கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, September 8, 2011

குண்டர் சட்டத்தில் 15 திமுகவினர் கைது : அச்சுறுத்தியே ஆட்சி நடத்த எண்ணினால் ஏமாற்றமே மிஞ்சும் - கலைஞர்


தமிழ்நாட்டில் 15 திமுகவினர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுறுத்தியே ஆட்சி நடத்த எண்ணினால் ஏமாற்றமே மிஞ்சும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 03.09.2011 அன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:
அ.தி.மு.க.வினர் மீதான நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், அவர்களது அணுகுமுறை பாரபட்சமானது என்றும் தெரிகிறதே?
ஆட்சியாளர்களோடு சேர்ந்து காவல் துறையினர் சட்ட நெறிமுறைகளை, தமது விருப்பத்திற்கு வளைக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி, காஞ்சிபுரம், பவானி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி, நாகர்கோவில் அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி என்.ஆர். கோவிந்தராஜன் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. சமீபத்திய எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் காரைக்குடி அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினரைச் சொல்லலாம்.
அ.தி.மு.க. ஆட்சியில் முறையான புலன் விசாரணைக்கு முன்னரே அ.தி.மு.க.வினர் என்றால் ஏதுமறியா நிரபராதிகள், தி.மு.க.வினர் என்றால் குற்றவாளிகள் என்று ஏற்கனவே இதயத்தில் பதிவு செய்து கொண்ட எண்ணத்தில் காவல்துறை செயல்படுவதாகத் தெரிகிறது.
தகுந்த ஆதாரங்களோடு செய்யப்படும் புகார்களின் மீது அந்தப் புகார்கள் யார் மீது செய்யப்பட்டிருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவற்றை அலட்சியப் படுத்தக் கூடாது என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் நடப்பதென்ன?
சட்டத்தின்படி நடக்கும் ஆட்சி என்பதற்கு மாறாகவும் முரணாகவும் எதிராகவும், சர்வாதிகார ஆட்சி அல்லது போலீஸ் ராஜ்யம் எனக் குற்றம் சாற்றிடும் வகையில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியினர் தரும் அரசியல் ரீதியான ஆணைகளுக்குப் பணிந்து திமுகவினரை காவல்துறையினர் கொடுமைப்படுத்துகின்றனர்.
பொய் புகார்களின் அடிப்படையிலான வழக்குகளில் கைது, பொய்ப் புகார்கள்கூட இல்லாமல், கைது செய்துவிட்டு, பிறகு புகார்களைத் தயாரிப்பது, நீதிமன்ற ஜாமீன் மூலம் வெளியே வந்தவரை, வேறொரு பொய்ப் புகாரில் கைது செய்வது என்று காவல்துறையினர் செயல்படுகின்றனர். அதிலும், தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்றால் ஓர் அளவுகோல், அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்றால் மற்றொரு அளவுகோல் என ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, மற்றொரு கண்ணுக்கு வெண்ணை என்ற வெறுப்பினை அடிப்படையாகக் கொண்ட வித்தியாசமான சட்டப் பிரயோகத்தின்படி கைது நடவடிக்கைகளில் காவல்துறையினர் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
கைது செய்யப்படும் திமுகவினரை, மதுரையிலிருந்து பாளையங்கோட்டைக்கும் சேலத்திலிருந்தும், சென்னையிலிருந்தும் கோவைக்கும் திருச்சியிலிருந்து கடலூருக்கும், சேலத்துக்கும் கொண்டு சென்று சிறையில் அடைக்கின்றனர். குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ எளிதில் சென்று அவர்களை பார்க்கக் கூடாது என்பதற்காகக் கல் நெஞ்சத்தினர் செய்து வரும் ஏற்பாடு இது. இத்தகைய நிலை நெருக்கடி காலத்தில் கூட இல்லை.
தொடங்கப்பட்ட எல்லாவற்றுக்குமே முடிவு என்று ஒன்று உண்டு. சட்டத்தைச் சற்றும் மதிக்காத இதுபோன்ற சாகசங்கள் இன்னும் எத்தனை நாளைக்கு என்பதை நீதிமன்றங்கள் நிர்ணயித்திடும் என நிச்சயம் நம்புவோம்.
குண்டர் சட்டத்தைக் காட்டி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பயமுறுத்துவதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளதே?
குண்டர் சட்டம் 1982ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டம் ஒழுங்கிற்கு பாதகம் விளைவிக்கும் செயலில் அடிக்கடி ஈடுபடுபவர்கள், வழிப்பறி, செயின் பறிப்பு, திருட்டு, விபச்சாரத் தொழில், கள்ளச் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுபவர்கள், உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாது இந்தச் சட்டத்தின் பிரிவு 13ன் கீழ் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின் 100 நாள் சாதனைகளில் ஒன்றாக இதுவரை தமிழகத்தில் 323 பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 139 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவு குறுகிய காலத்தில், இத்தனை பேர் இந்தக் கடுமையான குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம்? திடீரெனக் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருக்க வேண்டும் அல்லது பயமுறுத்திப் பணிய வைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே குண்டர் சட்டத்தை தவறான முறையில் பிரயோகித்திருக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியினர் பெருமளவுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதற்கு இந்த இரண்டுமே காரணங்களாகும்.
அடிப்படையில், மனித உரிமைகளுக்கு எதிரானது குண்டர் சட்டம். எனவே அதைப் பிரயோகிப்பதற்கு முன், ஒரு முறை அல்லது இரு முறை, பல முறை ஆழ்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால் கொடுங்குற்றவாளிகள் மீது பாய்ச்சிட வேண்டிய குண்டர் சட்டத்தை, தி.மு.க. வினர் 15 பேர் மீது, உள்நோக்கத்தோடு மேலோட்டமான எண்ணத்தின் அடிப்படையில் பாய்ச்சியுள்ளனர்.
குண்டர் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் இவர்களுக்கு எப்படிப் பொருந்தும் என்பது தெரியவில்லை. சட்ட உரிமைகளில் ஒன்றான ஜாமீன் பெறுவதற்கும் வழியின்றி, அவர்கள் சிறைக்குள் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நில அபகரிப்பு குண்டர் சட்டம் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் திமுக தோழர்களை அச்சுறுத்திவிட முடியாது. இதைவிடப் பெரிய சோதனைகளையும் துன்பங்களையும் சந்தித்து, புடம் போட்ட பொன்னாக ஒளிர்பவர்கள் திமுகவினர்.
ஜனநாயக நாட்டில், சட்டப்படியான ஆட்சிக்கு விடை கொடுத்துவிட்டு, சுதந்திரமான எண்ணம், அச்சமில்லாத கருத்துப் பரிமாற்றம், கலந்தாலோசனை விவாதம் இவையேதுமின்றி, நானே எல்லாம், நானே இந்த மாநிலம் எனும் சர்வாதிகாரப் போக்கில் எதிர்க்கட்சியினரையும், பொதுமக்களையும் அச்சுறுத்தியே ஆட்சி நடத்தலாம், ஒருவகை டென்ஷனில் வைத்தே ஆட்சி நடத்தலாம் என்று நினைத்தால், ஆட்சியாளர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். வரலாற்றின் உயிரோட்டமுள்ள வாக்கு இது.
அதிகமாக முறுக்கேற்றப்பட்ட கயிறு அறுந்து விடும் என்ற அண்ணா பொன்மொழியை அதிமுக ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment