத்தில் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவல் துறையினரை மிரட்டிய தே.மு.தி.க. நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
உங்கள் கேள்விக்கான காரணம் புரிகிறது. சென்னையில் நள்ளிரவில் காவல் நிலையத்திற்குள் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரும், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் நுழைந்து காவல் துறையினரை திட்டி விட்டு, அங்கே பிடித்து வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. வினரையும் விடுவித்து அழைத்துச் சென்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையே, தே.மு.தி.க. நிர்வாகியை மட்டும் கைது செய்திருக்கிறார்களே, இது என்ன நியாயம் என்பதற்காக கேட்கிறீர்கள்.
தமிழகச் சட்டமன்றத்தை தி.மு.கழகம் புறக்கணித்த காரணத்தால் அ.தி.மு.க. உறுப்பினர்களும், அமைச்சர்களும், ஏன் முதல்வரும் கூட விதியை மீறி எந்த அளவிற்கு அநாகரிகமாக பேச முடியுமோ அந்த அளவிற்குப் பேசுகிறார்களே? உதாரணமாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உங்களை கலியுக துரியோதனன் என்றே விமர்சித்திருக்கிறாரே?
ஒரு உறுப்பினர் பேசியது இருக்கட்டும் அந்தப் பேச்சில் முதல் அமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? அப்படியெல்லாம் அநாகரிகமாகப் பேசக் கூடாது என்று கண்டித்திருப்பார் என்று கற்பனை செய்ய வேண்டாம். கருணாநிதியை துரியோதனனுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல, துரியோதனன் தீயவனாக இருந்தாலும் சாகும் வரை முடிசூடா மன்னனாக வாழ்ந்தவன். கருணாநிதி முடி இழந்து மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டவர் என்று சொல்லியிருக்கிறார். 1996ம் ஆண்டிலும், 2006ம் ஆண்டிலும் ஜெயலலிதா முடி இழக்க வில்லையா? அப்போது இவர் ஓட ஓட தமிழ்நாட்டு மக்களால் விரட்டப்பட்டவரா? தற்போது அவருக்கு கிடைத்துள்ள முடி கார் உள்ள அளவும், கடல் நீர் உள்ள அளவும் அப்படியே இருக்கப் போகின்ற முடியா?
ஜெயலலிதா அளித்த இப்தார் விருந்தில் பேசும்போது கூட உங்களை மறக்காமல், கடந்த ஆண்டு அவர் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் பற்றி தேர்தலுக்காக அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக நீங்கள் விமர்சனம் செய்ததாகவும், ஆனால் அவர் 1999ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிலும் இப்தார் நிகழ்ச்சியிலே கலந்து கொள்வதாகவும் பேசியிருக்கிறாரே?
1999ம் ஆண்டு முதல் தானா இப்தார் கொண்டாடப்படுகிறது? அதற்கு முன்பு இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெற வில்லையா? அல்லது ஜெயலலிதாதான் அப்போது இல்லாமல் போய் விட்டாரா? 1991ம் ஆண்டு முதல் 1996 வரை ஜெயலலிதாதானே முதலமைச்சர்.
அப்போது ஏதாவது ஒரு இப்தார் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதுண்டா? இஸ்லாமியர் களைப் பற்றியும், சிறுபான்மையினரைப் பற்றியும் ஜெயலலிதா என்னென்ன பேசினார் என்பதை அந்த நன்றியுள்ள சமுதாயம் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment