பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணைக்கு, ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 1991&96ல் முதல் முறை முதல்வராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வழக்கில் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 313ன் கீழ் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். இதற்காக ஆஜராகுமாறு ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை. பாதுகாப்பு காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராக தனக்கு விலக்கு அளித்து, எழுத்து மூலம் வாக்குமூலம் அளிக்க அனுமதிக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் கேள்வி&பதிலை பதிவு செய்ய வேண்டும் என்று கோரி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் முன்பாக 02.09.2011 அன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா சார்பில் சீனியர் வக்கீல் ஹரீஷ் சால்வே வாதாடியதாவது:
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், நீதிமன்றத்தில் அவர் ஆஜரானால் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 313(5)&ன் கீழ், குற்றம்சுமத்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளிக்க அனுமதிக்கலாம். எனவே, பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஹரீஷ் சால்வே கூறினார்.
இதை கேட்ட நீதிபதிகள், �பிரிவு 313ல் விசாரணை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுக்கு உள்ள அதிகாரத்தை பறிக்க முடியாது. அவரது பணியை தடுக்கக் கூடாது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் கேட்க வேண்டிய அவசியமும் நீதிமன்றத்திற்கு இல்லை. விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியைத் தவிர, வேறு எதையும் இந்த மனுவில் பார்க்க முடியவில்லை.
இந்த விஷயத்தில், மனுதாரருக்கு சரியான ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். அவர் வகிக்கும் பதவியை நாங்கள் அறிவோம். எனவே, அவர் விரும்பினால், அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யுமாறு பெங்களூர் நீதிமன்றத்துக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். மனுதாரர் விருப்பப்படும் நாளில், நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஜெயலலிதா எப்போது ஆஜராவார் என்பதை அவரிடம் கேட்டு சொல்வதாக வக்கீல் ஹரீஷ் சால்வே கூறினார்.
இதற்காக விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment