முதலமைச்சர் கருணாநிதி உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 23.7.2009 அன்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் 22.07.2010 அன்று ஒராண்டை நிறைவு செய்து, 23.7.2010 அன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த ஓராண்டில் இதுவரை ஒரு கோடியே 44 இலட்சத்து 45 ஆயிரத்து 117 குடும்பங்கள் இத்திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரத்து 439 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 469 ரூபாய் என்ற வீதத்தில் 569 கோடியே 54 இலட்சம் ரூபாய் பிரிமியம் தொகையாகவும், 58 கோடியே 66 இலட்சம் ரூபாய் சேவை வரியாகவும் காப்பீட்டு நிறுவனத்திற்குத் தமிழக அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்குச் சிகிச்சை / அறுவை சிகிச்சைகள் அளிப்பதற்காக 656 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவமனைகளில் ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 257 நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதற்காக காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு 415 கோடியே 43 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் பாராட்டும் இத்திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இத்திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டு நோய் குணமடைந்து, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று (23.7.2010) புனித ஜார்ஜ் கோட்டையில் பரிசுகள் வழங்கி வாழ்த்துகள் கூறினார். மேலும், இத்திட்டத்தின் வெற்றிக்காகச் சிறப்பாகப் பணியாற்றி அதிக அளவில் நோயாளிகளுக்குச் சிகிச்சைகள் அளித்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நற்சான்றிதழ்களை வழங்கி, அம்மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், திட்டத்தின் வெற்றிக்குப் பாடுபடும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்குப் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், கே.எஸ். ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், அரசு உயர் அலுவலர்கள், ஸ்டார் காப்பீட்டு நிறுவனத் தலைவர் வி. ஜெகந்நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment