திமுகவினர் மீது அடுக்கடுக்காக வழக்குகளை போடும் அதிமுக அரசு, அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் 02.09.2011 அன்று மாநகர தி.மு.க.,சார்பில் ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர செயலாளர் கலையமுதன் தலைமை வகித்தார். செவ்வை பகுதி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க., பொருளாளரும், மாநில இளைஞரணி செயலாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
இது கண்டன பொதுக்கூட்டம் என்பதை விட சேலம் மாவட்டத்தில் நடக்கும் எழுச்சி மிக்க மாநாடு போல் உள்ளது. இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் எப்படியும் வருவார். அவரது உரையை நீங்களும் நானும் கேட்கலாம் என்று நேற்று வரை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் ஜாமீன் கிடைத்தும் தொடர் அரசு விடுமுறையால் நீதிமன்றமும், காவல்துறையும் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை தாமதத்தால் அவர் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் கோவை சிறையில் இருந்தாலும் தற்போது இந்த கூட்டம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார். சேலம் மாவட்டத்தில் நான் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். ஆனால் வீரபாண்டி ஆறுமுகம் இல்லாமல் நான் பங்கேற்றது இல்லை. அவர் இல்லாமல் நான் பங்கேற்கும் முதல் கூட்டம் இது தான். அவர் இல்லாவிட்டாலும் அனைவர் உள்ளங்களிலும் இருப்பார்.
கட்சி பொறுப்புகள், மேயர், அமைச்சர், துணை முதல்வர் என நான் பல பொறுப்புகளில் இருந்த போதும் சேலத்திற்கு வந்துள்ளேன். அப்போதெல்லாம் கிடைக்காத மகிழ்ச்சியும், பரவசமும் உங்களில் ஒருவனாக எப்போதும் இருப்பதில் கிடைக்கிறது.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாட்டை பற்றி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 25ம் தேதி வட சென்னையில் தலைவர் கருணாநிதி இந்த கூட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, சட்டமன்றத்தில் ஜனநாயகமே இல்லையே. இருந்தால் தானே அதைப்பற்றி பேச முடியும் என்றார்.
மக்களுக்காக, மக்களால் அமையும் அரசே ஜனநாயக அரசாக அமைந்திட முடியும். ஆனால் தமிழகத்தில் நடக்கும் ஜெ., அரசு அவருக்காக நடக்கும் சர்வாதிகார அரசாகவே உள்ளது. தலைசிறந்த முதல்வர், சபாநாயகர்கள், எதிர்கட்சி தலைவர்கள் இருந்து சபை நடத்திய சட்டமன்றம் அதன் மரபை காப்பாற்றியுள்ளது. ஆனால் இப்போது சபாநாயகர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் என்று யாருமே மரபுகளை பின்பற்றுவதில்லை. எதிர்கட்சி தலைவர் என்று ஒருவர் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது.
இந்நிலையில், எதிர்கட்சி கூட அல்லாமல் 23 உறுப்பினர்களை கொண்ட குழுவாக பணியாற்ற திமுகவுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இந்த கூட்டத்தின் எழுச்சியை பார்க்கும் போது நாம் தான் தோற்றோமா? நடப்பது அதிமுக ஆட்சியா, திமுக ஆட்சியா? என்ற கேள்வி எழுகிறது. சாதாரணமாக ஒரு கட்சி தேர்தலில் தோற்றால் மக்களை சந்திக்க குறைந்தது 6 மாதமாகும். கடந்த தேர்தலில் தோற்ற ஜெயலலிதா நாலே முக்கால் ஆண்டுகளுக்கு பிறகே மக்களை சந்தித்தார். ஆனால் தோல்வியை கண்ட மூலையில் துவண்டு கிடப்பவர்கள் திமுகவினர் அல்ல.
1949&ல் திமுக துவங்கிய காலத்தில் இருந்து பல்வேறு தேர்தல்களையும், வெற்றி, தோல்விகளையும் நாம் சந்தித்து வந்துள்ளோம். இவற்றை எல்லாம் விட 1975&ல் நெருக்கடி நிலையை சந்தித்து ஆட்சியை இழந்து சிறைக் கொடுமைகளையும் அனுபவித்தோம். அப்படிப்பட்ட கொடுமைகளை சந்தித்து அப்போதே ஆட்சியை பற்றி கவலைப்படாத கலைஞரும், திமுகவினரும் இப்போதா கவலைப்படப் போகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி உழைப்பவர்கள் தான் திமுக தொண்டர்கள்.
சட்டமன்றத்தில் சபாநாயகராக ஜெயக்குமார் பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி பேசினேன். முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். திமுக உறுப்பினர்கள் பண்போடு நடந்து கொண்டார்கள். சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்று ஒன்று இருந்தால் தான் நிறை, குறைகளை சுட்டிக்காட்ட முடியும். திமுக உறுப்பினர்களின் கருத்துகளை ஒரே நேரத்தில் தெரிவிக்கவும், விவாதிக்கவும், சட்டமன்ற மரபுப்படி வெளிநடப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஒரே இடத்தில் அமர கேட்டோம். ஆனால் ஆளுக்கொரு மூலையில் உட்கார வைத்து எங்கள் குரலை முடக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது.
கேள்வி நேரத்தில் அடுத்தவர் மீது குறைகள் கூறுவதோ, தாக்கி பேசுவதோ கூடாது என்பது மரபு. ஆனால் ஆளுங்கட்சியினரும், ஜால்ரா போடும் எதிர்கட்சியும் கலைஞரை தரக்குறைவாகவும், அநாகரீகமாகவும், ஒருமையில் கொச்சைப்படுத்தி தாக்கி பேசுவதிலேயே நேரம் கடத்தி வருகின்றனர். சட்டமன்றம் தற்போது ஜால்ரா மன்றம் ஆகி விட்டது. தேவையில்லாத பழிகளை எங்கள் மீது சுமத்தி ரகளையில் ஈடுபட முயற்சிக்கின்றனர். அவர்கள் அளவுக்கு எங்களால் தரம் தாழ்ந்து போக முடியாது என்பதால் வெளிநடப்பு செய்தோம்.
சட்டமன்றத்தில் தற்போது ஆரோக்கியமான விவாதங்கள் நடப்பதில்லை. கேள்விகளை மொத்தமாக கேட்க வேண்டும். அமைச்சர்கள் மொத்தமாக பதில் அளிப்பார்கள் என்று முதல்வர் கூறுகிறார். ராஜிவ் கொலையில் மூன்று பேருக்கு விதித்த தூக்கு தண்டனை குறித்து கேள்வி எழுப்ப அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவர் வெளிநடப்பு செய்தார்.
ஆனால் அதற்கு அடுத்த நாள் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிக்கை படித்தார். அதில் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்று அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தூக்கு தண்டனை பிரச்னையில் கலைஞர் நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா கூறுகிறார். இது அரசியல் பிரச்னையா? கலைஞரை விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது.
மூன்று பேரின் மரண தண்டனை குறித்து தான் எதுவும் செய்ய முடியாது என்று கூறிய ஜெயலலிதாவுக்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் வந்தது எப்படி? இதை வைத்தே யார் நாடகம் ஆடுகிறார்கள் என்று மக்கள் அறிவார்கள்.
2006 தேர்தலில் திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசே எங்கள் வழிகாட்டி தமிழகம் என்று சொல்லும் அளவுக்கு ஆட்சி நடந்தது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 5 ஆண்டுகளில் கலைஞர் செய்து முடித்துள்ளார். ஆனால் மாற்றம் வேண்டும் என்று கருதி வாக்களித்த மக்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா கொண்டு வந்த முதல் மசோதாவே சமச்சீர் கல்வியை ரத்து செய்ய வேண்டும் என்பது தான். சமச்சீர் கல்வி என்பது ஒட்டு மொத்த மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான திட்டம். முதல் கூட்டத்திலே இதை ரத்து செய்ய வேண்டும் என்ற போது இதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தது திமுக தான். இதற்காக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றனர். கடைசியில் என்ன ஆனது? சமச்சீர் கல்வியை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை வெற்றி விழாவாக கொண்டாடினோம். இதே நிலை தலைமை செயலகத்திற்கும் வரும்.
புதிய தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2002ம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசியுள்ளார். இதற்காக மூன்று இடங்களையும் தேர்வு செய்தார். இதனடிப்படையிலேயே கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை அமைத்தார். ஆனால் அதற்கு சீல் வைத்து விட்டு தற்போது விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த கட்டடத்தில் மருத்துவமனை கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். எதற்கும் பயன்படாத கட்டடம் என்று கூறியவர் அவர் தான். அங்கு மருத்துவமனை வருவதற்கு வாய்ப்பே இல்லை. விசாரணை கமிஷன் என்றாலே எதற்கு பயன்படாது என்று எல்லாருக்கும் தெரியும். சமச்சீர் கல்வியில் பலத்த அடி விழுந்தது போல் இந்த பிரச்னையிலும் அடி விழுந்து விடக்கூடாது என்பதற்காக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார்.
திமுகவினர் மீது அடுக்கடுக்காக வழக்குகளை போட்டு சிறையில் தள்ளுகிறார். நாங்கள் கொள்ளையடித்து விட்டு சிறைக்குச் செல்லவில்லை. மக்களுக்காக சிறை செல்ல எப்போதும் தயங்கியதில்லை. சேலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையத்தில் கையெழுத்து போட வந்த வீரபாண்டி ஆறுமுகத்தை மற்றொரு வழக்கில் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதே போல் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை ஒரு மாணவன் படிப்பை பாழாக்கி விட்டதாக கூறி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சமச்சீர் கல்வியை மூன்று மாதமாக நிறுத்தி வைத்து ஒட்டு மொத்த மாணவர்களின் படிப்பை பாழாக்கிய ஜெயலலிதாவை என்ன செய்வது?
பொய் வழக்கு, சிறை என பல்வேறு கொடுமைகளை தாண்டி பீடு நடை போடும் இயக்கம் திமுக. இதை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். நாங்கள் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சமாட்டோம். எங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கெல்லாம் ஆதாராம் உள்ளதா?
திமுகவினர் மீது அடுக்கடுக்காக வழக்குகளை போடும் அதிமுக அரசு, அதிமுகவினர் மீது பல்வேறு புகார்கள் வந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதிமுகவை சேர்ந்த அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் எம்எல்ஏ சோமசுந்தரம், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ வெங்கடாஜலம், சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா ஆகியோர் மீது கொடுத்த புகார்கள் என்ன ஆனது. ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான கே.சி.வீரமணி மீது பெப்ஸி டீலர் வெங்கடேசன் கொடுத்த புகார் என்ன ஆனது? கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக அமைச்சர் சம்பத், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் மீது மண்டல துணை வட்டாட்சியர் இக்பா நசீர் கொடுத்த புகார் என்ன ஆனது. தேடப்படும் குற்றவாளிகளான இவர்கள் சுதந்திரமாக நடமாடுவது எப்படி?
நாங்கள் உங்களைப்போல் வழக்குகளுக்கு 140 முறை வாய்தா வாங்க மாட்டோம். எந்த வழக்கையும் நேர்மையாக எதிர் கொண்டு திமுகவை காத்து கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்துவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் சேலம் மாநகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வாளும், கேடயமும் கட்சியினர் வழங்கினர். வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு ராஜேந்திரன் பேசும்போது, எங்களின் உயிருள்ளவரையில் தலைவர் கலைஞர் அவர்கள்தான் எங்களின் “உயிர், ஸ்டாலின் அவர்கள் தான் “உயிர்மூச்சு இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
தற்போததைய சட்டமன்றம் சட்டமன்றம் போல நடக்கவில்லை சிங்கு ஜா போடும் மன்றமாகத்தான் உள்ளது. அம்மா அம்மா என்பதைத் தவிர அங்கு வேறு எந்த வார்த்தையும் கேட்டக முடிவதில்லை. என் நண்பர் ஒருவர் வேடிக்கையாக சொன்னார், ஜெயலலிதா ஏன்...? ஆடு மாடுகளை மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் தெரியுமா...? என்று கேட்டார்.
எனக்கு தெரிய வில்லை என்று சொன்னேன். அந்த விலங்குகள் எல்லாம் “அம்மா என்று மட்டும் சொல்லுவதால் தான் அதை தமிழக மக்களுக்கு இலவசமாக கொடுக்கிறார் என்று சொன்னார். தன் கட்சிகாரர்கள் மட்டுமல்ல தமிழகமே “அம்மா புராணம் பாடவேண்டியுள்ளது இந்த ஆட்சியில், என்ற செல்வகணபதி கூட்டத்தின் பலமான கைதட்டலை பெற்றார்.
No comments:
Post a Comment