கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 24, 2010

சமூகநீதி பயணத்தில் வெற்றி பெறுவோம்: கலைஞர்


முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடஒதுக்கீடு என்பதற்கு தமிழ்நாடுதான் அதற்கு விளைநிலம் நாற்றங்கால் தமிழ்நாட்டிலேதான் நீதிக்கட்சியினால் அதற்கு விதை ஊன்றப்பட்டு, பெரியாரால், அண்ணாவால், காமராஜரால் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பெரியாரும், அண்ணாவும் நடத்திய சமூகநீதிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியின் விளைவாகத்தான், காமராஜர் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் சமூகநீதிப் போராட்டத்தால் தமிழகம் பற்றி எரிவதை எடுத்துச் சொல்லி, அதன் பயனாகவே அரசியல் சட்டத்தில் முதல் திருத்தமே வருவதற்கான நிலை ஏற்பட்டது.

நம்முடைய எதிர்கால சந்ததி வாழ, வளம்பெற, நாடு வலிமை பெற, சமுதாயம் ஊக்கம் பெற, எத்தகைய முன்னேற்றங்களை கல்வித் துறையிலும், வேறு பல துறைகளிலும் நாம் பெற வேண்டுமென்று கருதுகிறோமோ, அதற்கெல்லாம் இடைழூறாக சமூகநீதிப் பாதையில் அவ்வப்போது ஏற்படுகின்ற பின்னடைவை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொடர்ந்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.


1996ம் ஆண்டு நான்காவது முறையாகத் தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, உறுப்பினர்கள் ஞானசேகரன், சுப்பராயன், தாமரைக்கனி, தீரன் ஆகியோர் இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து 16 8 1996 அன்று சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.

"இடஒதுக்கீட்டில் 1991 ம் ஆண்டு வரையிலே 69 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, பழங்குடி மக்களுக்கு என்று இருந்ததை அனைவரும் அறிவோம். அதற்குப் பிறகு வழக்கு ஒன்றின் காரணமாக 50 சதவிகிதம் என்ற நிலை உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பால் ஏற்பட்டபோது தமிழகத்திலே உள்ள எல்லாக் கட்சிகளும் குரல் கொடுத்ததன் காரணமாக, எல்லாக் கட்சிகளினுடைய ஒத்துழைப்போடு இந்தச் சட்டமன்றத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 69 சதவிகிதத்தை உறுதிப்படுத்துகின்ற வகையில், அந்தத் தீர்மானத்தின் அடிப்படையிலே ஒரு சட்டமும் இங்கே நிறைவேற்றப்பட்டது. எல்லோரும் அந்தத் தீர்மானம் போதுமானதல்ல, அந்தச் சட்டம் போதுமானதல்ல, இருந்தாலுங்கூட அந்தச் சட்டத்தை 9வது அட்டவணையிலே சேர்க்க வேண்டுமென்று குரல் கொடுத்தோம்.


அந்த நேரத்திலே நான் அகில இந்தியக் கட்சிகளினுடைய தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதி, "உங்களுடைய ஆதரவெல்லாம் தேவை, நீங்கள் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டினுடைய இந்தச் சட்டத்தை அங்கீகரித்து 9வது அட்டவணையிலே சேர்ப்பதற்கு துணை நிற்க வேண்டு''மென்று எழுதினேன். அந்தக் கடிதங்களுக்கு பெரும்பாலான தலைவர்கள் "நாங்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று கடிதங்கள் எழுதினார்கள்.

அந்தக் கடிதங்களுடைய நகல்களையெல்லாம் எடுத்து, அன்றைய மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, இதனை 9வது அட்டவணையிலே சேர்க்க உதவிட வேண்டுமென்று தி.மு.க. சார்பில் நானும் கேட்டுக் கொண்டேன். இதிலே அக்கறை உள்ள கட்சிகள் அனைத்தும், தங்களுடைய ஆவலை மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகு அரசியல் சட்டத்திலே சேர்க்கப்பட்டு 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டது.


அதுபோதுமானது அல்ல, அந்தந்த மாநிலங்களின் நிலைகளுக்கேற்ப இந்த இடஒதுக்கீட்டை அந்தந்த மாநில அரசுகளே நிர்ணயம் செய்து கொள்கின்ற அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டுமென்ற முறையில், அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தை கழகத்தின் சார்பில் நாங்கள் எடுத்து வைத்தோம். பா.ம.க. சார்பில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்திச் சொன்னார். ஆனால் அரசியல் சட்டத்திலே திருத்துவது என்றால் அதற்கு நாடாளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட வாக்குகள் தேவை என்கிற ஒரு நியதி இருக்கின்ற காரணத்தால் இப்போது அது முடியுமா இயலுமா என்பது பிரச்சினையாக இருக்கிறது. இருந்தாலும் அந்த முயற்சியிலே இந்த அரசு ஈடுபடும்.


கடந்த காலத்திலே இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டு, 9வது அட்டவணையிலும் சேர்க்கப்பட்ட சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது கடந்த அரசின் காலத்தில் அரசு வழக்கறிஞர்கள் நினைவூட்டவே தவறிவிட்ட காரணத்தினாலே, உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் அந்தத் தீர்ப்பிலே குறிப்பிட்டிருக்கிறார்கள். 9வது அட்டவணையிலே சேர்க்கப்பட்ட செய்தியையே கடந்தகால அரசில் வழக்கறிஞர்கள் எடுத்துச்சொல்லாத காரணத்தினாலே இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது.''


1996ம் ஆண்டு சட்டமன்றத்திலே நடைபெற்ற இந்த விவாதத்திற்குப் பிறகு 1997ம் ஆண்டு மார்ச் திங்கள் 15ம் நாள் அன்றைய பிரதமராக இருந்த தேவேகவுடாவுக்கு நான் எழுதிய கடிதத்தில்,


"வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அந்தந்த மாநிலங்களே தேவைகளுக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தியிருந்தேன்.


தமிழக முதலமைச்சர் பொறுப்பிலே 2006ம் ஆண்டு ஐந்தாவது முறையாக அமர்ந்த நான் அந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:


"அன்புள்ள முதல்வர் அவர்களுக்கு,


அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நான் எழுதியுள்ள கடிதத்தின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன். இக்கடிதத்தின் பொருள் தங்களுக்குப் புரியும். இக்கடிதம் கிடைத்தவுடன் அவர் உடனடி நடவடிக்கை எடுத்து என்னுடைய கடிதத்தில் கண்டுள்ள ஆலோசனைகளை மத்திய மனிதவள ஆற்றல் வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் ஒருசில தீர்ப்புகளால், இடஒதுக்கீடு முறைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

தற்பொழுது இந்தப் பிரச்சினை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் 31(பி) பிரிவின் படி 9வது அட்டவணையின்கீழ் இயற்றப்படும் சட்டங்கள் தாக்குதலுக்கு ஆளாக்கப்படவுள்ளன. எனவே இப்பிரச்சினை அவசர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால், தங்களது மாநிலம் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். இது சம்பந்தமாக தாங்கள் வரும் 30.10.2006 அன்று விசாரணைக்கு வரவுள்ள வழக்கில் தங்கள் மாநிலத்தையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ளலாம் என்பது எனது ஆலோசனையாகும். மத்திய அரசுக்கும் எம்.நாகராஜ் என்பவருக்கும் நடைபெற்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பில்,


"மேற்கூறிய காரணங்களால் அரசுக்கு தவிர்க்கமுடியாத காரணங்கள் இருந்தாலும் கூட இடஒதுக்கீடு அளவு என்பது, மிக அதிகமாகப் போகாததாகவும் 50 சதவிகித உச்சவரம்பை தாண்டிவிடாததாகவும் இருக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை விலக்காமல் இருக்கக் கூடாது; இடஒதுக்கீட்டை காலவரையறையின்றி நீட்டிப்பதாக இருக்கக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்திய அரசியல் சட்டத்தின் உணர்வுக்கு எதிரானது என்பது கண்கூடு. அரசியல் சட்டம் சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு மட்டுமே இடஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்துள்ளதேயொழிய எந்தவிதமான பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என வகை செய்யப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுகத்தடியின்கீழ் இருந்து வந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் இடஒதுக்கீடு மூலம் அளிக்கப்பட்டு வந்த ஏணி இழுத்து விடப்பட்டுள்ளதால், இந்த வகுப்பினருக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.


உச்சநீதிமன்றத்தின் முன்பு இந்த வழக்கில் மனுதாரராக மாறி இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் 13 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் பெஞ்சுக்கு அனுப்ப வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டிய தேவை மாநிலங்களுக்கு மிக அதிகமாக உள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த நெருக்கடியான வரலாற்றுரீதியான நேரத்தில் சமூகரீதியிலும், கல்விரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரது நலன்களைப் பாதுகாத்து, பேரழிவு பின்விளைவுகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவசர நடவடிக்கைகளை எடுக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.'' இவ்வாறு அந்தக் கடிதத்தில் நான் எழுதியிருந்தேன்.


இந்தக் கடிதத்திற்கு முன்பே 9 10 2006 அன்று சோனியா காந்திக்கு இடஒதுக்கீடு பிரச்சினையில் ஐந்து பக்கங்கள் கொண்ட விவரமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் பின்வரும் யோசனைகளை தெரிவித்திருந்தேன்.


அ) இடஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளின் கருத்துக்களை இந்திய அரசு கோரிப்பெற வேண்டும்.


ஆ) இடஒதுக்கீட்டுப் பிரச்சினை மட்டுமன்றி, 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள சட்டங்களைப் பற்றியும் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் எடுத்துக்கொள்ள இருக்கிறது. 9வது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எல்லாச் சட்டங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆகையால் இந்தப் பிரச்சினை குறித்தும் மாநில அரசுகளின் கருத்துகளைக் கண்டறிய மத்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டியது தேவையாகிறது.


இ) எல்லா மாநிலங்களிலும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள சிறப்பு நிலையை மத்திய அரசு தெரிந்து கொண்ட பிறகு இந்த வழக்கைப் பற்றிய வாதங்களை எடுத்துக் கொள்வது நல்லது. அப்பொழுது தான், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 முதல் 85 சதவிகிதம் வரையிலுள்ள சமுதாயப் பிரிவினரைப் பாதிக்கும் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு உரிய முறையில் எடுத்துச் சொல்ல இயலும்.


ஈ) மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் உச்சநீதிமன்றத்தின் முன்உள்ள இந்த வழக்குகளில் பங்கேற்காமல், பல கோடிக் கணக்கான மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைச் சரியாக முன் வைத்து வாதிட முடியாது.


உ) இப்பொழுது எழுந்துள்ள வழக்கை 13 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கலாம்.


ஆகையால் இந்த நெருக்கடியான கட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களையும் உரிமைகளையும் உறுதியாகவும், நல்ல முறையிலும் பாதுகாக்க எல்லாத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சோனியா காந்திக்கு எழுதியதோடு நிற்காமல் அனைத்து முதல் அமைச்சர்களுக்கும் இந்தக் கடிதத்தை இணைத்தும் அனுப்பினேன்.


ஏன் இன்னும் சொல்லப்போனால், தி.மு.க. சார்பில் தேர்தல் நேரத்தில் வைக்கப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இடஒதுக்கீடு குறித்தும், சமூகநீதி பற்றியும் நான் சொல்லாமல் விட்டதே கிடையாது. 1996ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், "எத்தனை சதவிகிதம் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும். கிரீமிலேயர் என்பது பொருளாதார அடிப்படையைக் கொண்ட தால் அந்த அளவுகோல் நீக்கப்பட்டு வருமான வசதி வித்தியாசமின்றி பின்தங்கிய சமூகத்தினர் அனைவருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும்; அரசியல் அமைப்புச் சட்டம் அதற்கேற்பத் திருத்தப்பட வேண்டுமென்றும்; தி.மு.க. வற்புறுத்தும்'' என்று சொல்லியிருக்கிறோம்.


2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே கூட, "இடஒதுக்கீட்டில் உள்ள வருமான உச்சவரம்பை நீக்குவதற்குரிய சட்டத்திருத்தங்களை கொண்டு வருவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டினை தடையின்றி செயல்படுத்த உச்சநீதிமன்ற வழக்கினை விரைவுபடுத்தி தகுந்த தீர்ப்பினைப் பெறுவதற்கு வழிவகை செய்வோம். எண்ணிக்கைக்கேற்ப இடஒதுக்கீடு அளவை அந்தந்த மாநிலங்களே மேற்கொள்வதற்குரிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்படவேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தோம்.


இவ்வாறு தொடர்ந்து 1920ம் ஆண்டு முதல் சமூகநீதிக்காக இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்து வந்ததின் பயனாகத்தான் கடந்த 13 7 2010 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சுதந்திர குமார் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் அளித்த தீர்ப்பு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.


உச்சநீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில்


"பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மொத்தமாக தமிழ்நாடு அரசு 69 விழுக்காடு இடஒதுக்கீடு தருவது மேலும் ஓராண்டிற்கு தொடரலாம்.


பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், புதிதாக இடஒதுக்கீட்டு அளவைப் பிற்படுத்தப்பட்டோருக்குப் பரிந்துரைக்கும். 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கும் அதிகமாக தர வேண்டும் என்று ஆணையம் கருதினால், மண்டல் ஆணைய (இந்திரா சாஹ்னி) வழக்கில், 1992ல் உச்சநீதிமன்றம் கூறிய அடிப்படைகளை கணக்கில் கொண்டு முடிவு தெரிவிக்க வேண்டும். அதாவது 50 விழுக்காடு எல்லையைத் தாண்டுவதென்றால் மாநிலத்தில் நிலவும் சிறப்புக் காரணங்களைக் கூறவேண்டும்''


என்று கூறப்பட்டுள்ள வாசகங்கள் பாலைவனத்தில் குடிநீர் கிடைக்காமல் வேகாத வெயிலில் சென்று கொண்டிருந்தவர்களுக்கு வழியிலே ஒரு சிறிய நீரூற்று தென்பட்டதைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கு அமைகிறது என்றால் மிகையல்ல. அதிலும் குறிப்பாக எத்தனையோ ஆண்டுகாலமாக இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காக உண்மையிலேயே பாடுபட்டுவரும் நமக்கு தேன் துளிகள் தேனருவியாகப் பெருகிட வேண்டுமென்ற ஆவல் ததும்புவதில் வியப்பில்லை அல்லவா? மாநிலத்தில் சிறப்புக் காரணங்கள் இருந்தால், அதனைத் தெரிவித்து 50 விழுக்காடு என்பதைத் தாண்டலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நாம் கேட்கின்ற மாநிலங்களுக்கு இடஒதுக்கீட்டு அதிகாரம் வேண்டும் என்ற நியாயத்தை உணர்ந்து சொல்லியிருப்பது போலத் தெரிகிறது.


இந்த வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் நாம் உரிமை கொண்டாடுவதற்கு ஆட்சியில் நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திராவிட இயக்கத்தின் சமூகநீதி கொள்கையை தொய்வில்லாமல் பாதுகாத்து நிறைவேற்றி வருகிறோம் என்பதற்கு நீதிமன்றங்களில் நாம் நடத்தி வந்துள்ள சட்டரீதியான சமூகநீதிப் போராட்டங்களும் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் பெரும் காரணங்கள் என்பது மாத்திரமல்ல; ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இந்தச் சமூகநீதியைப் பலமாகப் பாதுகாத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோரான வன்னியப் பெருமக்களும், சீர்மரபினர்களும் மற்றும் சில வகுப்பினரும்; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பட்டியலில் இணைக்கப்பட்டு, 20 விழுக்காடு எனப் பயன்பெறவும் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக இஸ்லாமியப் பெருமக்கள் 3.5 விழுக்காடு பெறவும் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக அருந்ததியப் பெருமக்கள் 3 விழுக்காடு பெறவும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் பழங்குடியின மக்களும் ஒட்டுமொத்தமாக 18 விழுக்காடு என்று பெற்றிருந்ததை மாற்றி, பழங்குடி இன மக்களுக்கென தனியே ஒரு விழுக்காடு என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே 18 விழுக்காடு என்றும் மாற்றியமைத்ததும் முன்னேறிய வகுப்பினர் பட்டியலிலே இருந்த கொங்கு வேளாளச் சமுதாயத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்ததும் சமூகநீதியில் இந்த இயக்கத்திற்கு உள்ள அக்கறைக்கான எடுத்துக்காட்டுகளாகவும் அதனால்தான் அண்மையில் வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பை தேன் துளிகளாகவும், இது தேனருவியாக மாறுகின்ற அளவுக்கு சமூகநீதிப் பயணத்தில் முழுமையான வெற்றியைப் பெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment