பொங்கலூரில் நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமை ச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரியை 077.09.2011 அன்று போலீசார் திடீரென கைது செய்தனர்.
திருப்பூர் முருங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரில் பொங்கலூர் முன்னாள் எம்எல்ஏ மணி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மணி மகன் வெங்கடாச்சலம் ஆகியோர் மீது நில மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மணி மட்டும் கைது செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வந்தனர். இதையடுத்து பொங்கலூர் பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனாலும் தொடர்ந்து பொங்கலூர் பழனிச்சாமி தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் 07.09.2011 அன்று அவரது மகன் பைந்தமிழ் பாரியை(37) இந்த வழக்கில் அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பைந்தமிழ் பாரி கோவை மாநகர திமுக துணை செயலாளராகவும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவராகவும் பதவி வகிக்கிறார். வடகோவை மேம்பாலம் அருகில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் 07.09.2011 அன்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் மனு வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பைந்தமிழ் பாரியும் கலந்து கொண்டார். மதிய உணவுக்கு பின்னர் கட்சி அலுவலகத்திலேயே முன்னணி நிர்வாகிகளுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது திமுக அலுவலகத்திற்கு முன் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பல்லடம் டிஎஸ்பி முருகானந்தம் தலைமையில் வந்த தனிப்படையினர், முருங்கபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த நில மோசடி புகாரின் பேரில் பைந்தமிழ் பாரியை கைது செய்து விசாரணைக்காக அவிநாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அவினாசி பாளையம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பைந்தமிழ்பாரியிடம் தொடர்ந்து 3 மணிநேரம் விசாரணை நடத்திய பின்னர் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பத்மாவின் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். பைந்தமிழ் பாரியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த வழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியை மட்டுமே போலீசார் தேடி வந்தனர். கடந்த இரு வாரங்களாக கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மாநகராட்சி பணிகளில் பைந்தமிழ் பாரி வழக்கம் போல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பைந்தமிழ் பாரியை கைது செய்யும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. 07.09.2011 அன்று மதியம் திடீரென அவரை கைது செய்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment