கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 29, 2010

மு.க.தமிழரசு மகள் பூங்குழலி திருமணம் கலைஞர் வாழ்த்துரை - 08.03.2009


முதல்-அமைச்சர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு-மோகனா மகள் பூங்குழலி, கோவை மத்திய ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ம.சி.பழனிச்சாமி-வசந்தி மகன் பிரேம் ஆனந்த் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் 08.03.2009 அன்று காலை நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி காலை 9.30 மணிக்கு சென்னை கோபால புரத்தில் இருந்து வேன் மூலம் அண்ணா அறிவாலயம் வந்தார். அதன்பின்பு வீல் சேர் மூலம் மேடைக்கு அழைத்து வந்தனர்.

திருமண விழாவிற்கு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் தலைமைதாங்கினார். அப்போது அவர் தாலியை எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தார். அதை அவர் மணமகன் பிரேம் ஆனந்திடம் கொடுக்க மணமகள் பூங்குழலி கழுத்தில் கட்டினார். திருமணம் முடிந்ததும் மணமக்களுடன் கருணாநிதியின் குடும்பத்தினர் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

மணமக்களை வாழ்த்தி கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஏறத்தாழ நாற்பது நாட்களுக்குப் பிறகு உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை இன்றைக்குப் பெற்றிருக்கிறேன். முதல்வர் வருவாரா, வருவாரா என்று இங்கே பேசிக் கொண்டதாக, நம்முடைய பேராசிரியர் காதர் மொய்தீன் சொன்னார்.

முதல்வர் வருவாரா என்று பேசிக் கொண்டார்களா, அல்லது முதல்வராக வருவாரா என்று பேசிக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது. எப்படியும் சுயமரியாதை மணம் வீசுகின்ற இடத்தில் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கருணாநிதி இருப்பான் என்பதற்கு இது சான்று. மணமக்கள் இன்று வாழ்க்கைத் துணை என்கிற நலம் பெற்று நம்முடைய வாழ்த்துக்களையெல்லாம் அடைந்திருக்கிறார்கள். இந்த வாழ்த்துகள் வீண் போகாது. காரணம் மணமகனும், மணமகளும் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

என்னுடைய இளையமகன், தமிழரசு - நீங்கள் எல்லாம் மிக அதிகமாக - அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளாவிட்டாலும், கழகத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அதிலும் குறிப்பாக அடக்குமுறைகளை எதிர்த்து நடைபெறுகின்ற போராட்டமானாலும் அல்லது மொழியைக் காப்பாற்றுகின்ற போராட்டமானாலும் அல்லது உரிமைகளைக் கோருகின்ற போர் முனைகள் ஆனாலும் அவைகளில் எல்லாம் கழகத்தினர் சிறை புகுந்தால், அந்த சிறைக்குள்ளே ஐம்பது பேர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், கழகச் சார்புடையவர்கள் இருப்பார்களானால், தமிழரசு சிறைச்சாலைக்கு வெளியே இருந்து உள்ளேயிருக்கின்ற கழகத் தோழர்களுக்கு என்னென்ன வசதி வாய்ப்புகள் வேண்டும் என்பதையெல்லாம் சட்டப் பூர்வமாக அறிந்து அவைகளை முறைப்படி தலைமைக் கழகத்திலே தெரிவித்து, அவற்றை அவர்களுக்கு வாங்கி உதவுகின்ற ஒரு பணியினை, அவர்கள் ஆறு மாத காலம் சிறையிலே இருந்தாலும் அந்த ஆறு மாத காலமும் சிறைச்சாலையைச் சுற்றிச் சுற்றி வருகின்ற ஒரு மகன் தான், என்னுடைய இளைய மகன் மு.க. தமிழரசாகும்.

பேராசிரியர் இங்கே குறிப்பிட்டார், உங்களுக்கு தமிழ் தெரியாது என்று சொன்னேன் என்று - மன்னிக்க வேண்டும், நான் அப்படிச் சொல்லவில்லை. உங்களுக்கு தமிழை தெரியாது என்று தான் சொன்னேன். ஏனென்றால் நான் இந்தத் திருமணத்திற்கு வரவில்லை யென்றால், தமிழின் கோபம் எந்த அளவிற்கு இருக்கும் என்று எனக்குத் தெரியும். யார் கோபித்தாலும் தாங்கிக் கொள்ளலாம், தமிழ் கோபித்தால் யாரும் தாங்கிக் கொள்ள முடியாது. வீட்டைப் பொறுத்து மாத்திரமல்ல, நாட்டைப் பொறுத்தும்தான் சொல்கிறேன். எனவே தான் தமிழுக்கு கோபத்தை உண்டாக்குகின்ற காரியத்தை யாரும் செய்யக் கூடாது என்பதை இந்தத் தமிழின் மூலமாக நான் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.

ரவிக்குமார் எம்.எல்.ஏ, பேசும்போது ஒன்றைச் சொன்னார். இங்கேயும் கோரிக்கை வைக்கிறேன் என்று சொல்லி விட்டு அனைத்துச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்திருக்கிறீர்கள், பெண்களும் அர்ச்சகராக ஆக வேண்டுமென்று சொன்னார். அவருக்கு ஏதோ சிறு சங்கடம் இருப்பதாக கருதுகிறேன். வீட்டிலே பெண்கள் அர்ச்சனை செய்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களை யெல்லாம் எப்படியாவது கோவிலுக்கு அனுப்பி விட வேண்டுமென்று ரவிக்குமார் அந்தக் கோரிக்கையை என்னிடம் வைத்துள்ளார். இதை நான் வேடிக்கைக்காகச் சொல்லவில்லை. இன்று மகளிர் தினம். மார்ச் 8 - மகளிர் தினம். இந்த நாளில் நாம் ஓர் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பல நேரங்களில் பாராளுமன்றத்தில், மகளிருக்கான இட ஒதுக்கீட்டிற்காக சட்டம் கொண்டு வர இந்தியாவினுடைய ஆட்சிக்கு இன்றைக்கு வழிகாட்டியாகவும், மன்மோகன் சிங் அரசுக்கு அறிவுரை கூறுபவராகவும், அதனை ஆக்க ரீதியாக நடத்திச் செல்பவருமாக இருக்கின்ற என்னுடைய அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சொக்கத்தங்கம் சோனியா காந்திக்கு, இந்த மண விழா மூலமாகவும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து அடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்படியே அமைகின்ற ஆட்சியிலாவது, நிச்சயமாக மகளிருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்த நிறைவேற்ற வேண்டுமென்று மகளிர் தினத்தில் பூங்குழலிக்கும், பிரேம் ஆனந்துக்கும் இடையே நடைபெறுகின்ற இந்தத் திருமண விழாவில் வேண்டுகோளாக விடுக்க விரும்புகின்றேன்.

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, பூங்குழலி என்ற இந்தப் பெயர் கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலிலே வந்தது தனக்கு நினைவுக்கு வந்ததாகச் சொன்னார். நான் அவரை மறுப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது, மறுத்தாலும் குற்றம் இல்லை.

இது புராணீக, ஷேத்திரம் என்று சொல்லப்படுகிற, பாடல் பெற்ற ஸ்தலமான எங்கள் கிராமம் - திருக்குவளையிலே உள்ள அம்மனின் பெயர். அந்தக் காலத்திலேயே எவ்வளவு அழகான தமிழிலே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழ்ப் பெயர்களையே வட மொழிப் பெயர்களாக மாற்றுவதுதான் நாகரீகம் என்று கருதிக் கொண்டிருக்கின்ற ஒரு கேடு கெட்ட நிலை, தமிழகத்திலே வளர்ந்து வருகிறது. அதற்கு மாறாக நாம் எண்ணிப் பார்த்தால், அந்தக் காலத்திலேயே, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில்களிலே ஒன்றுதான் திருக்குவளையிலே இருக்கின்ற கோளிலிநாதர் கோவில்.

நான் தமிழுக்கு பெண் குழந்தை பிறந்த போது, பெயர் வைக்கச் சொன்ன நேரத்தில், நான் எண்ணிப் பார்த்த போது, வண்டமரும் பூங்குழலி - என்ற அந்தப் பெயர் என் நினைவுக்கு வந்தது. அது தான் திருக்குவளையில் உள்ள அம்மன் பெயர். அது அம்மன் பெயர் என்பதற்காக அல்ல, அதிலே உள்ள தமிழ் பெயரைத்தான், இந்தப் பேத்திக்கு நான் வைத்தேன்.

அத்தகைய தமிழ் உணர்வு இன்றைக்குப் பட்டுப் போய் இருக்கின்ற இந்தக் காலக் கட்டத்தில் எல்லோரும் தமிழர்களாக, தமிழ் மொழிக்கு சிறப்பு செய்பவர்களாக, தமிழ் மொழியை வளர்ப்பவர்களாக மாறுவதற்கு இது போன்ற நிகழ்ச்சிகளிலே உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவமனையிலே நான் நாற்பது நாள் இருந்த போது - அதுவும் எனக்கொரு அனுபவம்தான். ஆனால் இந்த அனுபவம் வேறு யாருக்கும் வரக்கூடாது. முதுகுத் தண்டிலே உயிருக்கு உலை வைக்கக்கூடிய அளவிற்கு ஒரு நோய், என்னைப் பிடித்தாட்டி, சில நாட்கள் அலட்சியமாக இருந்த காரணத்தினால், பின்னர் தகுந்த சிகிச்சையைத் தவிர இதற்கு வேறு வழியில்லை என்ற நிலையில், நம்முடைய போரூரிலே இருக்கின்ற ராமச்சந்திரா மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை நிபுணர் அவர் தான் அந்தத் துறைக்கு தலைவராகவும் இருக்கிறார், டாக்டர் மார்த்தாண்டம். அவருடைய தலைமையில் 14 பேர் கொண்ட ஒரு மருத்துவக் குழு எனக்கு சிகிச்சை செய்து, ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் - ஏன் சில நேரங்களில் மாலை, சில நேரங்களில் காலை என்று இப்படியெல்லாம், பொழுதுகள் மாறி மாறி வந்தாலும், அந்த நேரத்திலே நான் தாங்கிக் கொள்ள முடியாத வலியால் துடித்திருக்கிறேன், துவண்டிருக்கிறேன்.

ஒரு நாள் இரவு 2 மணிக்கு பயங்கரமான வலி ஏற்பட்டு, மருத்துவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு, கண் கலங்கி நின்ற போது நான் புரிந்து கொண்டு, கட்சியின் தலைவருக்கெல்லாம் பேராசிரியர் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக வரச் சொல்லுங்கள், அவர்களையெல்லாம் நான் கடைசியாகப் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்ட பிறகு தான், வேறு வழி தெரியாமல் யோசித்து மார்த்தாண்டம், டாக்டர் தணிகாசலம் ஆகியோர் டெல்லியிலிருந்து அரவிந்த் ஜெய்ஸ்வால் என்ற ஒரு அருமையான எலும்பு சிகிச்சை மருத்துவரை அழைத்து வந்தார்கள். அவர் வந்து, எனக்கு சிகிச்சை அளித்து, சிகிச்சை முக்கியமல்ல - இந்தச் சிகிச்சைக்குப் பிறகு நீங்கள் எடுக்க வேண்டிய ஓய்வு தான் முக்கியம் என்று ஏறத்தாழ மூன்று மாத காலமாவது நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நானும் உங்களுடைய ஆதரவு இருக்குமென்ற எண்ணத்தோடு சம்மதித்திருக்கிறேன். இருந்தாலும் இடையிலே இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள வேண்டிய அவசியம் எத்தகையது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை நான் உங்களிடத்தில் முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.


No comments:

Post a Comment